Saturday 8 December 2012

பிலோமியின் காதலர்கள்

உதயசங்கர்

VANNANILAVAN-7

கல்லூரிக்காலத்திலேயே எல்லாப்பையன்களையும் போல காதலைப் பற்றிப் பேச ஆரம்பித்து விட்டோம். பெண்கள் பார்க்காதபோது அவர்களை உற்றுப் பார்ப்பது, அவர்கள் பார்த்து விட்டால் உடனே பராக்கு பார்ப்பது, அதுவரை வராத விதர்ப்பமான எண்ணங்கள் பெண்களின் உடலைப் பார்க்கும்போது தோன்றியது. அப்போது குமுதம் பத்திரிகையில் ஜெயராஜின் ஓவியம் பாப்புலர். அந்தப் படங்களை அப்படியே நோட்டில் வரைவான் நாறும்பூநாதன். அவன் வரைந்த படத்தைப் பார்த்து சாரதியும் முத்துச்சாமியும் கூட வரைந்து பார்ப்பார்கள். எட்டரை மணிச் சினிமாக்களுக்கு அவர்கள் சேர்ந்து போவார்கள். எனக்கு இதிலெல்லாம் ஆர்வமில்லாதது போலக் காட்டிக் கொள்வேன். ஆனால் ரகசியமாய் பத்திரிகையில் வெளிவரும் நடிகைகளின் புகைப்படங்களைச் சேகரித்து வைத்திருந்தேன். நாங்கள் சந்திக்கும்போது இப்போது வெளிப்படையாகவே காதலைப் பற்றிப் பேச ஆரம்பித்தோம். எல்லோரும் காதலித்துத் தான் திருமணம் செய்வது என்று உறுதியெடுத்துக் கொண்டோம். ( ஆனால் அப்படி காதல் திருமணம் யாருக்கும் நடக்கவில்லை ). மணிக்கணக்காக எல்லாஇளைஞர்களையும் போல உன்னதமான காதலைப் பற்றிப் பேசித் தீர்த்தோம்.அவசர அவசரமாக எங்களுக்கு ஒரு காதலை வரவழைத்துக் கொண்டோம். ஒரு காதலியை வரித்துக் கொண்டோம்.

பொதுவாகவே நிறையப் பேசினோம். நிறைய விஷயங்களைப் பற்றிப் பேசினோம். அதுவே எங்களை இலக்கியத்தின் வழி மடைமாற்றியது என்று நினைக்கிறேன். கையெழுத்துப் பத்திரிகை வழியே புதிய பிரம்மாண்டமான அற்புதங்கள் நிறைந்த புத்தக உலகத்திற்குள் நுழைந்து விட்டோம். அந்த உலகத்துக்குள் என்னைத் தொலைத்து விடவே நான் ஆசைப்பட்டேன். என் இயல்புக்கு மிகவும் பொருத்தமான இடமாக இருந்தது. ஒவ்வொரு புத்தகத்தின் கதை உலகத்துக்குள்ளும் ஒன்றிரண்டு நாட்கள் வாழ்ந்து வந்தேன். அந்தக் கதாபாத்திரங்களோடு நான் புத்தகத்துக்குள் அலைந்து திரிந்தேன். அவர்கள் சிரிக்கும்போது சிரித்தேன். அழும்போது அழுதேன். அதில் கொலைச்செயல் நடக்கும் போது என்னைக் கொலை செய்வதாக நினைத்தேன். துரோகமிழைக்கப்படும் போது எனக்குத் துரோமிழைப்பதாக நம்பினேன். காதலிக்கும்போது நான் காதலிக்கப்படுவதாக நினைத்தேன்.

பெரும்பாலான இரவுகள் கொடுங்கனவுகள் என்னைச் சூழ்ந்திருக்க திடுக்கிட்டுக் கண்விழித்திருக்கிறேன். ஏதோ இனம் புரியாத தனிமையும் திடீர் திடீரென அநாதரவான ஒரு மனநிலையும் வந்து விடும். எப்போது வரும்? எப்படி வரும்? என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் ஆறுதல் வேண்டியிருந்தது. ஒண்ணுமில்ல..ஒண்ணுமில்ல என்று சொல்லும் ஆறுதல்.

நண்பர்களிடம் பேசிக் கொண்டிருப்பதில், புத்தகங்களை வாசிப்பதில் எனக்கு அந்த ஆறுதல் கிடைத்தது. அதிலும் சில புத்தகங்கள் நம்மை வேறு உலகத்திற்கே கொண்டு சென்றன. நம் அந்தரங்க உணர்ச்சிகளைத் தெரிந்து கொண்டதைப் போல ஆறுதல் அளித்தன. நம் தலைகோதி மடிசாய்த்து வருடிக் கொடுத்தன. அந்தப் புத்தகங்கள் வாசிப்பவனின் மீது அன்பு செலுத்தின. பேரன்பின் ஒரு துளியைச் சுவைக்கும் போது முகத்தில் தோன்றுமே ஒரு பரவசம் அந்தப் பரவசத்தைக் கண்டு தாய்மையின் பூரிப்போடு அமைதியாய் நம்மைப் பார்த்துக் கொண்டிருந்தன. அப்படிப்பட்ட புத்தகங்களை வாசித்து முடித்தபின்பு மனதில் ஒரு அமைதி தோன்றும். புறவுலகின் எந்த நிகழ்வுகளும் பாதிக்கமுடியாத ஒரு அமைதி. அந்த அமைதியின் கீழ் நீர்மையாய் மனம் ததும்பிக் கொண்டிருக்கும். பற்றியும் பற்றற்றும் இருக்கும் ஒரு விழிப்பு நிலை. பார்க்கும் மனிதர்களின்மீது, பொருட்களின்மீது அன்பு மீதூறும் இன்பநிலை.

நாங்கள் இவான் துர்கனேவின் மூன்று காதல் கதைகள், செகாவின் நாய்க்காரச்சீமாட்டி, தால்ஸ்தோயின் அன்னாகரினினா, சிங்கிஸ் ஐத்மாத்தவின் ஜமீலா, வாசித்தோம். தி.ஜானகிராமனின் மோகமுள், வாசித்தோம். வண்ணநிலவனின் கடல் புரத்தில் வாசித்தோம். ஏற்கனவே வண்ணநிலவனின் எஸ்தரும், பாம்பும் பிடாரனும், எங்கள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டன. கடல் புரத்தில் எங்களுடைய அப்போதைய காதல்பொங்கும் மனநிலையில் எங்களுடைய வேதப்புத்தகமாக மாறியிருந்தது. அதைப் படித்த பிறகு அதைப்பற்றியும், வண்ணநிலவனைப் பற்றியும் பேசாத நாட்களே கிடையாது. பிலோமி எங்கள் பிரியத்துக்குரியவளாகி விட்டாள். பிலோமி மாதிரி ஒரு பெண் எங்களைக் காதலிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். கருத்த, சிறிய, உதடுகளையுடைய மிகக் கருப்பான அந்தப் பறைச்சி எங்கள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டாள். கடல்புரத்தில் நாவலில் வரும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும், அலசி ஆராய்ந்தோம். அந்த நாவலைப் படித்த ஒரு மாதத்திற்கு எந்த டாப்பிக்கைப் பற்றிப் பேசினாலும் அது கடல்புரத்தில் நாவலிலும், பிலோமியிலும் வந்து முடிந்தது. மனிதர்களிடம் உள்ள அன்பு என்ற வஸ்துவின் மூலம் இந்த வாழ்க்கையை, சக மனிதர்களை, துரோகத்தை, வஞ்சத்தை, பழியுணர்ச்சியை, பேராசையை, பகையை, வெற்றி கொள்ள முனையும் முயற்சியே இந்த நாவல். எல்லோருமே நல்லவர்கள் தான். எவ்வளவு கொடிய மனிதனிடமும் அன்பு எனும் ஊற்று சுரந்து கொண்டுதானிருக்கும். அவன் தன் மீது மட்டுமோ, தன் குடும்பத்தார் மீது மட்டுமோ, தனக்கு வேண்டியவர்கள் மீது மட்டுமோ அன்பு செலுத்துகிறார்கள். அது பிரதிபலன் எதிர்பார்த்து செலுத்துகிற அன்பு. அன்பான ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் நீயும் இதைப் போல செய்யவேண்டும் என்று கண்டிஷனோடு வருகிற அன்பு. உலகத்தில் உள்ள எல்லோரும் அன்பின் பிரம்மாண்டத்தை உணர்ந்தவர்களில்லை. வாழ்வில் ஏதோ ஒரு கணத்தில் பரிசுத்தமான அன்பின் தரிசனத்தை உணர்கிறார்கள். அந்த அன்பின் ஒளியை யாராலும் தாங்கமுடிவதில்லை. அது எல்லாவற்றையும் கொடுப்பது. எதையும் எதிர்பாராமல் தன் உடல்,பொருள், அனைத்தையும் கொடுப்பது. தன்னை, தன் குடும்பத்தை, தன் உற்றாரை, அல்ல இந்த உலகத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் தன் கருணைபொங்கும் ஒளியின் அரவணைப்பால் அணைத்துக் கொள்வது. அதற்கு ஒரு மகத்தான மனது வேண்டியதிருக்கிறது. அந்த மகத்துவத்தின் ஒரு துளியை பிலோமி தன் வாழ்வில் தரிசித்து விட்டாள் என்று தோன்றியது.

அதனால் தான் தன்னைப் பயன்படுத்திக் கொண்ட காதலன் சாமிதாஸின் மீதோ, தன்னை எப்போதும் கண்டித்துக்கொண்டேயிருக்கும் அம்மா மரியம்மை மீதோ, தன் வல்லம் தவிர வேறு எதைப்பற்றியும் கவலைப்படாத அப்பா குருசு மிக்கேல் மீதோ, பேராசை கொண்ட தன் அண்ணன் செபஸ்தி மீதோ, தன் அம்மாவின் சிநேகிதர் வாத்தி மீதோ, தன்னைக் கொத்திக் கொண்டு போகத்துடிக்கும் ஐசக் மீதோ, வல்லத்துக்குப் பணம் தராமல் ஏமாற்றிய சிலுவை மீதோ, யார் மீதும் அவளுக்குக் கோபம் வருவதில்லை. அவளுக்கு அம்மாவின் சிநேகிதராக இருந்து இப்போது அவளுக்கும் சிநேகிதராக மாறிவிட்ட வாத்தி போதும், அவளுடைய சிநேகிதி ரஞ்சி போதும். அவள் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தாலே எல்லாம் சொஸ்தமாகி விடும். இந்த உலகமே வேறொன்றாக மாறி விடும். உன்னதமான அன்பின் கரங்களால் இந்த உலகை அப்படியே ஆவிச் சேர்த்து அணைக்கத் தோன்றும். பாவம் மனிதர்கள்!

பேரன்பின் ஒளி எங்கும் எப்போதும் இருக்கிறது. அதை உணராத மனிதர்கள் தான் பகை கொள்கிறார்கள், வஞ்சிக்கிறார்கள், கொலை செய்கிறார்கள், பேராசைப் படுகிறார்கள், பழியுணர்ச்சியால் அலைக்கழிக்கப்படுகிறார்கள். கடல்புரத்தில் நாவல் படித்தவுடன் எங்களுக்கு இந்த உலகமே மென்மையானதாக மாறிவிட்டது. தொட்டால் கூட நொந்து விடுமோ என்று பயந்தோம். மழை பெய்து முடித்த மறுநாளில் எல்லாம் புத்தம்புதிதாய் பளிச்சென்று தெரியுமே அப்படித் தெரிந்தது இந்த உலகம். வண்ணநிலவன் நாவலுக்கான என்னுரையில் அன்புவழி மாதிரி ஒரு நாவலை தன் வாழ்நாளில் எழுதிவிட வேண்டும் என்று ஆசைப்படுவதாக எழுதியிருப்பார். நாங்கள் இந்த நாவலைப் படித்து முடித்தவுடன் கடல்புரத்தில் மாதிரி ஒரு நாவலை எழுதிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டோம். ஆசைப்பட்டுக் கொண்டேயிருக்கிறோம். இத்தகையதொரு மகத்தான நாவலை எழுதிய படைப்பாளியைச் சந்தித்து அளாவளாவ ஆசைப்பட்டோம். அவருடைய கைகளைத் தொட்டுக் கும்பிட விரும்பினோம். ஆனால் அப்போது வண்ணநிலவன் சென்னையில் துக்ளக் பத்திரிகையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் எங்களுடைய அதிர்ஷ்டம் 1983 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன், திருச்செந்தூர் கோவில் கொலை வழக்கு சம்பந்தமாக கலைஞர் கருணாநிதி திருச்செந்தூருக்கு நடைப்பயணம் மேற்கொண்டிருந்தார். அந்த நடைப்பயணத்தைக் கவர் செய்வதற்காக வண்ணநிலவன் கோவில்பட்டி வந்திருந்தார். ஒரு விடுதியில் தங்கியிருந்த அவருடனேயே எப்போதும் யாராவது ஒருத்தரோ அல்லது அதற்கு மேற்பட்டவர்களோ இருந்து கொண்டிருப்போம். அவரைத் தனியாக விட்டதாகவோ, ஓய்வெடுக்க விட்டதாகவோ நினைவில்லை. மெலிந்த அவருடைய உடம்பு, நீண்ட விரல்கள், பேசுகிற பேச்சில் இருந்த அந்நியோன்யம், எல்லாமும் சேர்ந்து எல்லோரையும் மந்திரத்தால் கட்டிப்போட்டிருந்தது. நான் அவருடனே நடைப்பயணத்தில் ஒரு நாளோ, இரண்டு நாளோ போய் வந்தேன். அப்போது செம்மலரில் வெளியாகியிருந்த என்னுடைய உறவு என்ற சிறுகதையை அவரிடம் வாசிக்கக் கொடுத்தேன். படித்து விட்டு ” அப்படியே நான் எழுதின கதை மாதிரி இருக்கிறது” என்று பாராட்டினார். எனக்குத் தலைகால் புரியவில்லை. நான் அப்போது ஒரு நாலைந்து கதைகள் தான் எழுதியிருப்பேன். அவர் தமிழின் முன்னணி எழுத்தாளர். அவர் வாயால் எனக்குக் கிடைத்த பாராட்டினால் அந்த மாதம் முழுவதும் வாயெல்லாம் பல்லாக மற்ற நண்பர்கள் முன்னால் தலையைத் தூக்கிக் கொண்டு திரிந்தேன்.

வேலை தேடும் காண்டம் சென்னை வரை நீண்ட போது அங்கும் வீடு தேடிச் சென்று வண்ணநிலவனைச் சந்தித்தேன். அது தான் கடைசியாக நான் வண்ணநிலவனைச் சந்தித்தது என்று நினைக்கிறேன். ஆனால் கடல்புரத்தில் நாவல் என்னுடன் எப்போதும் இருந்தது. எப்போது இலக்கியம் பற்றிப் பேசினாலும் கடல்புரத்தில் பற்றிய பேச்சு வராமலிருக்காது. பிலோமியின் நினைவு வராமலிருக்காது. நான் பிலோமியின் காதலனாக இருந்த காலம் கண்ணில் ஆடும். நான் சாமிதாஸை வெறுத்தேன். ஏனெனில் நானே சாமிதாஸாக இருந்தேன். பிலோமியின் அன்பின் மழையில் நனையக் கொடுத்து வைக்காத பாவி சாமிதாஸ் என்று நினைத்தேன். அதோ அலை வீசிக் கொண்டிருக்கும் கடல்கரையில் காற்றில் தன் சேலை முந்தானை படபடக்க நின்று கொண்டு எதிரே விரிந்து கிடக்கும் கடலம்மையை வெறித்துப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள் பிலோமி. அவள் கண்களில் ததும்பி வழியும் சாந்தம் கடலின் ஆக்ரோஷத்தைக் குறைக்கிறது. நான் அந்த மணல்வெளியில் பிலோமியை நோக்கி நடந்து போய்க்கொண்டிருக்கிறேன்.. போகப் போகத் தொலையாத தூரமாக மணல் விரிந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் பிலோமியின் அருகாமையில் போக முடியவில்லை. பிலோமியின் கருத்த உடல் ஒளி வீசுகிறது. அது அன்பின் ஒளி. நேசத்தின் ஒளி. என் இளமைக்காலக் காதலியான பிலோமியின் ஒளி… பிலோமி… எங்கள் ப்ரியத்துக்குரிய பிலோமி! எங்கள் வணக்கத்துக்குரிய வண்ணநிலவன்!

நன்றி- சொல்வனம் இணைய இதழ்

2 comments:

  1. திரு உதயசங்கர் அவர்களின் "பிலோமியின் காதலர்கள்" கட்டுரை. அவரது கல்லூரிப்பருவம், இளமைக்கால மனஓட்டம், திரு வண்ண நிலவனுடான நட்பு பற்றி அருமையான பதிவு. படித்துப் பாருங்கள் நண்பர்களே, அற்புதமாக இருக்கிறது.
    எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி திரு உதயசங்கர்.
    (ஸ்ரீவில்லிபுத்தூரில் நாங்கள் இருக்கிறோம். உங்களை எங்கள் விருந்தினராக குடும்பத்துடன் அழைக்கிறோம்).

    ReplyDelete
  2. Very nice, I start to read kadal purathill but incomplete, afterward your article , I would read about pilomi.

    ReplyDelete