Thursday 29 March 2012

கடைசிச் சொட்டு மதுவின் பாடல்

stock-photo-green-wine-bottle-with-drop-isolated-on-white-ground-91638920 நீலநிற இரவின் நிழற்படத்தில்
காலியான மதுக்குப்பியின்
கடைசிச் சொட்டு இசைப் பேரருவியென
தனிமைப் பாடலைப் பாடத் தொடங்கியது
மதுவின் காரலுடன் செருமலை அனுப்பி
மதுத் துளியின் சிகரத்தில்
ஏறி நின்று போருக்கழைத்தான்
மணிகண்டன்.
“ அடச் சீ சும்மா கிட சவமே”
என்றே மாரியப்பன் துப்பிய
எச்சிலில் சிரித்த காமம்
மனைவியை அழைக்க
வீட்டைத் தேடி ஊர் ஊராய் அலைந்தான்.
எப்போதும்
வீட்டை முதுகில் சுமந்த கந்தசாமி
கண்ணீர்த் துளி நக்கியே போதையேறிப்
புலம்பலின் படிக்கட்டில்
படுத்துருண்டு கொண்டிருந்தான்
முத்துச்சாமி கைவிட்ட காதலியைக்
கொலை செய்யும் திட்டத்திற்கு
கூட்டாளியாக்கினான் மதுவை.
எல்லோருக்கும் முன்னால்
அம்மணத்தைச் சுழற்றி
ஆட விட்ட நாகு
அவ்வப்போது வைதான்
யாரையென்று தெரியவில்லை
அறைக்குள்ளே நமுட்டுச் சிரிப்புடன்
மூடிய பைக்குள் முக்காடிட்டபடி
வந்த இருள்
மெல்லப் பிரிந்தது ஒவ்வொன்றாய்
தெருவெங்கும் உழுதபடி
காலியான மதுக்குப்பியில்
கடைசிச்சொட்டின் இசைக்கோர்வை
இருக்குமென
இரவு மட்டும் விடியாமல்
காத்திருந்தது
அருகில் பகலை வரவிடாமல்
விரட்டியபடி.

1 comment:

  1. வருக வருக உதயா!
    வலை உலகில் வரவேற்கிறேன்.
    சகாக்களில் இணைப்புத் தந்ததைப் பார்த்து மகிழ்ந்தேன்.எனது வலையிலும் சேர்த்துவிடுகிறேன்.
    ராட்சஷன் திரும்பி வராமல் ஓடிப்போன அந்த கவிதைரகசியம் பற்றிய கவிதையை முழுசாகப் பாக்க ஆசை -இது இந்த நேயன் விருப்பம்
    நா.முத்துநிலவன்

    ReplyDelete