Friday, 12 June 2026

விவசாயம் கண்டுபிடிக்கப்பட்ட து.

 

தத்துவம் அறிவோம் 14

விவசாயம் கண்டுபிடிக்கப்பட்டது.

உதயசங்கர்



வேட்டைச்சமூகமாக வாழ்ந்த மனிதர்கள் ஒரே இடத்தில் நிலையாக இருக்க முடியவில்லை. உணவுக்காக ஒவ்வொரு இடமாக அலைந்தனர். கால மாற்றங்களுக்கு ஏற்ப இடங்களை மாற்றிக் கொண்டிருந்தனர்.

அப்படி மாறும்போது அங்கே ஏற்கனவே இருந்த மனித இனத்துடன் சண்டை போட்டார்கள்.

சில சமயம் வெற்றி பெற்றார்கள்.

சில சமயம் தோல்வியடைந்தார்கள்.

வெற்றி பெற்ற போது அந்தக் கூட்ட த்தில் இருந்த ஆண்களைக் கொன்றார்கள். பெண்களைச் சேர்த்துக் கொண்டார்கள்.

தோலிவியடைந்த போது தங்கள் கூட்டத்தையே இழந்தார்கள்.

அபூர்வமாக நட்பாகவும் இணைந்து வாழ்ந்தார்கள்.

இதனால் மிக நிகழ்ந்த முக்கியமான மாற்றம் என்பது புதிய மனிதக்கலப்பினங்கள் தோன்றின. நியாண்டர்தாலும் டேனிசோவனும் இணைந்த ஒரு மனித இனம் தோன்றியது.

ஹோமோசேப்பியன்ஸும் நியாண்டர்தாலும் சேர்ந்த மனித இனம் தோன்றியது.

ஏனெனில் அப்போது ஹோமோ சேப்பியன்ஸுக்கும் முன்னும் பின்னுமாக ஒன்பது வகையான மனித இனங்கள் இருந்தன.

ஹோமோ எரக்டஸ்

ஹோமோ ஹாபிலஸ்

ஹோமோ ருடால்பென்சிஸ்

ஹோமோ ஃப்லோசியன்ஸ்

ஹோமோ நியாண்டர் தால்

ஹோமோ டேனிசோவன்ஸ்

ஹோமோ ஆஸ்டிரோபிதிகலஸ்

ஹோமோ ஆண்டெஸ்ஸர்

ஹோமோ நாலெடி

இப்படி பல ஹோமோக்கள் வாழ்ந்தனர். தமிழ்நாட்டில் கூட 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் ஹோமோ எரக்டஸ் என்ற மனித இனம் வாழ்ந்திருக்கிறது. கற்கோடாரிகளைக் கண்டுபிடித்து உற்பத்திச் செய்திருக்கிறார்கள்.

சென்னை அருகே சித்திரப்பாக்கத்தில் நடந்த அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் இப்போது பூமியில் வாழ்கிற ஒரே ஒரு இனமாக ஹோமோசேப்பியன்ஸ் மட்டுமே இருக்கிறோம். மற்ற இனங்கள் பல்வேறு காரணங்களால் அழிந்து விட்டன. அறிவியலறிஞர் டார்வின் தன்னுடைய பரிணாமக்கோட்பாட்டில் மிக முக்கியமான கண்டுபிடிப்பாக சொல்வது “ SURVIVAL OF THE FITTEST “ அதாவது சூழ்நிலைக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் உயிர்கள் வாழும் அல்லது தகுதியானது பிழைக்கும் .என்பது தான்.

ஹோமோ சேப்பியன்ஸ் மட்டுமே அப்படி சூழ்நிலைக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக் கொண்டார்கள். ஆனால் அதே நேரம் இப்போது உலகம் முழுவதுமிருக்கும் நாம் ஹோமோசேப்பியன்ஸ் சுத்தமான, தனியான இனமில்லை.

அப்படி என்றால்?

இதுவரை வாழ்ந்த பல மனித இனங்களின் கலவை தான் நாம்.

எப்படி?

சமீபத்தில் நடந்த மரபணு ஆராய்ச்சியில் ஹோமோசேப்பியன்ஸின் மரபணுவில் நியாண்டர் தால் மனிதனின் மரபணுவும், டேனிசோவன்ஸின் மரபணுவும் குறிப்பிட த்தக்க அளவில் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். 

இதிலிருந்து தெரிவது என்ன? 

எந்த இனமாக இருந்தாலும் சுத்தமான இனம் என்று யாரும் கிடையாது.

எல்லோருமே கலப்பினம் தான். இதைத் தான் அறிவியல் சொல்கிறது.

அதனால் என்ன?

நம் ஒவ்வொருவரின் மரபணுவிலும் உலகமுழுவதுமுள்ள மனிதர்களின் மரபணு கலந்து நாம் உலக மனிதர்கள் என்று முழக்கமிடுகிறது. 

நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என்று சொல்கிறது.

என்ன சரியா?

வேட்டைச் சமூகத்தில் இருந்து விவசாய சமூகமாக எப்போது மனிதகுலம் மாறியது?

மனிதன் தோன்றி இரண்டரை லட்சம் ஆண்டுகளானாலும் விவசாயம் எப்போது 

கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?

இப்போது தான்.

சுமார் 10000 ஆண்டுகளுக்கு முன்பு தான்.

அதற்கு முக்கியக் காரணம் யார் தெரியுமா?

பெண்கள் தான்..

என்னது பெண்களா என்று ஆச்சரியம் வருகிறதா? 

உணவுத்தேடலின் போது காடுகளில் வளர்ந்த புல் வகைகள் உதிர்த்த தானியங்களை சேகரித்தவர்கள் பெண்கள்.

சேகரித்த அந்தத் தானியங்கள் ஈரப்பதம் இருந்தால் முளைப்பதைக் கண்டுபிடித்தவர்கள் பெண்கள்.

பின்பு அதை தரையில் ஊன்றி அதன் வளர்ச்சியைப் பேணியவர்கள் பெண்கள். வளர்ந்து பூப்பூத்து காய்காய்த்து கதிராகித் தானியங்களைத் தரும்வரை ஒவ்வொரு செயலையும் பார்த்தவர்கள் பெண்கள்.

பிறகுதான் தானாக முளைத்த நெல், கோதுமை, சாமை, வரகு, தினை, பார்லி போன்ற தானியங்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் பாத்தி கட்டி விதைத்தார்கள்.

அந்த விதைகள் வளர்ந்து மீண்டும் தானியங்கள் தரும்வரை அந்த இடத்திலேயே இருந்தார்கள். அந்தத் தானியங்கள் அவர்களுடைய உணவைத் தேடி அலையும் அலைச்சலைக் குறைத்தது.

தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட தானிய விளைச்சல் பிறகு திட்டமிட்டதாக மாறியது.

விவசாயம் பிறந்தது.

 

( அறிவோம் தெளிவோம் )

நன்றி - இயல் மின்னிதழ்

 

No comments:

Post a Comment