மின்மினிப்பூச்சிகளாக ஒளிரும் கதைகள் - என்றுமுள இசை
சளைக்காமல் தொடர்ந்து எழுத்துப் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கும் உதயசங்கரின் சமீபத்திய குறுகுறுங்கதை நூல் “என்றுமுள இசை”. சின்னஞ்சிறு மின்மினிக் கதைகளாக 49 கதைகள். செம்மலர், சிறுகதை காலாண்டிதழ் போன்ற இதழ்களில் அவ்வப்போது வெளிவந்தவை. செவ்வியல் பதிப்பகம், மருத்துவர் உ. நவீனாவின் பொருத்தமான சிற்றோவியங்களோடு வெளியிட்டிருக்கிறது.
கையடக்கக் குறுநூல்.
வழக்கமாகச் சொல்வதுதான் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல, சின்னஞ்சிறு கதைகள் வழியாக, மின்மினிப் பூச்சிகளின் ஒளிர்தல் போல அவை வரலாறு, தத்துவம், மனோவியல், இயற்கை எனச் சகல திசைகளிலும் ஒளித் துகள்களை வீசுகின்றன.
காந்தி, பகத்சிங், சேகுவேரா, நிறவெறியை எதிர்த்துப் போராடித் தூக்கிலிடப்பட்ட கவிஞன் பெஞ்சமின் மொலாய்ஸ், சிலிக் குயில் பாப்லோ நெரூதா என வரலாற்று நாயகர்கள் சின்னஞ்சிறு பத்திகள் கொண்ட கதைகளின் வழியாகப் புத்துயிர் பெறுகிறார்கள்.
அழியாச் சித்திரமாக வாசக நெஞ்சங்களில் நிறைகிறார்கள்.
கவிதைக்கும், கதை நடைக்கும் இடையில் இத்தகைய குறுங்கதைகள் நடக்கின்றன. ஆதியில் நீர்வாழ் மீன், தன் துடுப்புகளைக் கால்களாக்கித் தரையில் நடக்கத் தொடங்கிய காலத்தின் இடைநிலை போல இந்தக் கதைகளின் வடிவங்கள் அமைந்துள்ளன.
“பார்வை” என்றொரு கதை:
“அவள் என்னை மட்டுமே பார்ப்பதாக நினைத்தேன்.
காதலிப்பதாக நம்பினேன்.
நான் தான் அவளுடைய உலகமென்று கருதினேன்.
அவள் இந்த உலகம் பெரியது என்றாள்.”
இவ்வளவுதான் கதை. குருவுக்கும் சீடனுக்கும் இடையில் நடக்கும் உரையாடல் வடிவத்திலான ஜென் கதைகள் இத்தகைய கதைகளுக்கான மூல ஊற்றுகள். மக்கள் வழக்காறுகளிலும் இதுபோன்ற குறுங்கதைகள் ஏராளமுண்டு.
சமயத்தில் இத்தகைய கதைகள், ஒரு பெருங்கதையின் இடைப் பகுதியில் இருந்து உருவப்பட்ட பத்திகள் போன்ற வடிவத்தையும் அடையும் அபாயமுண்டு. புதுக்கவிதை என்பதை மடக்கி மடக்கி எழுதும் வசனமாகவும் ஹைக்கூ கவிதைகளை மூன்று வரியில் எழுதப்படும் எதாகிலுமான வார்த்தைகளாகவும் புரிந்து கொள்ளப்பட்ட அபாயம் போல.
- ஸ்ரீரசா
வெளியீடு: செவ்வியல் பதிப்பகம்,
57/83, இந்திரா நகர், மரக்காணம் சாலை,
திண்டிவனம் – 604001.
தொடர்புக்கு - 9488406868
நன்றி - செம்மலர்

No comments:
Post a Comment