தெறிப்புகளின் கலை
உதயசங்கர்.
வாழ்வின் கணங்களின் பின்னத்தில் மின்னி
மறையும் தெறிப்புகளின் கலை தான் குறுங்கதைகளென்று நம்புகிறேன். மின்னல்
ஒளியில் தரிசனமாகும் முழுச்சித்திரமும் அதன் முரண்களுடன் வெளிப்பட்டு மறைந்து விடுகிறது.
அந்தச் சித்திரம் கோட்டுச்சித்திரமாக இருக்கலாம். நீர்வண்ண ஓவியமாக இருக்கலாம். தைலவண்ணத்தில் பழைய வாசனையுடன்
இருக்கலாம். துடிப்பான வண்ணங்களுடன் நம்மைக் கொலை செய்யத் துணிந்தவையாக
இருக்கலாம். தேய்ந்த வண்ணங்களின் அழுகையாக இருக்கலாம்.
இன்னும் முதிராத கன்னியின் முதிராமோகமாக இருக்கலாம். யாசகம் கேட்கும் தொனியில் இருக்கலாம். குழந்தையின் அழுகுரலாகவோ,
கொஞ்சும் சிரிப்பொலியாகவோ இருக்கலாம்.
கவிதைக்கு நெருக்கமாக, புதிர்வழியின்
வாசலாக, விடுகதையின் பகிடியாக, ஜென் தியானமாக,
ஒரு கை கடலாக, பலூனில் சிறைப்பட்ட காற்றாக,
இரு கை கூட்டுக்குள் ஒளிரும் சுடராக, வரலாற்றின்
நினைவாக, வாழ்வின் முரணை உணர்த்தும் எறும்பின் கடியாக இருக்கும்
குறுங்கதைகள் உங்களுக்கு வேறொன்றாகவும் அனுபவம் தரலாம்.
சாத்தியங்களின் அசாத்தியங்களை எழுதிப்பார்க்கும்
துடிப்பே இந்தக் கதைகள். ஏற்கனவே நூல்வனம் வெளியீடாக வெளியான அசைவற்று
மிதக்கும் நிழல் என்று குறுங்கதைகளுக்குக் கிடைத்த நேர்மறை கருத்துகள் கொடுத்த உத்வேகம்
பல பரிசோதனைகளுக்கு வழிநடத்தியது.
உலகமுழுவதும் குறுங்கதைகளும் நுண்கதைகளும்
காலம் காலமாக எழுதப்பட்டுக் கொண்டிருந்தாலும் சமீபகாலமாகவே தமிழில் இதற்கு ஒரு இடம்
கிடைத்திருக்கிறது.
என்றுமுள இசை குறுங்கதைகள் தொகுப்பு உங்களுக்கு
வேறுபட்ட இலக்கிய அனுபவத்தைக் கொடுக்குமென்று நம்புகிறேன்.
இந்தத் தொகுப்பினை பலமுறை வாசித்துத்
தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட தோழர்.கமலாலயன், தோழர்.கண்ணன் எழுத்தாளர்.சரிதாஜோ,
ஆகியோருக்கும் இந்தத் தொகுப்பிலுள்ள சில கதைகளை வெளியிட்ட செம்மலர்,
சிறுகதை காலாண்டிதழ், பத்திரிகைகளுக்கும் நன்றி.
இந்தத் தொகுப்பில் கோட்டோவியங்களை வரைந்து கொடுத்த என்னுடைய அன்பு மகள்
மருத்துவர்.உ.நவீனாவுக்கு அன்பு.
நூலை அழகாக வடிவமைப்பு செய்யும் தோழர். லார்க்
பாஸ்கரனுக்கும் இயல் பதிப்பகத்துக்கும் என் மனம் நிறைந்த நன்றி.
மின்னலின் ஒளிக்கோட்டில் உங்களை ஒரு கணம்
முழுதாய் காணுங்கள்.
வெளியீடு - செவ்வியல் பதிப்பகம்
தொடர்புக்கு - 9488406868

No comments:
Post a Comment