1.
ஏன் சிறார் இலக்கியம் வாசிக்க வேண்டும்?
uu உதயசங்கர்
u
குழந்தைகளுக்கான இலக்கியத்தின் மீது பொதுவாகச்
சில கருத்துகள் தமிழ் அறிவுச்சமூகத்தில் நிலவுகின்றன. முதலாவதாக அது
எளிமையானது அல்லது எளிமையாகச் சொல்லப்படுவது, அடுத்தது குழந்தைகளை அன்றாட வாழ்க்கைக்குப்
பயிற்றுவிப்பது, மூன்றாவதாக
இயற்கையை, உலகத்தை, சமூகத்தை
அறிமுகப்படுத்துவது, நான்காவதாக
அவர்களுக்கு அறநெறி/நன்னெறி/ நீதிநெறி/விழுமியங்கள்
ஆகியவற்றைப் போதிப்பது ஐந்தாவதாக குழந்தை இலக்கியத்துக்கு மெனக்கிடல் தேவையில்லை.
இப்படியும் இன்னும் பலவிதமான கருத்துகள்
நிலவுகின்றன. இந்தக்
கருத்துகள் குழந்தைகள் இலக்கியத்தை தாழ்வாகப் பார்க்கிறதும் ஒருவகையில்
அறிவுச்சமூகத்தின் முக்கியமான போக்குகளிலிருந்து ஓரங்கட்டப்படுவதும், குழந்தைகள்
இலக்கியத்தின் மீது தீண்டாமையைப் பிரயோகிப்பதும் நடந்து கொண்டிருக்கிறது. இப்படிப்
பாராமுகமாக இருப்பதனால் பாதிக்கப்படுவது நம்முடைய குழந்தைகள் தானென்பதை மிக எளிதாக
மறந்து விடுகிறோம். ஏனெனில்
சிறார் இலக்கியம் என்பது ஒரு குழந்தையின் ஆளுமை வளர்ச்சியில் பெரும்பங்கு
வகிக்கிறது. அப்படியென்றால்
முதலில் கவலைப்பட வேண்டியது குழந்தை இலக்கியம் பற்றியல்லவா?
சிறார் இலக்கியத்தின் அவசியம்
குழந்தைகள் புத்தகங்களை வாசிப்பதன் மூலம் தான்
இந்த உலகத்தை அறிந்து கொள்கிறார்கள். தாங்கள் புலனுணர்வால் உணர்ந்த உலகத்துக்கும்
யதாரத்தமான உலகத்துக்குமிடையிலான உறவையும் முரணையும் உணர்ந்து கொள்கிறார்கள். அதன் வழியே
உண்மையைத் தேடும் பயணத்தைத் தொடங்குகிறார்கள்.
குழந்தைகளின் உணர்வுகளில் கிளர்ச்சியைத்
தூண்டுவதன் மூலம் கற்பனைத்திறனை சிறார் இலக்கியம் வளர்க்கிறது. அந்தக்
கற்பனைத்திறன் அவர்களுடைய சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கிறது.
ஒரு நிகழ்வை, ஒரு அனுபவத்தை
ஒருங்கிணைக்க சிந்திக்கும் ஆற்றல் உதவுவதின் மூலம் பகுதி உண்மையிலிருந்து முழு
உண்மையை நோக்கி குழந்தையின் சிந்தனைத்திறன் பயணம் செய்கிறது.
சிறார் இலக்கியம் வாசிப்பதின் வழியே குழந்தைகள்
பல்வேறு அனுபவங்களை கற்பனையாக அனுபவிக்கிறார்கள். கோபம், ஆத்திரம், அழுகை, சாகசம், தேடல், தீரம், குற்றம், தண்டனை, அன்பு, துணிச்சல், தைரியம் போன்ற
அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் உணர்ந்திராத பல்வேறு உணர்வுகளை அனுபவிக்கிறார்கள். அந்த
உணர்வுகள் அவர்களுடைய மனதிற்குப் பயிற்சியாக அமைகிறது. அதாவது
உண்மையாக அனுபவித்திராத கற்பனை அனுபவங்களின் நிழலுணர்வுகள் அவர்களிடம் ஒரு
உணர்வுச்சமதளத்தை உருவாக்குகிறது.
சிறார் நூல்களிலுள்ள ஏற்ற இறக்கமான கற்பனை
அனுபவங்கள் வெற்றியோ தோல்வியோ எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும்
அதிலிருந்து மீண்டு மறுபடியும் முன்னேறிச் செல்லும் தைரியத்தையும் கொடுக்கிறது. எனவே
புத்தகங்கள் அவர்களுடைய யதாரத்த வாழ்க்கையில் வழிகாட்டும் வழிகாட்டிகளாகவும்
இருக்கின்றன. இன்னொரு வகையில் அவர்களை ஆற்றுப்படுத்துகிற
நல்ல மனநல மருத்துவராகவும் இருக்கின்றன.
சிறார் புத்தகங்களில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள்
குழந்தைகளிடம் நல்லுணர்வுகளையும் மெல்லுணர்வுகளையும் வளர்க்கிறது. மறைமுகமாக ஒரு
ஆசிரியரைப் போல மனதோடு உரையாடுகிறது. மனதில், அறிவில், மாற்றங்களை உருவாக்குகிறது. அந்த
மாற்றங்களின் வழியே குழந்தைகள் தங்களுடைய ஆளுமையைக் கட்டமைக்கும் உத்வேகத்தைப்
பெறுகிறார்கள்.
சிறார் புத்தகங்கள் சிறார்களின் எதையும்
ஆராய்ந்து அறியும் மனோபாவத்தை வளர்க்கின்றன சமூகத்துடன் இயைந்து வாழும் இயல்பைக்
கற்றுக் கொடுக்கின்றன. இயற்கை
அறத்தையும் பிரபஞ்ச அன்பையும் கற்றுக் கொடுக்கின்றன. தான் மட்டும்
தான் உலகம் என்று வளரும் குழந்தை, எல்லோருக்குமானது இந்த உலகமென்று உணரும்
சூட்சும அறிவைப் புத்தகங்கள் கொடுக்கின்றன.
குழந்தைகள் புத்தகங்களை வாசிக்கும்போது
மொழித்திறன் வளர்கிறது. சொற்களின்
வழியே புதிய உணர்வை அடையும் போது அந்தச் சொற்கள் அவர்களுடைய மொழிவங்கியில்
சேகரமாகிறது. மொழிவளம்
மிக்க குழந்தைகள் தங்களுடைய சிந்தனைகளை, உணர்ச்சிகளை மிக எளிதாக, வலிமையாக, கூர்மையாக
வெளிப்படுத்துகிறாகள். அது
அவர்களுடைய தன்னம்பிக்கையை வளர்க்கிறது.
ஒவ்வொரு புத்தகம் வாசிக்கும்போது அவர்களுடைய
உணர்ச்சித்தளம் விரிவடைகிறது. ஆழமாகிறது. அதன் வழியே அவர்கள் உணர்ச்சிகளைக் கையாளும்
பயிற்சி பெறுகிறார்கள். இதனால் எந்தப்
பிரச்னை வந்தாலும் அதை நிதானமாக அணுகும் திறனைப் பெறுகிறார்கள். அந்தப்
பிரச்னையை எப்படித் தீர்ப்பது என்று அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கத்
தொடங்குகிறார்கள்.
புத்தகங்களை வாசிக்கும் போது குழந்தைகள்
தாங்கள் வாழும் சமூகத்தின், வரலாறு, பண்பாடு, ப்ழக்கவழக்கங்கள், நடைமுறைகள், நன்மை தீமைகள், பலம், பலவீனங்கள்
எல்லாவற்றையும் அறிந்து கொள்கிறார்கள்.
எனவே தான் குழந்தைகளின் வாசிப்பு என்பது
நம்முடைய எதிர்காலத்துடன் தொடர்புடையது.
மனிதகுலத்துடன் தொடர்புடையது.
இந்த பூமியின் எதிர்காலத்துடன் தொடர்புடையது.
நன்றி - புக் டே


