நஸ்ரியாவின் செடி
உதயசங்கர்
நஸ்ரியா ஒரு குட்டிப்பாப்பா. குட்டிப்பாப்பா
என்றால் மூன்று வயது முடிந்த குட்டிப்பாப்பா. வீட்டுக்குள் ஒரு நிமிடம் கூட நிற்க மாட்டாள்.
ஒரே ஓட்டம் தான்.
உம்மா கூட, “ ஒரு இடத்துல நிக்குதா
பாரு.. அங்கிட்டும் இங்கிட்டும் ஓட்டமும் சாட்டமும்.. “ என்று சொல்லிச் சிரிப்பாள்.
அப்படி ஓடும்போது நஸ்ரியா அப்படி இப்படித் தடுமாறுவாள். கால்கள் பின்னும். கீழே விழப்போவதைப்
போல சாய்வாள். ஆனால் விழாமல் சமாளித்து விடுவாள். அப்போது யாராவது அவளுடைய வாப்பாவோ,
உம்மாவோ இருந்தால் அவர்களைப் பார்த்துச் சிரிப்பாள். எப்படித் தெரியுமா? வாயிலிருந்து
கெக்கேக் கீக்கி என்ற சத்தம் வரும். எளிறும் பால்பற்களும் தெரிய பளீரெனச் சிரிப்பாள்..
பெருமை. கீழே விழாமல் சமாளித்து விட்டாளாம்.
அப்படி யாரும் இல்லையென்றால் நஸ்ரியா
சிரிக்கமாட்டாள்.. அடுக்களையில் இருக்கும் உம்மாவையோ தோட்டத்தில் இருக்கும் வாப்பாவையோ
தேடிப்போவாள். அப்பவும் ஓட்டம் தான். போய் அவர்களுடைய முகத்தைத் திருப்பி நேராகப் பார்த்துக்
கொண்டு சிரிப்பாள். அவர்களுக்கு நஸ்ரியா எதுக்குச் சிரிக்கிறாள் என்று தெரியாது. ஆனால்
நஸ்ரியாவுக்குத் தெரியுமே.
நஸ்ரியாவுக்கு தோட்டம் தான் மிகவும்
பிடித்த இடம். தென்னை மரங்கள், மாமரங்கள், ஒரு பெரிய வேப்பமரம், ஒரு புளிய மரம், சம்பங்கி,
மல்லிகை, கனகாம்பரம், ரோஜா, என்று பூச்செடிகள், காட்டுச்செடிகள், நெருஞ்சி, தும்பை,
கொளுஞ்சி, தாத்தாச்செடி, முசுமுசுக்கை, நுணாக்கொடிகளும் நிறைந்திருக்கும். அதிகாலையில்
ஒரு கருங்குயிலின் கூக்கூக்க்கூகூ சத்தம் தான் நஸ்ரியாவை எழுப்பிவிடும். அவள் எழுந்தவுடன்
தோட்டத்திற்குத் தான்போவாள். எப்படியாவது அந்தக்குயிலக்காவைப் பார்க்கவேண்டும் என்று
அங்கும் இங்கும் ஓடுவாள். சத்தம் வரும். ஆனால் பார்க்க முடியாது. சில நேரம் கருகருவென
குயிலக்காவின் வாலின் நுனி மட்டும் தெரியும்.
“ கண்ணாமூச்சி ஆடுறியா.. இரு இரு வாப்பாகிட்டச் சொல்லி உன்னைப் பிடிச்சித்தரச்சொல்றேன்..”
நஸ்ரியாவுக்குக் கோபமாக வந்தது.
சுற்றிச் சுற்றிப் பார்த்தாள். வாப்பா தூரத்தில் பாத்திகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக்
கொண்டிருந்தார்.
அப்படியே உட்கார்ந்து மண்ணைக்
கிளற ஆரம்பித்து விட்டாள். வேப்பமரத்தடியில் நிறைய வேப்பங்கொட்டைகள் கிடந்தன. அதில்
ஒரு கொட்டையை எடுத்து வாய்க்கருகில் கொண்டு போனாள்.நஸ்ரியா. அந்தக் கொட்டை கசந்தது.
முகத்தைச் சுளித்தாள். நஸ்ரியாவுக்குத் தான் கசப்பு பிடிக்காதே. அப்படியே அந்தக்கொட்டையை
அவள் தோண்டியிருந்த சின்னப்பள்ளத்தில் போட்டாள். மண்ணைப் போட்டு மூடினாள். அவள் மூடிக்கொண்டிருக்கும்போது
மாமரத்தில் இருந்து அணில் அண்ணன் வீச் வீச் என்று சத்தம் கொடுத்துக் கொண்டே ஓடினான்.
நஸ்ரியாவுக்கு அணில் அண்ணனின் வாலைத் தொடவேண்டும் போலிருந்தது. கைகளை நீட்டினாள். அணில்
அண்ணன் அவளைக் கவனிக்கவில்லை.. நஸ்ரியா அணில் அண்ணனோடு டூ விட்டாள். அவளுக்கு அழுகை
வரும்போல இருந்தது. அழலாமா வேண்டாமா என்று யோசித்தாள். அப்போது ஒரு செவலை நிறக்கும்பிடு
பூச்சி அவளுக்கு முன்னால் வந்து
“ காலை வணக்கம் குட்டிப்பாப்பா..”
என்று இரண்டு கைகளையும் சேர்த்துத் தூக்கிக்கும்பிட்டது.
நஸ்ரியாவும் அவளுடைய இரண்டு கைகளையும் சேர்த்துக் கும்பிட்டு
“ குட்மார்னிங்..” என்றாள். உம்மா
இங்கிலீஷில் தான் சொல்லவேண்டும் என்று சொல்லியிருக்கிறாள். கை கொடுக்கலாம் என்று அவளுடைய
கையை நீட்டினாள். ஆனால் கும்பிடுபூச்சி அதை விரும்பவில்லை. பறந்து விட்டது. அவளுக்கு
என்ன செய்வது என்று தெரியவில்லை. அருகில் வாய்க்காலில் ஓடிக்கொண்டிருந்த தண்ணீரில்
இறங்கினாள். உடம்பு புல்லரித்தது. நஸ்ரியாவின் முழங்கால் அளவு ஓடிக்கொண்டிருந்த தண்ணீரில்
அப்படியே உட்கார்ந்து தப்பளம் போட்டாள். தண்ணீர் அவளுடைய முகத்தில் தலையில் உடம்பெங்கும்
தெறித்தது. அப்படியே வெளியேயும் மழைத்துளிகளைப் போலத் தெறித்தது.
உம்மா வந்து கூட்டிக்கொண்டு போனாள்.
நஸ்ரியா இப்போது எல்.கே.ஜி. போகிறாள். பள்ளிக்கூடம் போவதுக்கு முன்னால் தான் இந்தத்தோட்ட
வேலை எல்லாம் நடக்கிறது. நாலைந்து நாட்கள் கழித்து குயிலக்காவின் குரலைக் கேட்டு தோட்டத்துக்குப்
போன நஸ்ரியா அன்றும் பார்க்கவில்லை. எப்படி பார்ப்பது ? என்று ஆழ்ந்த சிந்தனையில் மண்ணில்
உட்கார்ந்த நஸ்ரியா அப்போதுதான் கவனித்தாள்.
அவளுக்கு அருகில் ஒரு சிறு வேப்பஞ்செடி
இரண்டு இலைகள் விட்டு விதைப்பருப்போடு எழுந்து நின்று கொண்டிருந்தது. அவளுடைய குட்டி
விரல்களால் அதைத் தடவிக் கொடுத்தாள். மகிழ்ச்சி. அவளுக்குச் சிரிப்பு வந்தது. கெக்கே
கெக்க்கே என்று சிரித்தாள். கீழே உருண்டு புரண்டு சிரித்தாள். திரும்பத் திரும்ப அந்த
குட்டிச்செடியைப் பார்த்துச் சிரித்தாள். நஸ்ரியாவின் சிரிப்பைப் பார்த்த அந்தக்குட்டி
வேப்பமரமும் காற்றில் தலையாட்டிச் சிரித்தது..
நன்றி - வண்ணக்கதிர்
No comments:
Post a Comment