Sunday 16 June 2019

கஞ்சனைத் திருத்திய காகம்


கஞ்சனைத் திருத்திய காகம்

உதயசங்கர்

கொடையூரில் பிரபு என்று ஒரு மனிதன் வாழ்ந்து வந்தான். பெயர் தான் பிரபு. அவன் மகாக்கஞ்சன். யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டான். தானமோ, தர்மமோ, கொடுக்கமாட்டான். அந்தக் காலத்தில் சொல்வதைப் போல எச்சில் கையால் கூட காக்காவை விரட்ட மாட்டான். ஏன் தெரியுமா? அந்த எச்சில் கையில் உள்ள சோற்றுப்பருக்கைகள் கீழே விழுந்து விட்டால்? விழுந்த அந்தப்பருக்கையை காக்கா கொத்தித் தின்று விட்டால்? சாப்பிடும் போது சோற்றுப்பருக்கைகளை எண்ணி எண்ணிச் சாப்பிடுவான். மனைவி நல்லம்மாளுக்கும், குழந்தை தங்கத்துக்கும் கூட பருக்கைகளை எண்ணித்தான் சாப்பிடக் கொடுப்பான். சோறு வடித்த கஞ்சியைக் கூட யாருக்கும் கொடுக்க மாட்டான். அதனால் கொடையூர் மக்கள் பிரபுவுக்கு வடிகஞ்சன் என்று பெயர் வைத்து விட்டனர்.
வடிகஞ்சனின் மனைவி நல்லம்மாள் எல்லோருக்கும் உதவ வேண்டும் என்று நினைப்பவர்.  வீட்டுக்கு பின்புறம் உள்ள வேப்பமரத்தில் ஒரு காகம் கூடு கட்டியிருந்தது. அந்தக் காகத்துக்குத் தினமும் கம்பு, கேப்பை, அரிசி, சோறு, என்று ஏதாவது ஒரு உணவைக் கொடுப்பார் நல்லம்மாள். குடிக்கத்தண்ணீரும் ஒரு சிரட்டையில் வைப்பார். அந்தக் காகமும் அவருடைய தலையைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் கா கா கா கா கா கா என்று கரையும். அவருக்கு அருகில் வந்து நிற்கும். நல்லம்மாள் சிரித்துக் கொண்டே, “ சாப்பாடு வேணுமாக்கும்..” என்று சொல்லி விட்டு உள்ளே போய் ஏதாவது தீனி எடுத்து வருவாள். ஓய்ந்த நேரங்களில் புறவாசலில் உட்கார்ந்து காகத்திடம் பேசிக் கொண்டிருப்பாள். எப்போதாவது தங்கம் சாப்பாடு எடுத்துக் கொண்டு வருவாள். அதனால் காகம் தங்கத்தைப் பார்த்தாலும் மகிழ்ச்சியில் கரையும்.
ஒரு நாள் தங்கம் பள்ளிக்கூடம் போனவள் வீட்டுக்குத் திரும்பவில்லை. நேரமாகி விட்டது. நல்லம்மாளுக்கு இருக்க முடியவில்லை. வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள். வெளியே போய் விட்டு அப்போது தான் வீட்டுக்குள் நுழைந்த வடிகஞ்சனிடம்,
“ ஏங்க.. தங்கத்தைக் காணலேங்க..” என்று பதட்டமாய் சொன்னாள். அதைக் கேட்டதும் வடிகஞ்சன் உடனே பாய்ந்து வீட்டுக்குள் ஓடினான். ஓடி பீரோவைத் திறந்து நகைப்பெட்டியைத் தேடினான். நல்லவேளை நகைப்பெட்டி உடனே கிடைத்தது. அதைத் திறந்து நகைகள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்தான். அவன் பின்னாலேயே ஓடி வந்த நல்லம்மாள் அவனுடைய செயலைப் பார்த்து தலையில் தலையில் அடித்துக் கொண்டாள்.
“ நம்ம மகளைக் காணலீங்க.. “ என்று கோபத்துடன் சொன்னாள். அதற்கு வடிகஞ்சன்,
” அவ்வளவுதானா? வருவா வருவா.. எங்கேயாச்சும் சுத்திகிட்டு வருவா..” என்று அலட்சியமாகச் சொன்னான். நல்லம்மாள் பக்கத்து வீட்டு பார்வதிப்பாட்டியை துணைக்குக் கூட்டிட்டு தங்கத்தைத் தேடப்போனாள். ஒரு வழியாக தங்கம் அவளுடைய தோழி வீட்டில் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து நிம்மதியடைந்தாள். வீட்டுக்கு வந்து பார்த்தால் வடிகஞ்சன் விளக்குகளை எல்லாம் அணைத்து விட்டு தூங்கிக் கொண்டிருந்தான்.
ஒரு நாள் மதியம் நல்லம்மாள் புறவாசலில் துவைக்கும் கல்லைக் கழுவி காகத்துக்குச் சோறு வைத்தாள். காகம் அவளைப் பார்த்ததும் கா கா கா கா கா என்று கரைந்து கொண்டே சோறு சாப்பிட மரத்திலிருந்து கீழே இறங்கியது. அப்போது வடிகஞ்சன் வந்து விட்டான். உடனே பாய்ந்து வந்து காகத்தை விரட்டினான். காகத்துக்கு வைத்திருந்த சோற்றை வாயில் போட்டு விழுங்கினான். பின்னர் உள்ளே சென்றான். நல்லம்மாளிடம்,
“ நான் வாயைக் கட்டி வயித்தைக் கட்டி சேர்த்து வைக்கிறத நீ காக்காவுக்கும் குருவிக்கும் போட்டு வீணடிக்கிறியா..கழுதை.. “ என்று வைதான். அன்று முழுவதும் நல்லம்மாள் கண்ணில் பார்க்கும்போதெல்லாம் வைதான். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்தது காகம்.
மறுநாள் காலையில் வடிகஞ்சன் வேலைக்குக் கிளம்பினான். வாசல்படியை விட்டு கீழே இறங்கியது தான் உடனே எங்கிருந்தோ காகங்கள் பறந்து வந்து வடிகஞ்சனின் தலையில் கொத்தின.
“ ஐயோ அம்மா “ என்று அலறிக்கொண்டே வீட்டுக்குள் ஓடினான். மறுபடியும் கொஞ்சநேரம் கழித்து வாசல்படியில் நின்று வெளியில் பார்த்தான். எதுவும் இல்லை. மெல்ல தெருவில் இறங்கினான். அவன் தெருவில் இரண்டடி தான் எடுத்து வைத்திருப்பான். எங்கிருந்து தான் வருமோ? அப்படி ஒரு படையெடுப்பு. காகங்கள் பறந்து வந்தன. அவன் விழுந்தடித்து வீட்டுக்குள் ஓடினான். அப்படியும் ஒரு காகம் அவன் தலையில் கொத்தி விட்டது. அன்று பகல் முழுவதும் அப்படித்தான் நடந்தது.
இரவில் தான் அவன் வெளியே போக முடிந்தது. அவனுக்குப் புரிந்து விட்டது. அவன் காகத்துக்கு வைத்திருந்த சோற்றைத் தின்றதால் வந்த கோபம். இரவு முழுதும் அவனுடைய காதுகளில் காக்கைகளின் கா கா கா கா கா கா சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. மறுநாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,
 காக்காக்களுக்கு அவ்வளவு ஞாபகசக்தியா இருக்கும்? என்று நினைத்துக் கொண்டே தலையில் முக்காடு போட்டுக் கொண்டு வடிகஞ்சன் தெருவில் நடந்தான். ஒன்றும் நடக்கவில்லை. சரி. இனி பயமில்லை என்று நினைத்தான். அவனுடைய தெருவைத் தான் கடந்திருப்பான். ஒரு காகம் அவனுடைய முகத்துக்கு நேரே பறந்து அவனைப் பார்த்து விட்டது. அவன் யோசிப்பதற்குள் ஒரு கூட்டம் வந்து கொத்தி எடுத்து விட்டது. அவன் மறுபடி வீட்டுக்கு ஓடிப் போனான். முகத்தில், தலையில், ரத்தக்காயம். டாக்டர் வீட்டுக்கு வந்து மருத்துவம் பார்த்தார். பத்து நாட்களாக வீட்டுக்குள்ளேயே கிடந்தான் வடிகஞ்சன்.
ஊரெல்லாம் காகம் விரட்டிய வடிகஞ்சனைப் பற்றித்தான் பேச்சு. பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் கூட அந்தச்செய்தி வந்து விட்டது. வடிகஞ்சனால் இரவில் கூட தலைகாட்டமுடியவில்லை. எல்லோரும் “ காக்காவை என்ன செய்ஞ்சே? என்ன செய்ஞ்சே..? “ என்று கேட்டார்கள். அவர்களிடம் காக்காவுக்கு வைத்திருந்த சோற்றைத் தின்னுட்டேன்னு சொல்லவா முடியும்? காகத்தின் சத்தம் கேட்டாலே வடிகஞ்சனின் உடல் நடுங்கியது.
கடைசியில் நல்லம்மாளிடம்,
“ நல்லம்மா என்னை மன்னிச்சிரு.. ஏதாச்சும் செய்யணும்.. சொல்லு.. எனக்குக் கேவலமா இருக்கு..”
என்று சொன்னான். நல்லம்மாள் ஆறுதலாக அவனிடம்,
“ நம்ம எல்லோருக்கும் ஒரு வாழ்க்கை தான்.. அதை எல்லோருக்கும் உதவி செய்ஞ்சு, மகிழ்ச்சியாக வாழணும்… அவ்வளவு தான்… நாளைக்கு நீங்களே காக்காவுக்குச் சோறு வைங்க..” என்றாள்.
 மறுநாள் காலை புறவாசலில் இருந்த திண்டில் வடிகஞ்சன் இல்லையில்லை பிரபு காக்காவுக்குச் சோறு வைத்தான். வேப்பமரத்திலிருந்த காகம் முதலில் சந்தேகமாகப் பார்த்தாலும், அருகில் நல்லம்மாள் இருப்பதைப் பார்த்து தைரியமாகப் பறந்து வந்து சோற்றைச் சாப்பிட்டு மற்றவர்களையும் அழைத்தது. எல்லாக்காகங்களும் கூட்டமாகச் சாப்பிடுவதைப் பார்த்த பிரபுவுக்கு ஆனந்தக்கண்ணீர் வந்தது.
அதன் பிறகு அவன் எல்லோருக்கும் உதவிகள் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்தான். இப்போது அவனை எல்லோரும் பிரபு என்றே கூப்பிடுகிறார்கள்.,

நன்றி - வண்ணக்கதிர்

No comments:

Post a Comment