Thursday 24 August 2017

அப்துல் எங்கே?

 அப்துல் எங்கே?
உதயசங்கர்

“பாத்திமா இன்றும் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் உம்மாவிடம் கேட்டாள்.
“உம்மா, அப்துல் வந்தானா?“
உம்மா அவளைப் பார்த்துச் சிரிக்க முயன்றார். பிறகு பாத்திமாவின் சோகமான முகத்தைப் பார்த்ததும், “இல்லை பாத்திமா, அவன் இனி வரமாட்டான். வளர்ந்துட்டதால அவன் இனத்தோட போய்ச் சேர்ந்திருப்பான்” என்றார்.
பாத்திமாவுக்கு ஏமாற்றமாக இருந்தது. படிப்பறைக்குள் நுழைந்தாள். அங்கே இருந்த ஜன்னல் மூடிவைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் அவளுக்குக் கோபம் வந்தது.
“யாரு இந்த ஜன்னலை மூடிவச்சது? அப்புறம் எப்படி அப்துல் வருவான்?” என்று கத்தினாள். உம்மாவுக்குச் சிரிப்பு வந்தது.
“இந்தப் பெரிய மனுசிக்கு வர்ற கோபத்தைப் பாரு” என்றபடியே அவித்து வைத்திருந்த நிலக்கடலையைப் பாத்திமாவிடம் கொடுத்தார் உம்மா.
நாற்காலியில் ஏறி ஜன்னல் கதவுகளைத் திறந்து கொண்டிருந்தாள் பாத்திமா. எப்போதும் இந்த ஜன்னலில்தான் அப்துல் என்ற அணில் குஞ்சு விளையாடிக்கொண்டிருக்கும். பாத்திமா பள்ளி விட்டு வந்ததும், அவள் தோளில் ஏறி உட்கார்ந்துகொள்ளும். அவள் கொடுக்கிற கடலைப் பருப்பைக் கொறிக்கும். அப்படியே கீழே இறங்கி மேலே ஏறி விளையாடும்.
பாத்திமாவுக்குப் பொழுதுபோவதே தெரியாது. இரவில் அவள் கொடுக்கிற உணவைச் சாப்பிடும். அவளுடைய படுக்கையில் அவளுக்கு அருகில் சுருண்டு படுத்துக்கொள்ளும். அப்துல் அவளுடன் பழகுவதைப் பார்த்து எல்லோரும் ஆச்சரியப்படுவார்கள்.
ஒரு நாள் பள்ளி விட்டு வரும்போது, தரையில் இருந்து ‘கீச்கீச்’ என்ற சத்தம் கேட்டது. பாத்திமா சுற்றும் முற்றும் பார்த்தாள். கட்டை விரல் அளவுக்குச் செக்கச்செவேல் என்று கண் திறக்காத ஓர் அணில் குஞ்சு கிடந்தது. அதைச் சுற்றிச் சுற்றித் தாய் அணில் ஓடிக்கொண்டேயிருந்தது. திடீரென்று எங்கிருந்தோ ஒரு காகம் பறந்து வருவதைப் பாத்திமா பார்த்தாள். உடனே ஓடிச்சென்று அணில் குஞ்சைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டாள்.
உம்மாவும் வாப்பாவும் முதலில் அவளைத் திட்டினார்கள். எலிக் குஞ்சைத் தூக்கிக் கொண்டு வந்திருக்கிறாள் என்று கேலி செய்தார் வாப்பா. ஆனால், பாத்திமா அசரவில்லை. வாப்பாவிடம் அடம்பிடித்துக் கடையிலிருந்து ஒரு மையூற்றியை வாங்கி வந்தாள். அந்த அணில் குஞ்சைக் கையில் ஏந்தி, மையூற்றி மூலம் பாலைச் சொட்டுச் சொட்டாக அதன் வாயில் புகட்டினாள். அணில் பாலைக் குடித்தது. அவளுடைய படுக்கைக்குப் பக்கத்தில் பழைய துண்டைச் சுருட்டி, அதில் படுக்கவைத்துக் கதகதப்பாக்கினாள்.
அணில் குஞ்சு அவளுடன் நன்றாக ஒட்டிக்கொண்டது. அவளுடைய சத்தம் கேட்டால் ‘கீச்கீச்கீச்’ என்று ஓங்கிக் குரல் கொடுத்தது. அணில் குஞ்சின் கண்கள் திறந்தன. உடலில் கருஞ்சாம்பல் நிறத்தில் ரோமங்கள் முளைக்க ஆரம்பித்தன. அணில் குஞ்சு அவ்வளவு அழகாக இருந்தது. பாத்திமா அப்துல் என்று பெயரிட்டாள்.
அப்துல் என்று கூப்பிட்ட உடனே எங்கிருந்தாலும் ஓடிவந்து, ஏறி தோளில் உட்கார்ந்துகொள்ளும். பிறகு இருவரும் பொழுதுபோவதே தெரியாமல் விளையாடிக்கொண்டிருப்பார்கள்.
நன்றாக வளர்ந்ததும் அப்துல் வெளியில் போக ஆரம்பித்தது. அருகில் இருந்த வேப்ப மரத்தில் ஏறி மற்ற அணில்களுடன் விளையாடியது. இரவில் பாத்திமாவிடம் வந்துசேர்ந்தது.
ஆனால், திங்கள் இரவிலிருந்து அப்துல் வரவில்லை. பாத்திமா ஏங்கிப் போனாள். வீட்டுக்கு வெளியே சென்று, ‘அப்துல், அப்துல்!’ என்று கூப்பிட்டுப் பார்த்தாள். ஒரு பலனும் இல்லை. பார்க்கிற அணில்களை எல்லாம் அழைப்பாள். ஒரு வாரம் ஆன பிறகும் அப்துல் வந்து சேரவில்லை.
வாப்பா சொன்னார், “பாத்திமா அது தன் இனத்துடன் சேர்ந்திருக்கும். அதுதானே இயற்கை. இனி அதுக்குன்னு ஒரு குடும்பம், மனைவி, பிள்ளை என்று ஆகணும் இல்லையா?”
பாத்திமா புரிந்த மாதிரி தலையாட்டினாள். ஆனாலும் அவளுக்கு வருத்தமாக இருந்தது.
அன்று இரவு அப்துலை நினைத்துக்கொண்டே தூங்கினாள். திடீரென்று அப்துலின் மென்மையான வால் உரசியதுபோல் இருந்தது. சட்டென்று கண் விழித்துப் பார்த்தாள். திறந்திருந்த ஜன்னலில் அவளுக்கும் அப்துலுக்கும் பிடித்த ஒரு கொய்யாப்பழம் இருந்தது!
நன்றி - மாயாபஜார் தமிழ் இந்து

Keyword பா


No comments:

Post a Comment