Sunday 19 April 2015

பெயரில் என்ன இருக்கிறது?

 

உதயசங்கர்

jothidam

பெயரில் என்ன இருக்கிறது? பெயர் என்பது ஒரு அடையாளம் அவ்வளவு தானே என்று சில அறிவுஜீவிகள் சொல்லலாம். பெயரினால் தான் தன் கடந்த காலவாழ்க்கை இப்படியானது. நிகழ்கால வாழ்க்கை இப்படியிருக்கிறது. எதிர்கால வாழ்க்கையும் எப்படியோ ஆகி விடும் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். பலருக்கு அவர்களுடைய பெற்றோர் வைத்த பெயர் பிடிப்பதில்லை. ரெம்ப பழைய பேராக இருக்கிறது என்றோ, ரெம்ப சாதாரணமாக இருக்கிறது என்றோ, கொஞ்சம் கேவலமாக இருக்கிறது என்றோ நினைப்பவர்கள் இருக்கிறார்கள். சிலர் அப்பா அம்மா வைத்த பேரை மாற்றவும் செய்கிறார்கள். இதற்காகவே நிறைய பெயரியல் நிபுணர்கள், எண் கணித சோதிடர்கள் குவிந்து கிடக்கிறார்கள். அவர்களிடம் சென்று உங்கள் பெயரில் ஒரு எழுத்தையோ, இரண்டு எழுத்துகளையோ கூட்டிக் குறைத்து கணித்து வாங்கி அதை கெஜட்டியரிலும், பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்து தங்களுடைய பெயரை மாற்றுவதின் மூலம் தங்களுடைய வாழ்க்கை மாறி விடும் என்று நம்பிக்கை கொள்கிறார்கள். சிலர் முழுப்பெயரையுமே தங்களுடைய சோதிடரிடம் கேட்டு மாற்றிக் கொள்கிறார்கள்.

இப்போது குடும்ப டாக்டர்கள் மாதிரி குடும்ப சோதிடர்களும் உருவாகி விட்டார்கள். தங்கள் வாழ்க்கை, தங்களுடைய குடும்பத்தினரின் வாழ்க்கை, எல்லாமே அந்த ஒன்பது கட்டத்தில் தான் இருக்கிறது என்று அப்பாவியாய் நம்புகிறவர்கள் தான் அதிகம். பிறந்ததிலிருந்து இறக்கும்வரை ஒருவருடைய தனிப்பட்ட,மற்றும் குடும்ப வாழ்க்கையில் எல்லாநிகழ்ச்சிகளிலும் சோதிடம் ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதிலும் பெண்கள் சோதிடம் பார்ப்பதில் பிடிவாதமாய் இருக்கிறார்கள். முற்போக்கான எண்ணம் கொண்டவர்களும் கூட நான் சோசியம் பார்க்க மாட்டேன்.. என்று பொத்தாம் பொதுவாய் சொல்வார்கள். ஆனால் அவர்களுடைய வீட்டு விசேசங்களிலிருந்து அனைத்து நிகழ்வுகளும் காலண்டரில் குறிப்பிட்ட நாள், கிழமை, நட்சத்திரம், லக்கினம், பாட்டிமை, பிரதிமை, ராகு, குளிகை, எமகண்டம் எல்லாம் பார்த்துத் தான் நடக்கிறது. கேட்டால் வீட்டில பொம்பிளக சொன்னா கேக்க மாட்டேங்காக.. என்று அங்கலாய்ப்பதும் நடக்கிறது.

அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு பெயர் வைப்பது என்பது கட்டாயமாக சோதிடரைக் கலந்து ஆலோசிக்காமல் நடப்பதில்லை. சிலர் தங்களுடைய தாய்,தந்தையரின் பெயர்கள், அல்லது அதன் கலவை, சிலர் தாத்தா, பாட்டி, அல்லது முப்பாட்டன், முப்பாட்டி இவர்களின் பெயர்கள், சிலர் குலசாமிகளின் பெயர்களை நவீனமாக்கி வைத்துக் கொள்வது, சிலர் தங்களுக்குப் பிடித்த தலைவர்களின் பெயர்கள், சிலர் தங்களுக்குப்பிடித்த சினிமா நடிக, நடிகையரின் பெயர்கள், என்று வித விதமாக யோசித்து பெயர் வைப்பார்கள் என்றாலும் இவையெல்லாம் சோதிடர் சொல்லிலிருந்து தான் புறப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். விதி விலக்குகள் இருக்கலாம். முன்பெல்லாம் முதலெழுத்து அ, இ, க, ச, என்று தமிழ் எழுத்துருக்களைச் சொல்லிக் கொண்டிருந்த சோதிடர்கள் இப்போது மாறி வரும் சமூகத்தின் மனநிலைக்கேற்ப ஆங்கில எழுத்துக்களை முதல் எழுத்துக்களாகச் சொல்கிறார்கள். A, B, R, H, என்று சொல்லி விடுகிறார்கள். இளைய தலைமுறையும் தங்களுடைய குழந்தைகளுக்குப் பெயர்கள் சாதாரணமாக இருக்கக்கூடாது என்ற தீர்மானத்தில் இருப்பதுவும், யாரும் வைக்காத பெயரை தன்னுடைய குழந்தைக்குச் சூட்ட வேண்டும் என்ற ஆவலிலும் பெயர்களைத் தமிழில் தேடுவதோ யோசிப்பதோ இல்லை. அதற்குப் பதில் சமஸ்கிருதப்பெயர்களைத் தேடுகிறார்கள். சமஸ்கிருதத்தில் அந்தப் பெயர்கள் அறுதப்பழசாக இருந்தாலும் சரி, அர்த்தம் தெரியாமலோ, அர்த்தம் புரியாமலோ இருந்தாலும் சரி அந்தப் பெயர்களைச் சூட்டி மகிழ்கிறார்கள். உதாரணத்துக்கு, அபராஜித், ஹர்சத், ருட்வி, அபிநவ், அபிஜித், ரிஷிகா, க்ருஷிகா, ஸஜீவி, ஸாகர்ஷ், ப்ரவஸ்தி, ஷன்ஷிதா ஸ்பூர்த்தி, விரதேஷ், வினாஷ், மகிதா, என்று வாய்க்குள் நுழையாத பெயர்களை வைப்பதில் பேரானந்தம் கொள்கிறார்கள். அதற்கென்று இப்போது ஏராளமான புத்தகங்களும், இணையதளங்களும், வந்து விட்டன. அதனால் என்ன? அவரவர்களுக்குப் பிடித்த பெயர்களை தங்களுக்கோ தங்கள் குழந்தைகளுக்கோ வைத்துக் கொள்வதில் என்ன தவறு என்று கேட்கிறீர்கள் தானே.

இப்போது கட்டுரையின் தலைப்புக்கு மீண்டும் வருவோம். பெயரில் என்ன இருக்கிறது? ஒரு பெயரில் மனித குல வரலாற்றின் அரசியல், பண்பாடு, பொருளாதாரம், சமூகப்படிநிலை, சாதியப்படிநிலை, பாலினப்பாகுபாடு, சடங்கியல், இறையியல், என்று பல்வேறு தகவல்கள் இருக்கின்றன. எயினன், நன்னன், பாடினி, பாணன், போன்ற பெயர்கள் சுட்டும் சங்ககாலம் இந்தப் பெயர்களின் வழியே அன்றிருந்த தமிழ்ச்சமூகத்தினைப் பற்றிய அவற்றின் பல தகவல்களைத் தருகிறது. அதற்குப்பின்னர் வரலாற்றில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பெயர்களும் சமண மதம் இங்கு செல்வாக்குப் பெற்றிருந்ததைப் பற்றி, சைவம் வெற்றி கொண்ட பின் இடப்பட்ட பெயர்கள், கிறித்துவம் நுழைந்த காலகட்டத்தைப் பற்றிப் பதிவு செய்யும் பெயர்கள், நிலப்பிரபுத்துவம் கோலோச்சிய காலகட்டம், வர்ணாசிரமத்தின் இரும்புப்பிடியில் சமூகம் மாட்டிக் கொண்டிருந்த காலகட்டம், ( அது இப்போதும் தொடர்கிறது ) இந்திய சுதந்திரப்போராட்ட காலகட்டம், விடுதலைக்குப் பின்னான நவீன இந்தியாவின் காலகட்டம், இடதுசாரிகள் வலுவாக இருந்த காலகட்டம், பகுத்தறிவாளர்கள் செல்வாக்கு பெற்ற காலகட்டம், மீண்டும் சநாதன இந்து மதம் மறுமலர்ச்சி அடைந்து கொண்டிருக்கிற காலகட்டம், என்று எல்லாப்பெயர்களின் வழியே நாம் வரலாற்றின் ஒரு துணுக்கை தரிசித்து விடலாம்.

உதாரணத்துக்கு அனுபாலன், மலிம்ருச்கர், சூர்க்குவின், கோகன், பலிஜகன், பப்ரிவாஸன், ப்ரமிலன், இந்திரன், அஸ்வினி, மித்ரா, சோமன், போன்ற பெயர்கள் வேதகாலத்தைக் குறிக்கின்றன. கௌதமன், ஆனந்த், வைசாலி, சித்தார்த்தன், போன்ற பெயர்கள் பௌத்த காலத்தைக் குறிக்கின்றன. எயினன், நன்னன், பாடினி, பாணன், போன்ற பெயர்கள் சங்ககாலத்தைக் குறிக்கின்றன. நடராஜன், சிவன், திருநாவுக்கரசு, தேவாரம், சுந்தரம், சங்கரன், பார்வதி, பரமேசுவரி, காந்திமதி, மீனாட்சி, சொக்கநாதன், போன்ற பெயர்களில் சைவ மதகாலத்தைக் குறிக்கின்றன. மாடசாமி, கருப்பசாமி, அய்யனார், சுடலை, முண்டன், காத்தவராயன், சின்னத்தம்பி, இருளப்பன், மாரி,, பேச்சி, ராக்காச்சி, காளி, போன்ற பெயர்கள் நாட்டார் தெய்வ வழிப்பாட்டின் செல்வாக்கையும், கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது, வெள்ளையன், தானாபதி, காந்தி, நேரு, பாரதி, சிதம்பரம், சிவா, வாஞ்சி, சுதந்திரம், வந்தேமாதரம், மோகன்தாஸ், ஜவகர், என்ற பெயர்களின் வழியே சுதந்திரப்போராட்ட கால வரலாற்றையும் நமக்குத் தெரிவிக்கின்றன. மதம் மாற்றம் அடைந்தவர்களை அவர்கள் கிறித்துவ மதமாக இருந்தால் முழுமையான கிறித்துவப்பெயர்களாக அதாவது ஜோசஃப், ஜெலஸ்டின், அண்டன், இருந்தால் அவர்களுடைய முன்னோர்கள் ஏற்கனவே கிறித்துவ மதத்தில் இருப்பவர்கள் அதுமட்டுமில்லாமல் கத்தோலிக்க மதத்தில் இருப்பவர்கள் என்றும் புரிந்து கொள்ள முடியும். அதே போல டேவிட் செல்லையா, டேனியல் பெரியநாயகம், ஆல்பர்ட் சச்சிதானந்தம், போன்ற பெயர்களிலிருந்து அவர்களோ அவர்களுடைய முன்னோர்களோ மிகச்சமீப காலத்தில் மதம் மாறியவர்கள் என்றும் புராட்டஸ்டண்ட் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியும். இதையே இஸ்லாமியப்பெயர்களில் தமிழ் முஸ்லீம்களின் பெயர்களையும், அரபு, உருது, தெரிந்த இஸ்லாமியர்களின் பெயர்களையும் வேறுபடுத்தி பார்க்க முடியும். மார்க்ஸ், லெனின், மாசேதுங், ஸ்டாலின், வால்கா, ஜமீலா, செம்மலர், வெண்மணி, இன்குலாப், செங்கொடி, ராமமூர்த்தி, பாலவிநாயகம், நல்லசிவன், நெருதா, பிரகாஷ், உமாநாத், என்ற பெயர்களின் வழியே இடது சாரிகளின் செல்வாக்கை அறியலாம். ராமசாமி, ஈ.வெ.ரா. அறிவழகன், அன்பழகன், மதியழகன், அன்பரசன், தமிழ்ச்செல்வன், தமிழழகன், இனியவன், பூங்கொடி, மலர்விழி, கயல்விழி, என்ற பெயர்களின் வழியே திராவிட இயக்கத்தின் செல்வாக்கை உணரலாம்.

இதுவல்லாமல் சாதிப்படிநிலைகளில் கீழே இருந்த சூத்திரர்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் உயர்சாதியினர் வைக்கும் பெயர்களிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர். அது மட்டுமில்லாமல் அவர்களுக்கு சமூகத்தில் எந்த மரியாதையும் இல்லை அல்லது கொடுக்கக்கூடாது என்ற நோக்கத்தில் மண்ணாங்கட்டி, பிச்சை, பாவாடை, கருப்பன், சுப்பன், மாடன், சுடலை, மாரி, போன்ற பெயர்களை மட்டுமே வைக்க அநுமதித்தினர். இதிலும் பெரிய கொடுமை சூத்திரர்கள் சற்று மேல்நிலைக்கு வந்த போது அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை தாழ்த்தப்பட்டவர்களுக்கும் விதித்தனர். பொதுச்சமூகவெளியில் பெயர்களை வைத்தே சாதியைக் கண்டுபிடிக்கவும் செய்தனர். சில பெயர்களை அந்தந்த மதத்தினர் சாதியினர் தவிர மற்றவர்கள் வைத்துக்கொள்வதில்லை. வைணவர்கள் எக்காரணம் கொண்டும் சைவப்பெயர்களை வைப்பதில்லை. அதே போல சைவர்கள் வைணவப்பெயர்களை வைப்பதில்லை. இதில் சில விதிவிலக்குகளும் உண்டு. கண்ணன் என்ற பெயர் சமயம் தாண்டிய செல்லப்பெயராகி விட்டது. அதே போல கணேசன், விநாயகம், போன்ற பெயர்களும் பொதுப்பெயர்களாகி விட்டன. ஆனால் நவஇந்தியாவின் சிற்பிகளில் ஒருவரான அம்பேத்காரின் பெயரை எந்தச்சாதியினரும் வைத்துக் கொள்வதில்லை. அதை சாதியடையாளமாக மாற்றி விட்டனர். அதே போல புராண இதிகாசங்களில் வரும் வில்லன்கள் பெயரையும் எந்த சாதியினரும் வைத்துக் கொள்வதில்லை.உதாரணத்துக்கு ராவணன், துரியோதனன், துச்சாதனன், பொன்ற பெயர்கள். ஆக பெயர்களிலும் கூட தீண்டாமை இருக்கிறது. விலக்குதல் இருக்கிறது.

இவ்வளவுக்கு அப்புறமும் இப்போது நம்மால் பெயரில் என்ன இருக்கிறது என்று அலட்சியப்படுத்தி விட்டு போய் விட முடியுமா? பின்னொரு காலத்தில் 2000 மாவது ஆண்டுகளில் வாழ்ந்த தமிழர்களைப் பற்றி ஆய்வு நடந்தால் அதில் இப்போது புழங்கிக் கொண்டிருக்கும் பெயர்களிலிருந்து என்ன முடிவுகளுக்கு வந்து சேருவார்கள்? யோசித்துப்பாருங்கள். தமிழ் என்ற அடையாளமே இல்லாத ஒரு சமூகம் வாழ்ந்ததாகவும், சமஸ்கிருதமே பேச்சு மொழியாகவும், எழுத்து மொழியாகவும், இருந்ததெனவும் கருத வாய்ப்பிருக்கிறதா இல்லையா?

இறந்து போன ஒரு மொழியை நாம் உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையும் மூவாயிரம் ஆண்டுகளாக உயிரோடு, அழகோடு, இளமையோடு சர்வதேசங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழைக் கொன்று கொண்டிருக்கிறோம் என்பதையும் நாம் உணர்வோமா? தமிழில் ஐந்து லட்சம் வார்த்தைகள் இருந்தாலும் புழக்கத்தில் அதிகபட்சமாக ஒன்றிரண்டு ஆயிரங்களே இருக்கின்றன என்பதையும் நாம் உணர்வோமா? இன்றைய நிலைமையைக் கண்டால் பாரதியும் பாரதிதாசனும் எப்படி மனம் நொந்திருப்பார்கள்? தமிழன் என்றொரு இனமுண்டா? தனியே அவர்க்கு ஒரு குணமுண்டா

9 comments:

  1. பெயரில் என்ன இருக்கிறது? பெயரில் கூட தீண்டாமை நிலவிய தேசம் இது. பெயரில்தான் எல்லாமே இருக்கிறது என்பதனை விரிவாகச் சொன்னீர்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பார்வைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

      Delete
  2. வண்ணக்கதிரிலும் பார்த்தேன். வலைப்பக்கத்தில் மீண்டும் தொடர்ந்து பதிவிடுவது மகிழ்வளிக்கிறது உதய். தொடருங்கள், தொடர்வேன்.

    ReplyDelete
    Replies
    1. இடையில் ஏற்பட்ட தொய்வு சரியாகிவிடும். மிக்க நன்றி!

      Delete
  3. வணக்கம்
    இவை எல்லாம் மாற்றுவது மூட நம்பிகை... அருமையாக சொல்லியுள்ளீர்கள் இறுதியில் சொல்லிய வரிகள் சிறப்பு.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரூபன் ஐயா!

      Delete
  4. தமிழில் ஐந்து லட்சம் வார்த்தைகள் இருந்தாலும் புழக்கத்தில் அதிகபட்சமாக ஒன்றிரண்டு ஆயிரங்களே
    வேதனைதான் மிஞ்சுகிறது ஐயா

    ReplyDelete
  5. தொடர்ந்த உங்கள் பார்வைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  6. ஆஹா.... நல்லதொரு...கட்டுரை தோழர்...

    ReplyDelete