Saturday 8 September 2012

பிரகாசமான விளக்குடன் ஒரு அறை

சாதத் ஹசன் மண்டோ

ஆங்கிலத்தில்- காலித் ஹசன்

தமிழில்- உதயசங்கர்manto

 

கெய்சர் கார்டனிலுள்ள ஒரு விளக்குக் கம்பத்தின் அருகில் நின்று கொண்டு பார்க்கிற இடமெல்லாம் எப்படிப் பாழாகி விட்டன என்று அவன் அமைதியாக யோசித்துக் கொண்டிருந்தான். கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணாத வாடிக்கையாளர்களுக்காக சில குதிரை வண்டிகள் காத்துக் கொண்டிருந்தன.

சில வருடங்களுக்கு முன்பு இந்த இடம் எவ்வளவு சந்தோசம் பொங்குமிடமாக இருந்தது. முழுக்க முழுக்க சந்தோசமும், உல்லாசமும் நிறைந்த ஆண்களும் பெண்களும் அலைந்து திரிவார்கள். ஆனால் எல்லாம் மறைந்து விட்டது போலத் தோன்றியது. இப்போது அந்த இடம் முழுவதும் ரவுடிகளும், எங்கே செல்வதென்று தெரியாத நாடோடிகளும் நிறைந்திருந்தனர். பஜாரில் இப்போதும் கூட்டம் இருந்தது. ஆனால் குதூகலம் இல்லை. பாழடைந்த அசுத்தமான கடைகளும், கட்டிடங்களும் வெறுமையான கண்களுடைய விதவைகளைப் போல ஒன்றையொன்று முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தன.

நாகரீகமிக்க கெய்சர் கார்டனை எது இப்படி சேரி போல ஆக்கியது என்ற ஆச்சரியத்துடன் அவன் நின்று கொண்டிருந்தான். அங்கே இருந்த உயிர்ப்பும் உணர்ச்சியும் எங்கே போயின? அது அத்தனை ஒப்பனைகளையும் சுரண்டி எடுத்துவிட்ட பெண்ணின் முகத்தை நினைவுபடுத்தியது.

பல வருடங்களுக்கு முன்பு அவன் கல்கத்தாவிலிருந்து பம்பாய்க்கு வேலை தேடி வந்தபோது பல வாரங்களாக இந்தப் பகுதியில் வாடகைக்கு அறை தேடியலைந்தது அவனுக்கு ஞாபகம் வந்தது. அப்போது எதுவும் கிடைக்கவில்லை.

காலம் எப்படி மாறி விட்டது? தெருக்களில் இருக்கும் மக்களை வைத்தே சொல்லி விடலாம். யாருக்கு வேண்டுமானாலும் வாடகைக்கு இப்போது இடம் கிடைக்கும். நெசவாளர்கள், செருப்பு தைப்பவர்கள், டீக்கடைக்காரர்கள், எல்லோருக்கும்.

இன்னொருமுறை சுற்றிலும் பார்த்தான். சினிமா கம்பெனி அலுவலகங்களாகப் பயன்பட்டவையெல்லாம், இப்போது சமையலும் படுக்கையும் ஒரே அறையில் வைத்துக் கொண்டிருக்கும் வாசிகள் நிறைந்த இடமாகி விட்டது. நகரத்திலுள்ள பெரிய மனிதர்கள் மாலை வேளைகளில் கூடும் இடம், துணி வெளுப்பவர்களின் புறவாசல் மாதிரி ஆகிவிட்டது.

இது புரட்சிக்குச் சற்றும் குறைவானதில்லை. ஆனால் இந்தப் புரட்சி அழிவைக் கொண்டு வந்த புரட்சி. இடைப்பட்ட காலத்தில் அவன் இந்த நகரத்தை விட்டு வெளியே இருந்தான். ஆனால் செய்தித்தாள்கள் மூலமாகவும், இங்கே தங்கியிருந்த நண்பர்கள் மூலமாகவும் அவனில்லாத சமயத்தில் கெய்சர் கார்டனில் என்னென்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொண்டான்.

கலவரங்களும், படுகொலைகளும், பாலியல்பலாத்காரங்களும், நடந்தன. கெய்சர் கார்டன் கண்ட வன்முறை எல்லாவற்றின் மீதும் தன்னுடைய பயங்கரமான முத்திரையை விட்டுச் சென்றிருந்தது. ஒரு காலத்தில் முக்கியமானதாக இருந்த வர்த்தகநிலையங்களும், குடியிருப்புகளும், இப்போது பரிதாபமாகவும், அசுத்தமாகவும் காட்சியளித்தன.

கலவரங்களின் போது பெண்களை நிர்வாணமாக்கி அவர்களுடைய முலைகளை அறுத்தெறிந்ததாக அவன் கேள்விப்பட்டிருந்தான். அப்படி நடந்திருந்தால் இப்போது எல்லாமும் பாழ்வெட்டவெளியாக சிதிலமடைந்திருப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?

சாயங்காலம் அங்கே ஒரு நண்பரைச் சந்திப்பதற்காகவே நின்று கொண்டிருந்தான். அவன் இங்கே குடியிருக்க ஒரு இடம் பார்த்துக் கொடுப்பதாக உறுதியளித்திருந்தான்.

கெய்சர் கார்டன்ஸில் நகரத்தின் சிறந்த டீக்கடைகளும் ஹோட்டல்களும் இருந்தன. யாருக்காவது விருப்பமென்றால் அங்கே சுற்றிக் கொண்டிருக்கும் நகரத்தின் உயர்ந்த வகுப்பு மாமாக்களின் மூலம் நகரத்தின் மிகச் சிறந்த பெண்களைக் கூட அடையலாம். அவன் அங்கே கழித்த பழைய நாட்களை நினைத்துப் பார்த்தான். அழகிய ஹோட்டல் அறைகள், மது, பெண்கள், எல்லாவற்றையும் ஆசையுடன் நினைத்துப் பார்த்தான். உலகயுத்தம் காரணமாக அப்போது ஸ்காட்ச் விஸ்கி கிடைப்பதென்பது முடியாத காரியம். ஆனால் ஒரு போதும் அவனுடைய மாலைப்பொழுதுகள், ஸ்காட்ச் விஸ்கியில்லாமல் காய்ந்ததில்லை. உங்களால் பணம் கொடுக்க முடியுமென்றால் எவ்வளவு விலையுயர்ந்த ஸ்காட்ச்சாக இருந்தாலும் நீங்கள் கேட்டவுடன் கிடைக்கும்.

அவன் கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஐந்து. பிப்ரவரி மாதத்தின் சாயங்கால நிழல்கள் நீண்டு விழ ஆரம்பித்தன. அவனைக் காக்க வைத்ததற்காக அவனுடைய நண்பனைத் திட்டினான். ஒரு கப் டீ குடிப்பதற்காக ரோட்டில் இறங்க யத்தனிக்கும்போது மிக மோசமாக உடையணிந்த அந்த மனிதன் அவனருகில் வந்து நின்றான். அவன் அந்த அந்நியனிடம் கேட்டான்.

“ உனக்கு ஏதாவது வேண்டுமா?”

“ ஆமாம்.” என்று ரகசியமான குரலில் அவன் பதில் சொன்னான். அந்த அந்நியனை கஷ்டப்படுகிற ஒரு அகதி என்று அவன் நினைத்தான். அந்நியன் ஏதாவது பணம் கேட்கலாம் என்றும் நினைத்தான்.

“ என்ன வேணும் உனக்கு? “ என்று அவன் கேட்டான்.

“ எனக்கொண்ணும் வேண்டாம்..” என்று சொன்னவன் சற்று நேரம் இடைவெளி விட்டு இன்னும் அருகில் வந்தான்.

“ உங்களுக்கு ஏதாவது தேவையா? “

” என்னது..”

“ பொண்ணு..”

“ எங்கேயிருக்கிறா அவ..”

அவனுடைய குரல் அந்த அந்நியனுக்கு அவ்வளவு நம்பிக்கையூட்டுவதாக இல்லை.

“ உங்களுக்கு உண்மையிலேயே விருப்பமில்லை போலிருக்கு..”

என்று சொல்லிக் கொண்டே நடந்து செல்ல ஆரம்பித்தான். அவன் அந்நியனை நிறுத்தினான்.

“ உனக்கெப்படி தெரியும்? நீ சொல்கிற சமாச்சாரம் மனுசனுக்குச் சிலுவையில் இருக்கும்போது கூட தேவைப்படற விஷயம். இங்க பாரு நண்பா.. ரெம்பத் தூரம் இல்லைன்னா நான் உன் கூட வரத்தயார்.. நான் இங்கே ஒருத்தருக்காகக் காத்திருக்கேன்.. அவர் இன்னும் வரல்லை..”

“ பக்கத்தில தான்.. ரெம்பப்பக்கத்தில தான்.. நான் நிச்சயமா சொல்றேன்..”

என்று அவன் முணுமுணுத்தான்.

“ எங்கே?”

“ நமக்கெதிரே இருக்கிற கட்டிடம் தான்..”

“ அந்தக் கட்டிடத்தையா சொல்றே..”

“ஆமாம்..”

“ நான் உன் கூட வரணுமா?..”

“ ஆமாம்.. ஆனால் எனக்குப் பின்னாலேயே நடந்து வாங்க..”

அவர்கள் ரோட்டைக் கடந்து சென்றார்கள். அது ஒரு பாழடைந்த கட்டிடம். சுவரிலிருந்து சுண்ணாம்புக்காரை பெயர்ந்தும் வாசலில் குப்பைகள் நிறைந்தும் இருந்தன.

அவர்கள் முதலில் முற்றத்து வழியே இறங்கி இருண்ட இடைவழியினூடாக நடந்து சென்றனர். கட்டிடவேலை முடிவதற்கு முன்பே கை விடப் பட்ட நிலையிலிருந்தது. சுவரில் செங்கற்கள் பூசப்படாமலிருந்தன. குவியல் குவியலாக சுண்ணாம்புச் சாந்துக் கலவையும் தரையில் கிடந்தன. அந்த மனிதன் உடைந்து சிதிலமான ஒரு ஏணி வழியே மேலே ஏறினான்.

“ இங்கேயே இருங்கள்.. நான் ஒரு நிமிஷத்தில் திரும்பி வருகிறேன்..”

என்று அவன் சொன்னான்.

அவன் மேலே பார்த்தபோது படிக்கட்டுகளின் கடைசியில் தரையில் பிரகாசமான வெளிச்சம் தெரிந்தது. அவன் இரண்டு நிமிடங்கள் காத்திருந்த பின்பு படிகளில் ஏறத் தொடங்கினான். அவன் ஏறிச் சமதளத்தை அடைந்த போது அவனைக்கூட்டிக் கொண்டு வந்திருந்த மனிதன் கத்திக் கொண்டிருப்பதைக் கேட்டான்.

” நீ எந்திரிக்கப் போறியா இல்லையா..?”

அதற்கு அந்தப் பெண்ணின் குரல் பதிலளித்தது.

” என்னைத் தூங்க விடு..”

அவன் மீண்டும் கத்தினான்.

” நான் சொல்றதக் கேட்டு இப்ப எந்திரிக்கப் போறியா இல்லையா.. எந்திக்கலன்னா நான் என்ன செய்வேன்னு உனக்குத் தெரியும்..”

மீண்டும் அந்தப் பெண்ணின் குரல்,

” என்னைக் கொன்னாலும் சரி..நான் எந்திரிக்கமுடியாது.. கடவுளுக்காக எம்மேலே இரக்கம் காட்டு..”

“ அன்பே.. முரண்டு பிடிக்காதே.. நீ இப்ப எந்திரிக்கலன்னா எப்படி நாம வாழப் போறோம்?சொல்லு”

“ நாசமாப் போற வாழ்க்கை..நான் பட்டினி கிடந்து செத்துப் போறேன்.. கடவுளுக்காக என்னை எழுப்பாதே..எனக்குத் தூக்கமா வருது..”

என்று அந்தப் பெண் சொன்னாள். அதற்கு அந்த மனிதன் கோபத்தோடு உறுமினான்.

” அப்படின்னா நீ எந்திரிக்கப் போறதில்ல.. இல்லையா.. பொட்டைநாயே.. அசிங்கம் பிடித்த பொட்டை நாயே..”

அவள் மறுபடியும் கத்தினாள்.

” மாட்டேன்..மாட்டேன்…மாட்டேன்..”

அந்த மனிதன் மறுபடியும் தன் குரலை மாற்றிக் கொண்டான்.

” ஊர் முழுக்க கேக்கிற மாதிரி இப்படிச் சத்தம் போடாதே.. வா..எந்திரி.. நமக்கு முப்பது..ஏன் நாப்பது ரூபாய் கூட கிடைக்கும்..”

அந்தப் பெண் பலவீனமான குரலில்,

” உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன்.. என்னைப் போகச் சொல்லாதே.. நான் தூங்காம எத்தனை ராத்திரி.. எத்தனை பகல் வெளியே போயிருக்கேன்.. தயவு செய்து எம்மேலே.. இரக்கம் காட்டு..”

” ரெம்ப நேரம் ஆகாது.. ஒரு ரெண்டுமணிநேரம் தான் அப்புறம் நீ உன் இஷ்டம் போலத் தூங்கலாம்.. இங்க பாரு.. அப்புறம் என்னை வேறெதுவும் செய்யும்படி வைச்சிராதே..”

என்று அவன் சொன்னான்.

கொஞ்சநேரம் அமைதி. அவன் சமதரையைச் சத்தமில்லாமல் கடந்து பிரகாசமான வெளிச்சம் வந்த அறைக்குள் எட்டிப் பார்த்தான்.அது ஒரு அறை மாதிரியில்லை. அங்கே சில காலியான சமையல் பாத்திரங்கள் தரையில் கிடந்தன. நடுவில் ஒரு பெண் நீட்டி நிமிர்ந்து படுத்துக் கிடந்தாள். அவளருகில் குனிந்தபடி அவனைக் கூட்டிக் கொண்டு வந்த மனிதன் இருந்தான். அவன் அவளுடைய கால்களை அமுக்கிக் கொண்டே சொன்னான்,

“ நல்ல பெண்ணில்லையா..நான் சத்தியமாச் சொல்றேன்.. நாம ரெண்டு மணி நேரத்தில திரும்பி வந்துரலாம்.. அப்புறம்..நீ மனம் போல தூங்கலாம்..”

கொளுத்திய பட்டாசு போல அந்தப் பெண் விர்ரென்று எழுந்து நிற்பதை அவன் பார்த்தான்.

” சரி..நான்..வர்றேன்…”

என்றாள் அவள். அவனுக்குத் திடீரென்று பயம் வந்தது. படிகளில் இறங்கி ஓடினான். இந்த இடத்திலிருந்து வெகுதூரத்திற்கு ஓடிப் போக வேண்டுமென்று அவன் விரும்பினான். அதே போல இந்த நகரத்தை விட்டும் ஓடிப்போக வேண்டுமென்று நினைத்தான்.

தூங்க விரும்பிய அந்தப் பெண்ணைப் பற்றி நினைத்தான். யார் அவள்? ஏன் அவள் இப்படி இரக்கமில்லாமல் நடத்தப்படுகிறாள்? யார் அந்த மனிதன்? ஏன் அந்த அறை சகிக்க முடியாதபடி வெளிச்சமாக இருக்கிறது? ரெண்டு பேரும் அங்கேயே வசிக்கிறார்களா? ஏன் அவர்கள் அங்கே வசிக்கிறார்கள்?

மாடியிலுள்ள அந்தப் பயங்கர அறையிலிருந்த கண்கூசும் விளக்கினால் அவனுடைய கண்கள் பாதிக் குருடான மாதிரி இருந்தது. அவனால் நன்றாகப் பார்க்கமுடியவில்லை. குறைந்த வெளிச்சமுள்ள விளக்கை அந்த அறையில் தொங்கவிட முடியாதா? ஏன் அது இப்படி இரக்கமில்லாமல் பிரகாசமாக இருக்கிறது?

இருட்டுக்குள் ஏதோ சத்தமும் அசைவும் தெரிந்தது. அவனால் பார்க்கமுடிந்ததெல்லாம் இரண்டு கோட்டுருவங்கள். அதிலொன்று இந்தப் பயங்கரமான இடத்திற்கு அவனைக் கூட்டி வந்த மனிதன்,

“ பாத்துக்கோங்க.. ஒரு தடவை…”

என்று சொன்னான்.

“ பாத்துட்டேன்..” என்று அவன் பதிலளித்தான்.

“ சரிதானா? “

“ சரிதான்”

“ அப்ப நாப்பது ரூபாய் கொடுங்க..”

“ சரி”

“ பணத்தை நான் வாங்கிக்கலாமா?”

அவனால் அதற்கு மேல் தெளிவாக யோசிக்க முடியவில்லை. அவன் அவனுடைய பாக்கெட்டில் கையை விட்டு கை நிறைய ரூபாய் நோட்டுகளை எடுத்து அவனிடம் கொடுத்து,

“ எண்ணிக்கோ..”

என்று சொன்னான்.

“ ஐம்பது ரூபாய் இருக்கு..”

“ வைச்சிக்கோ..”

“ நன்றி..”

பெரிய பாறாங்கல்லை எடுத்து அவனுடைய தலையில் போட்டு நசுக்க வேண்டும் போல வெறி தோன்றியது.

“ அவளக் கூட்டிட்டுப் போங்க..கொஞ்சம் பதனமா நடந்துக்கோங்க.. ஒரு ரெண்டு மணி நேரத்தில இங்கேயே கூட்டிட்டு வந்துருங்க..”

“ சரி”

அவன் அந்தப் பெண்ணுடன் அந்தக் கட்டிடத்தை விட்டு வெளியே வந்ததும் ஒரு குதிரைவண்டி காத்திருப்பதைப் பார்த்தான். விரைவாக முன்னால் குதித்தேறிக் கொண்டான். அந்தப் பெண் பின்சீட்டில் அமர்ந்து கொண்டாள்.

அந்தக் குதிரைவண்டி நகரத் தொடங்கியது. அவன் வாடிக்கையாளர்களே இல்லாத ஒரு இடிந்த ஹோட்டலின் முன் நிறுத்தச் சொன்னான். அவர்கள் உள்ளே போனார்கள். அவன் அப்போது தான் அந்தப் பெண்ணை முதல் தடவையாகப் பார்த்தான். அவளுடைய கண்கள் சிவந்து வீங்கியிருந்தன. அவள் மிகவும் சோர்வாக இருந்தாள். அவள் அப்படியே குவியலாக தரையில் விழுந்து விடுவாளோ என்று அவன் பயந்தான்.

” நிமிர்ந்து பாரு..”

என்று அவன் அவளிடம் சொன்னான்.

“ என்ன?”

அவள் அதிர்ச்சியடைந்த மாதிரி கேட்டாள்.

“ ஒண்ணுமில்ல.. நிமிர்ந்து பாருன்னு சொன்னேன்..”

அவள் நிமிர்ந்து பார்த்தாள். அவளுடைய கண்கள் மிளகாய் வத்தல்கள் நிறைந்த வெறும் ஓட்டைகளாகத் தெரிந்தன.

“ உன் பெயரென்ன?”

என்று அவன் கேட்டான்.

“ அதைப் பத்தி உனக்கென்ன?” அவளுடைய குரல் அமிலம் போல எரிந்தது.

“ எங்கேயிருந்து வந்தே?”

“ இப்ப அதுக்கென்ன? “

“ ஏன் நீ முரட்டுத்தனமா இருக்கே..”

அந்தப் பெண் இப்போது நன்றாக விழித்து விட்டாள். அவள் ரத்தச் சிவப்புக் கண்களால் அவனை முறைத்துப் பார்த்தாள்.

“ உன் வேலையை சீக்கிரம் முடி..நான் போகணும்..”

“ எங்கே..?”

“ நீ எங்கேயிருந்து என்னைக் கூட்டிட்டு வந்தியோ அங்கே..”

என்று அவள் அலட்சியமாகச் சொன்னாள்.

“ நீ தாராளமா இப்பவே போகலாம்..”

“ ஏன்..நீ உன் வேலையை முடிக்க மாட்டேங்கிற.. ஏன் எனக்கு எரிச்சல் ஏற்படுத்த முயற்சிக்கிற..”

“ நான் ஒண்ணும் உனக்கு எரிச்சல் ஏற்படுத்த முயற்சிக்கல.. நான் உனக்காக வருத்தப்படுறேன்..”

என்று அவன் அநுதாபமான குரலில் சொன்னான்.

“ எனக்கு அநுதாபிகள் வேண்டாம்.. நீ எதுக்காக என்னை இங்கே கூட்டிட்டு வந்தியோ அதைச் செய்.. அதுக்கப்புறம்..தான் நான் போகணும்..”

என்று அவள் கிட்டத்தட்ட கத்தியே விட்டாள். அவன் கையை அவளுடைய தோள்மீது வைத்தான். அவள் அதை முரட்டுத்தனமாக உதறினாள்.

“ தனியா இருக்கவிடு.. நான் தூங்கி பல நாட்களாச்சு..எப்போ அந்த இடத்துக்கு வந்தேனோ அப்பயிருந்து முழிச்சிகிட்டேயிருக்கேன்..”

“ நீ இங்கேயே தூங்கலாம்..”

“ நான் இங்கே தூங்க வரலை.. இது என் வீடும் இல்லை..”

“ அப்படின்னா..அந்த அறைதான் உன் வீடா..?”

அவன் அப்படிக் கேட்டது அவளை இன்னும் ஆத்திரமூட்டியது.

“ நிறுத்து..உம்பேச்சை.. எனக்கு வீடு கிடையாது..நீ உன் வேலையைச் செய்.. இல்லைன்னா என்னையத் திரும்பக் கூட்டிட்டுப் போ உன் பணத்தைத் திரும்ப நீ வாங்கிக்கலாம் ..”

“ சரி நான் உன்னைத் திரும்பக் கூட்டிட்டுப் போறேன்..”

அடுத்த நாள் நடந்த சம்பவத்தைக் குறித்த நேரத்தில் வராத அவனுடைய நண்பனிடம் சொன்னான், அவன் உணர்ச்சி வசப்பட்டான்.

“ அவள் இளமையானவளா..”

“ எனக்குத் தெரியாது..உண்மையில் நான் அவளைச் சரியாகப் பார்க்கக் கூட இல்லை.. என்னை அந்தப் பெண்ணிடம் கூட்டிட்டுப் போனவனைக் கொல்லணும்கிற குரூர ஆசை தான் எனக்கு இருந்தது..”

அவனுடைய நண்பன் வேறு எங்கோ செல்ல வேண்டியதிருந்ததால் அவர்கள் பிரிந்தனர். அவன் மிக மோசமாக வருத்தமடைந்தான்.

அவன் கெய்சர் கார்டன்ஸை நோக்கி நடந்தான். அவனுடைய கண்கள் அந்தப் பகுதியில் அந்த மனிதனைச் சல்லடை போட்டுத் தேடின. ஆனால் அவனை எங்கேயும் பார்க்க முடியவில்லை. ஏற்கனவே சாயங்காலம் ஆகிவிட்டது. சாலையின் குறுக்கே அந்தக் கட்டிடத்தை அவனால் பார்க்க முடிந்தது. தன்னுணர்வின்றியே அவன் அதை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

அவன் முற்றத்து வழியைக் கடந்து போனான். அந்தச் சிதிலமடைந்த படிக்கட்டுகளின் அடியில் வந்து நின்றான். நிமிர்ந்து உயரே பார்த்தான். மேலே சமதரையில் பிரகாசமான வெளிச்சம் தெரிந்தது. ஒவ்வொரு படியாக மேலே ஏறத் தொடங்கினான். அமைதியாக இருந்தது. எந்தச் சப்தமும் இல்லை.

கதவு திறந்து கிடந்தது. அவன் எட்டிப் பார்த்தான். விளக்கிலிருந்து வந்த கண்களைக் குருடாக்கும் வெளிச்சம் தான் முதலில் அவனைத் தாக்கியது. கூசும் ஒளியைத் தவிர்க்க சடக்கென்று முகத்தைத் திருப்பினான் அவன்.

வெளிச்சம் படாதபடி கைகளால் மறைத்துக் கொண்டு திறந்து கிடந்த கதவின் வழியே திரும்பவும் பார்த்தான். தரையில் ஒரு பெண் உறங்கிக் கொண்டிருந்தாள். அவளுடைய முகம் மெல்லிய துணியினால் மூடப்பட்டிருந்தது. அவளுடைய உடம்பு சீரான மூச்சுக்கேற்ப உயர்ந்தும் தாழ்ந்தும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. அவன் அறைக்குள் பாதிக்காலை வைத்தவன் கிட்டத்தட்ட அலறியே விட்டான்.

அந்தப் பெண்ணின் அருகே வெறுந்தரையில் ஒரு மனிதன் கிடந்தான். அவனுடைய தலை செங்கல்லால் நசுங்கிக் கூழாகிக் கிடந்தது.

அவன் வெளியே வேகமாக ஓடி விழுந்து மோதிப் படிக்கட்டுகளில் இறங்கினான். அவனுடைய காயங்களை நின்று பார்க்கக் கூட முடியவில்லை. ஒரு பைத்தியக்காரனைப் போல அந்த முற்றத்திலிருந்து இருண்ட தெருவுக்குள் ஓடிப்போனான்.

1 comment:

  1. சிவப்பு விளக்குப் பகுதியைப் பற்றிய கதை. விரசமில்லாமல், நம்மை நெகிழ வைக்கிறது. சரியான முடிவு. எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். தயவு செய்து படியுங்கள்; உங்கள் கருத்துக்களை பகிருங்கள். உங்களது பின்னூட்டங்கள் தான் எழுதுபவர்களை ஊக்கப்படுத்தும். நன்றி நண்பர்களே.
    நன்றி & வாழ்த்துகள் திரு உதய சங்கர்

    ReplyDelete