Thursday, 22 May 2025

குழந்தையின் கிறுக்கல்கள்

 

குழந்தையின் கிறுக்கல்கள்

உதயசங்கர்



1.   ஆதிமனிதனின் முதல் வெளிப்பாடே கிறுக்கல்கள் தான். குகைச்சித்திரங்கள் மொழி தோன்றுவதற்கு முன்பே ஓவியங்கள் உருவாகியிருப்பதைச் சொல்கின்றன. எனவே தான் குழந்தைகள் அந்த ஆதியுணர்வின் தூண்டுதலாலேயே கையில் கிடைத்தவற்றைக் கொண்டே கிறுக்கத்தொடங்குகின்றன.

2.   குழந்தைகள் கிறுக்குவதில் ஒரு சுதந்திர உணர்வை அடைகின்றனர். படைப்பூக்கத்தின் ஆரம்பவெளிப்பாடு தான் அந்தக்கிறுக்கலகள்.

3.   கிறுக்கல்களில் கிடைக்கும் சுதந்திரம் குழந்தைக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. தன்னால் ஒரு காரியத்தைச் செய்யமுடியும் என்ற தன்னம்பிக்கையைத் தருகிறது.

4.   கிறுக்கல்கள் குழந்தையின் மூளையில் முளைவிடும் சிந்தனாசக்தியின் துவக்கம் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

5.   கிறுக்கல்கள் குழந்தைகளின் மனஎழுச்சியின் வெளிப்பாடு. ஒழுங்கற்ற அந்தக்கோடுகள், கட்டங்கள், முக்கோணங்கள், வட்டங்கள், அரைவட்டங்கள் எல்லாம் குழந்தைகளுக்குப் பரவச உணர்வைத் தருபவை.

6.   குழந்தைகள் கிறுக்கும்போது அதன் முகத்தைக் கவனியுங்கள். அப்படி ஒரு தீவிரத்தன்மை தெரியும். அந்தத் தீவிரம் அந்தக்குழந்தையிடம் ஒருமையுணர்வை ஏற்படுத்தும்.

7.   குழந்தைகளைக் கிறுக்கவிடுங்கள். அந்தக் குழந்தை ஆளுமைத்திறன் கொண்டதாக மாறிவிடும்.

8.   சுவற்றிலோ, புத்தகத்திலோ, நோட்டிலோ, கிறுக்கியதற்காக ஒருபோதும் குழந்தைகளைத் திட்டாதீர்கள். குழந்தைகளிடம் முளைவிடும் படைப்பூக்கம் கருகிவிடும்.

9.   குழந்தைகள் கிறுக்குவதற்கென்று கரும்பலகை, நோட்டு, வெள்ளைத்தாள்களைக் கொடுங்கள். கிறுக்கும்போது தலையிடாதீர்கள். இப்படி எழுதவேண்டும், இப்படி வரைய வேண்டும் என்று திருத்தாதீர்கள்.

10.  குழந்தைகள் இயல்பிலேயே கற்றுக்கொள்வதில் தீராத பற்றுக் கொண்டவர்கள்.  பிறந்தநாளிலிருந்து ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு நொடியும் கற்றுக்கொண்டேயிருக்கிறார்கள். அவர்களை ஒழுங்குபடுத்துவதாக நினைத்து அவர்களுடைய படைப்புத்திறனைத் தடைசெய்யக்கூடாது.

11.  கிறுக்குகிற எல்லாக்குழந்தைகளும் ஓவியத்தைத் தங்கள் தொழிலாகக் ( பொதுவாக நமது சமூகம் கலை இலக்கியம் மீது கொண்டுள்ள அசூயை தான் காரணம் ) கொண்டுவிடுவார்களோ என்று பெற்றோர்கள் பயப்படவேண்டாம். அது தன்னை வெளிப்படுத்தும் ஒரு துவக்கநிலை. பல குழந்தைகள் வேறு வேறு ஆர்வத்தைக் கைக்கொண்டுவிடுவார்கள்.

12.  குழந்தைகள் கிறுக்குவதற்கு ஏற்ற வகையில் ஆபத்தில்லாத சுலபமாக அழிக்கக்கூடிய வண்ணப்பென்சில்களையோ, கிரேயான்களையோ கொடுங்கள்.

13.  தான் கிறுக்கியதைக் காட்டும் குழந்தையைக் கவனியுங்கள். அந்தக்கிறுக்கலை அங்கீகரியுங்கள். ஆமோதியுங்கள். பாராட்டுங்கள். குழந்தைகள் அங்கீகரித்தலை ( பெரியவர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா? ) மிகவும் விரும்புவார்கள்.

14.  குழந்தைகளை பழக்கப்படுத்தப்படாத விலங்குகளாக நினைக்காதீர்கள். அவர்களைப் பழக்கப்படுத்துவது, ஒழுக்கம், பண்பாடு, பழக்கவழக்கம், சொல்லித்தரவேண்டியது பெற்றோர், ஆசிரியர் கடமை என்று கற்பிதம் செய்யாதீர்கள். நீங்கள் அந்த ஒழுக்கம், பண்பாடு, பழக்கவழக்கம் இவற்றில் சரியாக இருங்கள். குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள்.

15.  குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை அறிமுகப்படுத்துங்கள். ஆர்வத்தைத் தூண்டுகிற புறச்சூழலை உருவாக்குங்கள். அழுத்தம் தரவோ, கண்டிக்கவோ, திட்டவோ, அடிக்கவோ செய்யாதீர்கள். ஏனெனில் ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு இணையான எதிர்ச்செயல் உண்டு.

16.  குழந்தைகள் குட்டி மனிதர்கள் என்று எப்போதும் கவனம் வையுங்கள்.

நன்றி - குழந்தைகளின் அற்புத உலகில்

வெளியீடு - வானம் பதிப்பகம்

தொடர்புக்கு - 9751549992

ந்

Tuesday, 20 May 2025

காலம் கேட்ட கதைகள்

 

காலம் கேட்ட கதைகள்

உதயசங்கர்

( காலம் சென்ற எழுத்தாளர்.ஜமிலுதீனின் புதுச்சட்டை சிறுகதை நூலுக்கு எழுதிய முன்னுரை )




வாழ்க்கையின் எந்தப்பருவத்தில் எப்படிப்பட்ட உறவுகள் வந்து சேரும் என்று யாருக்கு தெரியும்? சுழன்று விரியும் புதிர்ப்பாதையில் எப்போதும் புதிதாக சிலர் இணந்து கொள்வதும், சிலர் பிரிந்து செல்வதும் நடந்து கொண்டேயிருக்கிறது. பல சூழ்நிலைக்காரணங்களால் என்னால் உறவுகளை சரிவரப் பராமரிக்க முடிந்ததேயில்லை. கையாலாகாத நிலையில் மிகுந்த கவலைப்படுவேன். அதற்கான முழுப்பொறுப்பும் என்னை மட்டுமே சாரும். அப்படி உறவுகளைத் தொடர முடியாத என்னுடனும் சில நண்பர்கள் தொடர்ந்து நட்பைப் பேணி வருகிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு பொறுமைசாலிகளாவும், பெருந்தன்மை மிக்கவர்களாகவும், பேரன்பு மிக்கவர்களாகவும் இருக்க வேண்டும்! அப்படிப்பட்ட நண்பர்களில் முக்கியமானவர் எழுபத்தியைந்து வருட இளைஞர் திரு..ஜமீலுதீன்.

 எப்பொதாவது சில புதிய நண்பர்கள் தாங்கள் எழுதிய கதைகளைக் கொண்டு வந்து வாசிக்கக் கொடுப்பார்கள். நானும் வாசித்து விட்டு என்னுடைய பாராட்டுகளையும், அபிப்பிராயங்களையும் சில விமரிசனங்களையும் சொல்லுவேன். புதிய எழுத்தாளர்களைப் பார்த்தால் எனக்கு உற்சாகம் பொங்கிவிடும். அவர்களுடைய கதைகளை வாசிக்கும்போது ஆச்சரியமாக இருக்கும். எப்படி புதிது புதிதாக கதைக்களனில் எழுதுகிறார்கள்? அப்படி ஒரு நாள் மதுரையிலிருந்து அலைபேசியில் திரு..ஜமிலுதீன் பேசினார். செம்மலரில் வெளிவந்துள்ள அவருடைய கதையை வாசித்து விட்டு அபிப்பிராயம் சொல்லும்படி கேட்டார். அவர் தன்னை அறிமுகப்படுத்தியதிலிருந்து அவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தைப் பயன்படுத்துவதில் நிபுணர் என்ற விவரத்தையும் அறிந்து கொண்டேன். கோவில்பட்டி எழுத்தாளர் பூமணி பணி செய்து ஓய்வுபெற்ற கூட்டுறவுத்துறையில் வேலை பார்த்து ஓய்வுபெற்றவர் என்பதையும் பேச்சுக்கிடையில் அவர் சொன்னார். எல்லாவற்றிலும் மிகப்பெரிய ஆச்சரியம் அவர் இதுவரை சிறுகதை எதுவும் எழுதியதில்லை. இப்போது சமீபகாலமாகத்தான் எழுதத் தொடங்கியிருப்பதாகவும் சொன்னது தான். முதலில் சற்று அசட்டையாகத்தான் அவருடைய கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் வாசிக்க வாசிக்க அவருடைய ஆளுமை எனக்குள் மெல்ல மெல்ல வளர்ந்தது.

பல கதைகளை எழுத்துப்பிரதியாகவே எனக்கு அனுப்பி வைத்து எனது கருத்துக்களையும், இந்தக் கதையை எந்தப்பத்திரிகைக்கு அனுப்பலாம் என்ற விவரங்களையும் கேட்பார். என்னுடைய ஆலோசனைகளை அப்படியே செயல்படுத்தவும் செய்வார். அதில் புதுச்சட்டை என்ற கதை உயிரெழுத்து பத்திரிகையில் பிரசுரமானது மிக முக்கியமான நிகழ்வு. அதோடு அந்தக்கதை அந்த மாதம் பத்திரிகைகளில் வெளிவந்த சிறுகதைகளில் சிறந்ததாகவும் விருட்சம் பத்திரிகையாசிரியர் அழகியசிங்கரால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்தக்கதை மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளெழுத்து என்ற பத்திரிகையில் பிரசுரமானது. ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

திரு..ஜமீலுதீன் அவர்களுடைய பெரும்பாலான கதைகளில் விளிம்பு நிலை இஸ்லாமிய மக்களே கதாபாத்திரங்களாக வருகிறார்கள். சாணை பிடிப்பவர், மெக்கானிக், பேப்பர் போடுகிற பையன், பிளாட்பாரத்தில் குடியிருப்பவர்கள் ஒரே ஒரு உடையுடன் இருப்பவர்கள், பிச்சைக்காரர்கள், என்று சாமானிய மக்களை கதைகளில் சித்திரிக்கிறார். அத்தனை கதைகளிலும் சிறுவர்கள் அல்லது இளைஞர்கள் கடுமையான உழைப்பாளிகளாக, முயற்சியுடையவர்களாக, பிறருக்கு உதவி செய்பவர்களாக, இரக்கமுடையவர்களாக, மார்க்கவழி பிறழாதவர்களாக இருக்கிறார்கள். பல கதைகளில் இஸ்லாமிய இந்து மக்களின் உணர்வுகளின் ஊடாடல் நிகழ்கிறது. இன்றைய காலகட்டத்தின் அவசியமான மதநல்லிணக்கத்தினைச் சித்தரிக்கிற கதைகளும் இருக்கின்றன. அதிகாரவர்க்கத்தினை விமரிசிக்கிற கதைகளும், அரசியல்வாதிகளின் போலித்தனத்தைத் தோலுரித்துக் காட்டுகிற கதைகளும் இருக்கின்றன. சாதிவெறியர்களின் முகமூடியைக் கிழித்தெறிகிற கதைகளும் இருக்கின்றன. 

திரு..ஜமீலுதீனோடு நடத்திய பல உரையாடல்களின் வழியாக நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் திரு..ஜமீலுதீன் தான் எழுதுவது என்னவென்று தெரிந்து, திட்டமிட்டு எழுதுபவர். தான் எழுதிய அத்தனை கதைகளுக்கும் உரிய நியாயத்தை அவர் வைத்திருக்கிறார். இது மிகவும் அபூர்வம். எனவே சிறுகதை இலக்கணம் சற்றும் பிசகாத கதைகளை அவர் எழுதியிருக்கிறார் என்றும் சொல்லலாம்.

இன்னுமொரு முக்கியமான பண்பாக திரு..ஜமீலுதீனுடைய கதையில் வருகிறசிறுவர் சிறுமிகள், அவர்களுடைய மனநிலை, உளவியல், ஆய்வு செய்யப்படவேண்டிய ஒன்று. சமீபகாலத்தில் சிறுவர்களை இத்தனை கதைகளில் சித்தரித்த எழுத்தாளர் இவர் ஒருவராகத் தான் இருக்கமுடியும்.

 எழுத்தின் மீதான தீராத பற்றின் காரணமாக இவ்வளவு சீக்கிரத்தில் ஒரு முக்கியமான சிறுகதைத்தொகுப்பைக் கொண்டுவந்திருக்கிறார் திரு..ஜமீலுதீன். அவர் ஒரு அநுபவச்சுரங்கம். அந்தச் சுரங்கத்தின் ஒரு துளியே இந்தச் சிறுகதைத்தொகுப்பு. இன்னும் இருக்கிறது கடலளவு. இன்னும் எழுதுவார்.. எழுதிக்கொண்டேயிருப்பார்….

காலம் தனக்கான படைப்பாளிகளை தானே உருவாக்கிக் கொள்கிறது. காலம் தனக்கான குரலை தானே உரத்துப்பேசுகிறது. காலம் தனக்கான பாடலைத் தானே பாடிக்கொள்கிறது. மதவெறி தூண்டிவிட்ப்பட்டு அதில் சாமனியர்களைப் பலியிட்டு குளிர்காயந்து கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் உலவுகிற நடுநிசி நேரத்தில் மதநல்லிணக்கத்தை உரக்கப்பேசிக்கொண்டு களம் இறங்கியிருக்கிறார் திரு..ஜமீலுதீன்! அவருடைய இந்தக்கதைகள் பெரிதும் பேசப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.