Thursday 24 October 2019

கடவுளின் காதுகள்


கடவுளின் காதுகள்

உதயசங்கர்
அம்மா சுத்தமாய் தூங்குவதில்லை. விடிய விடிய முழித்துக்கொண்டிருந்தாள். பகலில் உட்கார்ந்தபடியே கோழித்தூக்கம் போட்டாள். அவ்வளவு தான். மற்றபடி அன்றாட நடைமுறைப் பழக்கவழக்கங்களில் எந்த மாற்றமுமில்லை. ஆனாலும் எனக்குப் பயமாக இருந்தது. தொடர்ந்து தூங்காமல் இருந்தால் மனநிலையின் சமநிலை மாறிவிடும் ஆபத்து இருப்பதாகப் படித்திருந்த செய்திகள் சொல்லியிருந்தன. அப்படி எதுவும் அம்மாவின் மனதில் ஏதும் மாற்றங்கள் நிகழத்தொடங்கியிருக்கிறதா. நான் அம்மாவைப் பார்த்தேன். அவள் பூஜை அறையில் மங்கலாக எரிந்து கொண்டிருக்கும் அகல்விளக்கின் வெளிச்சத்தில் சாந்தமாக சுவரில் மாட்டப்பட்டிருந்த சாமிப்படங்களைப் பார்த்தபடி படுத்திருந்தாள். அந்த மங்கலான மஞ்சள் விளக்கின் ஒளி அவளுடைய முகத்தில் படர்ந்து தனியழகைக் கொடுத்தது. அம்மாவின் உதடுகள் நடுங்கிக் கொண்டிருந்ததா அல்லது ஏதாவது முணுமுணுத்துக் கொண்டிருந்தாளா என்று தெரியவில்லை. நான் ஹாலில் உள்ள விளக்கைப் போட்டு என்னுடைய லேப்டாப்பை பார்க்கிற சாக்கில் அம்மாவைக் கவனித்துக்கொண்டிருந்தேன்.
போனவாரம் தான் என்னுடைய தங்கை சாலாவின் வீட்டிலிருந்து அம்மாவை அழைத்து வந்திருந்தேன். அப்பா இறந்ததிலிருந்து அவளாக விரும்பித்தான் சாலாவின் வீட்டுக்குப் போனாள். அதோடு என்னுடைய இருவரும் வேலைக்குப் போகும் வீட்டில் அவளைக் கவனித்துக்கொள்வதில் ஆவலாதிகள் வரலாம் என்று நினைத்தேன். அம்மா சாலா வீட்டுக்குப் போகிறேன் என்று சொன்னதும் உண்மையில் நானும் ஏஞ்சலும் நிம்மதிப்பெருமூச்சு விட்டோம். போனவாரம் சாலா பேசியபிறகு உடனே பதில் சொல்லவில்லை. ஏஞ்சல் அம்மாவை கூட வைத்துக்கொள்ளலாம் என்று தான் ஒரு இரவுக்கூடலில் சொன்னாள். அதைச் சொல்வதற்கு நான்கு நாட்கள் எடுத்துக்கொண்டாள். ஏன் என்று எனக்குத்தெரியும். நானும் ஏஞ்சலும் காதல் திருமணம் செய்ததை அப்பாவும் அம்மாவும் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பா அவருடைய முகத்திலேயே முழிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டார். நான் காதலித்துத் திருமணம் முடித்ததைவிட நான் மதம் மாறி வேங்கடேஷ் என்ற என்னுடைய பெயரை ஜோசப் என்று மாற்றியதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. காதலின் காய்ச்சலில் எந்த மருந்தையும் தின்பதற்குத் தயாராக இருந்த நான் சாதி, மதத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.
எங்கள் திருமணம் முடிந்து ஒரு வருடம் கழித்து அப்பா இறந்த அன்று தான் என்னுடைய வீட்டில் நான் கால் வைத்தேன். அப்பா கண்ணாடிப்பெட்டிக்குள் தன்னுடைய பிடிவாதமான இறுகிய முகபாவத்துடன் என் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தியபடி கிடந்தார். அவருக்கு குடும்பத்தில் யார் மீதும் திருப்தியில்லை. நான் எஞ்சினீயரிங்கில் கம்ப்யூட்டர் சையின்ஸ் எடுத்துப் படித்ததில் திருப்தியில்லை. படித்து முடித்து பிளேஸ்மெண்ட் ஆன கம்பெனியில் திருப்தியில்லை. எனக்குக் கிடைத்த சம்பளத்தில் திருப்தியில்லை. நான் மாதாமாதம் வீட்டுக்கு அனுப்பிய பணத்தில் திருப்தியில்லை. என் மீது என்றில்லை. அவருக்கு யார் மீதும் திருப்தியில்லை. சாலா விஷயத்திலும் அப்படித்தான். நான் அவருடைய அதிருப்தியான முகத்தைப் பார்த்து வருந்துவேன். எப்படியாவது ஒரு விஷயத்திலாவது அவரைத் திருப்தியடைய வைக்கவேண்டும் என்று நினைத்தேன். அது முடியவில்லை. ஆனால் சாலா கவலையே படமாட்டாள். அவள் வெடுக் வெடுக்கென்று பேசிவிடுவாள். இப்போதும் அப்படித்தான் கண்ணாடிப்பெட்டிக்குள் இந்த உலகத்தின் மீதே அதிருப்தியுடன் படுத்திருந்தார். அருகில் ஒரு நாற்காலி போட்டு உட்கார்ந்திருந்த அம்மாவின் கண்களில் ஈரப்பசையே இல்லை. உலர்ந்த கண்களுடன் அப்பாவின் முகத்தைப் பார்ப்பதும் உடனே திரும்பிக்கொள்வதுமாக இருந்தாள். ஏன் அப்பா அப்படி இருந்தார் என்று எனக்குப் புரியவில்லை.
அம்மா பேசிக்கொண்டேயிருப்பாள். யாரும் கேட்கிறார்களா? அதற்குப் பதில் சொல்கிறார்களா என்று கவலைப்படமாட்டாள். திருமணத்துக்கு முன்னால் அம்மாவின் குடும்பம் சிவகாசியில் பத்து வீட்டுக் காம்பவுண்டில் இருந்தது. அந்தத்தெருவில் குறைந்தது ஏழெட்டு காம்பவுண்ட் வீடுகள் இருக்கும். எல்லாம் ஒரு தட்டு இரண்டு தட்டு குச்சு வீடுகள். வீட்டில் பாதி தீப்பெட்டிக்கட்டைகளும், குச்சிகளும், தீப்பெட்டி அட்டைகளும், பசைச் சட்டிகளும், அடைந்து கிடக்கும். அம்மா சுப்புலட்சுமியின் வீட்டில் ஒரு கிளி இருந்தது. கிளிக்கு ஒரு பெயரும் இருந்தது. சுப்புவுக்குப் பிடித்த சிவாஜிபடமான பட்டிக்காடா பட்டணமா படத்தில் வருகிற ராக்கு என்ற பெயர் சூட்டப்பட்டிருந்தது. அம்மாவின் அப்பா ராமச்சந்திரன் அதாவது என்னுடைய தாத்தா எம்ஜிஆர் ரசிகர் இல்லை வெறியர். அவர் ஒரு தீப்பெட்டிக்கம்பெனியில் கணக்கப்பிள்ளையாக வேலைபார்த்தார். ஒரு பக்கம் வீட்டுச்சுவரே தெரியாமல் முழுக்க எம்ஜிஆரின் சினிமாப் படங்களாக ஒட்டி வைத்திருப்பார். இன்னொரு பக்கம் அம்மா சிவாஜி படங்களாக ஒட்டி வைத்திருப்பாள். வீட்டின் வெளிப்புறத்தில் அவளுடைய தம்பி ஜெய்குமார் ஜெய்சங்கர் படங்களாக ஒட்டி வைத்திருப்பான். எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர், எல்லோருமே ரத்தக்களறியாக இருப்பார்கள். சுவரில் ஊர்ந்து செல்லும் மூட்டைப்பூச்சிகளை அப்படியே நசுக்கி நசுக்கி எல்லோரும் ரத்தக்காயங்களோடு இருப்பார்கள்.
சுப்புலட்சுமியைப் போல அந்தக்கிளியும் வாயாடி. ஏதாவது பேசிக்கொண்டிருக்கும். அம்மா பேசுவதை அப்படியே திருப்பிச்சொல்லும். அமைதியாக இருந்தால்,
” ஏ.. சுப்பு.. ஏ சுப்பு…” என்று கூப்பிடும். பிள்ளைகள் கேட்பதைபோல
“ கதை சொல்லு.. கதை சொல்லு.. “ என்று கத்தும். .ராத்திரியாகிவிட்டால் காம்பவுண்டுக்கு வெளியே இருக்கும் நடைபாதையில் தான் அந்தக்காம்பவுண்டில் உள்ள மொத்தக் குடும்பமும் கிடக்கும். எல்லோரும் சுப்புலட்சுமியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பார்கள். சுப்புலட்சுமிக்கு அருகில் ராக்குவும் இருக்கும். அவள் சிவாஜி படங்களின் கதைகளை அதுவும் குறிப்பாக பாசமலர், பட்டிக்காடா பட்டணமா, சவாலே சமாளி போன்ற படங்களை ஒரு சீன் விடாமல் அப்படியே சொல்லுவாள். கேட்பவர்கள்,
“ சுப்பு.. நீ சொல்றதைக் கேட்டால் சினிமாவே பார்க்க வேண்டாம்…” என்று சொல்லுவார்கள். அவளுடைய கதையைக் கேட்டு கண்னீர் சிந்துபவர்களும் உண்டு. அவ்வளவு தத்ரூபமாகச் சொல்லுவாள். அவ்வப்போது எம்ஜிஆர் படக்கதைகளையும் சொல்லுவாள். ஆனால் கதை சொல்லும்போதே கேலி, கிண்டல், செய்து கொண்டேயிருப்பாள். விழுந்து விழுந்து சிரிப்பார்கள். ராமாயாணம், மகாபாரதக் கதைகளையும் சொல்வாள். அவளிடம் பார்ப்பதையும், கேட்பதையும் படிப்பதையும் உள்ளதை விட விரித்துச் சொல்லும் திறமை இருந்தது. பௌர்ணமியில் இரவு ஒரு மணி, இரண்டு மணி வரை தெருவில் கதாகாலட்சேபம் நடக்கும். சுப்பு தண்ணீர் குடிக்காமல் பேசுவாள். எல்லோருக்கும் வேலை செய்வதே தெரியாது. மூத்திரம் வந்தால்கூட எழுந்து போக மனம் வராமல் உட்கார்ந்து கதை கேட்பார்கள். அவரவர் வேலையை முடித்து விட்டு சுப்புலட்சுமியின் வேலைக்கும் உதவி செய்வார்கள். அந்தக்காம்பவுண்டில் எந்த ஒளிவு மறைவுக்கும் இடமில்லை. எப்போதும் சத்தக்காடாகக் கிடக்கும். சுப்புவின் குரல் எப்போதும் ஒலித்துக் கொண்டேயிருக்கும். யாரிடமாவது பேசிக்கொண்டேயிருப்பாள்.
“ கொஞ்சநேரமாவது வாய் சும்மா இருக்குதான்னு பாரு..” என்று சுப்புவின் அம்மா பெருமையுடன் மற்றவர்களிடம் சொல்வாள். பள்ளியிறுதி வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டார்கள். ஆனால் சுப்பு அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவள் அந்தக்காம்பவுண்டுக்கு மட்டுமல்ல தெருவுக்கே செல்லப்பிள்ளையாக இருந்தாள். அவளைப் பார்த்துப் பேசாதவர்களோ, அவள் பார்த்துப் பேசாதவர்களோ யாருமே இருக்கமாட்டார்கள். சுப்புவின் பத்தொன்பதாவது வயதில் அவளுடைய அத்தை மகன் மகாலிங்கத்துடன் கலியாணம் முடிந்தது. அவள் சிவகாசியிலிருந்து கோவில்பட்டிக்குக் குடிபெயர்ந்தாள். போகும்போது அந்தக்கிளியையும் கொண்டு போனாள். கிளியைப் பார்த்து அதிருப்தியில் முகம் சுளித்தான்.மகாலிங்கம். அவன் கோவில்பட்டி லாயல்மில்லில் வேலை பார்த்தான். ஷிஃப்ட் வேலை. வேலைக்குப்போன நேரம் போக மற்றநேரங்களில் தூங்கிக் கொண்டேயிருந்தான். அவன் தூங்கும்போது ஏதாவது சத்தம் கேட்டால் பழியாகக் கோபம் வந்துவிடும். அதனால் கிளிக்கூண்டை வீட்டுக்கு வெளியே  இருந்த வேப்பமரத்தில் தொங்கவிட்டாள். ராக்கு ஏதோ காட்டுக்குள் விட்டமாதிரி கூப்பாடு போடும். நல்லவேளை அந்தச் சத்தம் அவனை எழுப்புகிற அளவுக்கு இல்லை. அவன் முழிக்கும் நேரங்களில் சுப்பு பேசினாள். அவன் முகத்தைச் சுளித்தான். பதில் சொல்லவில்லை. காது கேட்காத மாதிரி இருந்தான். அவளைப் பொருட்படுத்தவில்லை. ஒரு நாளைக்கு ஒரு அதிகமாகப் பத்து வார்த்தை பேசினான். அவள் பேச ஆரம்பித்ததும் அவன் தூங்கி விடுவான். சுப்பு ஒருமுறை கேட்டதுக்கு,
“ எனக்குப் பிடிக்கலை.. நீ சளசளன்னு ஓலைப்பாயில நாய் மோண்டமாதிரி பேசுறது பிடிக்கலை.. “ என்றான். ஆனால் அதற்கெல்லாம் சுப்பு அசரவில்லை. அவன் தூங்கும்வரை பேசினாள். பேசாமல் அவளால் இருக்கமுடியாது. அவன் வேலைக்குப் போனபிறகு கிளிக்கூண்டை எடுத்து ராக்குவை வெளியே விடுவாள். ராக்கு அவளுடைய தோளில் உட்கார்ந்து கொள்ளும். அவள் பேசிக்கொண்டேயிருப்பாள். அது ம் கொட்டும். இல்லையென்றால் பேசிக்கொண்டேயிருக்கும் அவள் பின்னாலேயே நடந்து போய்க் கொண்டேயிருக்கும். அவள் இருந்தது தனிவீடென்பதால் பக்கத்தில் இருந்தவர்களே வெகுதூரத்தில் இருந்தார்கள். ஒரு நாள் அவள் அடுக்களையில் பேசிக்கொண்டே வேலை பார்க்கும்போது பின்னாலிருந்த ராக்குவின் ம் கொட்டலைக் கேட்காமல் திரும்பிப்பார்த்தாள். வாசலைத்தாண்டி ஒரு பூனையின் வாயில் ராக்கு தொங்கிக் கொண்டிருந்தது. அவள் பின்னாலேயே ஓடினாள். ஆனால் பூனை ராக்குவின் உயிரற்ற உடலைத் தூக்கிக் கொண்டு ஓடியே போய் விட்டது. அழுதாள். அழுதாள். அப்படி அழுதாள். அப்போதும் மகாலிங்கம் எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தான். இப்படி ஒரு ஊமைக்கோட்டானுடன் குடும்பம் நடத்த முடியாது என்று அவனோடு கோபித்துக்கொண்டு சிவகாசி போய்விட்டாள். அவன் கூப்பிட வரவில்லை.
திரும்பி வந்த கொஞ்சநாட்களுக்கு அவளும் அவனை மாதிரியே பேசாமல் இருந்து பார்த்தாள். நெஞ்சில் ஏதோ பாரத்தை வைத்த மாதிரியிருந்தது. நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது. மறுபடியும் பேச ஆரம்பித்து விட்டாள். அவன் பதில் சொல்வதைப் பற்றிக் கவலைப்படாமல் பேச ஆரம்பித்து விட்டாள். குழந்தைகள் பிறந்தபோது சிலவருடங்களுக்கு குழந்தைகளிடம் பேசிக் கொண்டிருந்தாள். திருமணவாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான நாட்கள் என்றால் அவை தான். குழந்தைகளும் பள்ளிக்கூடம் போகும்வரை நன்றாகத்தான் பேசிக் கொண்டிருந்தன. பள்ளிக்கூடம் போகத்தொடங்கியவுடன் குழந்தைகளின் பேச்சும் குறைந்து விட்டது. அதோடு வீட்டில் பேச்சு அப்பாவின் தூக்கத்தைக் கலைத்து விடும் என்ற பயமும், சேர்ந்து பேச்சின்றி ஆகி விட்டது. அம்மா என்ன பேசினாலும் அப்பாவைப்போலவே வெங்கடேஷும் சாலாவும் பதில் சொல்வதில்லை.
அப்பா இருந்தவரைக்கும் அவர் பேசுகிறாரோ இல்லையோ அம்மா பேசிக் கொண்டிருப்பாள். அப்பாவின் மறைவுக்குப் பிறகு தான் சாலாவின் வீட்டில் தங்கியிருந்த நாட்களில் அம்மாவுடன் பேச ஆளில்லை. சாலாவின் வீட்டில் பூஜையறைக்குள் தன்னுடைய இருப்பிடத்தை மாற்றிக் கொண்டாள். அதன்பிறகு அம்மா தன்னுடைய வாயை இறுக மூடிக்கொண்டாள். ஆனால் அவள் உள்ளுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறாள் என்பதை அவளுடைய நடுங்கும் உதடுகள் காட்டிக்கொடுத்தன. அந்தச் சமயத்தில் தான் அம்மாவின் முகத்திலும் பாதத்திலும் சிறிய வெண்புள்ளிகள் தோன்றியிருக்கின்றன.
சாலா என்னிடம் பேசியபோது சொன்னாள். அம்மாவின் நடவடிக்கையில் சில மாற்றங்கள் தெரிகிறது. இரவில் பூஜையறைக்குள்ளிருந்து பேசுகிற சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது. அவளுடைய கணவன் கேட்டிருக்கிறான். அவன் சாலாவிடம் சொல்லி இரண்டுபேரும் பூஜையறைக்குள் எட்டிப் பார்த்திருக்கிறார்கள். அம்மா சம்மணம் போட்டு உட்கார்ந்து அங்கேயிருந்த ராமர் பட்டாபிஷேகம், திருச்செந்தூர் முருகன், இருக்கண்குடி மாரியம்மன், அவர்களுடைய குலதெய்வமான நடுக்காட்டு கருப்பசாமி, சித்தி விநாயகர், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, படங்களுக்கு முன்னால் பேசிக் கொண்டிருந்தாள். என்ன பேசிக் கொண்டிருந்தாள் என்று தெரியவில்லை.
நான் என்னுடைய வீட்டுக்கு அம்மாவை அழைத்து வருமுன்னால் ஸ்டோர் ரூமாக இருந்த ஒரு அறையை பூஜை அறையாக மாற்றினேன். அம்மாவுக்காக சாமிப்படங்களையும் ஒரு குத்து விளக்கையும், அகல்விளக்குகளையும் வாங்கி வைத்தேன். என்னுடைய வீட்டில் எந்தச் சாமிப்படங்களும் கிடையாது. ஏஞ்சலின் கழுத்தில் தொங்கும் சிலுவையைத் தவிர மத அடையாளங்கள் எதுவும் கிடையாது. நான் நாத்திகன் இல்லை என்றாலும் அனுதினமும் கடவுளரை வணங்குவது தான் ஆத்திகம் என்றால் நான் ஆத்திகனும் இல்லை. வருடத்துக்கு ஒரு முறையோ இரண்டு முறையோ சர்ச்சுக்கும், சுற்றுலா சென்றால் அங்கேயிருக்கும் கோயில்களுக்கும் செல்கிற நடைமுறை மனிதன். ஏஞ்சலின் அலுவலகத்துக்கு மூன்று மதங்களின் சாமிகளும் இருக்கிற மாதிரி ஒரு படம் வேண்டும் என்றாள். அதையும் சேர்த்து வாங்கியிருந்தேன்.
அம்மா வீட்டுக்கு வந்ததும் முதல்வேலையாக பூஜையறையை ஒழுங்குபடுத்தினாள். என்றால் நான் மாட்டியிருந்த சாமிகளின் வரிசையை மாற்றினாள். விளக்கு வைத்திருந்த திசையை மாற்றினாள். தரையை மொழுகி கோலம் போட்டாள். ஊதுபத்தி, சாம்பிராணி, சூடன், இவைகளைப் பயன்படுத்தினாள். தோட்டத்தில் இருந்த செவ்வரளிச்செடியிலிருந்து பூக்களைப் பறித்துக் கட்டினாள். என்னிடம் விளக்குத்திரியும் எண்ணெயும் வாங்கி வரச்சொன்னாள். குத்துவிளக்கின் நான்கு திசைகளிலும் திரிகளைப் போட்டு எண்ணெய் ஊற்றி தீபங்களை ஏற்றினாள். சாமிப்படங்களுக்கு சந்தனமும் குங்குமமும் வைத்தாள். எல்லாப்படங்களின் தலையிலும் ஒரு செவ்வரளிப்பூவைச் சூட்டினாள். எப்போதும் வாய் முணுமுணுத்துக்கொண்டிருந்தது. முகத்தில் ஒரு அபூர்வமான திருப்தி இருந்தது. இந்த ஏற்பாட்டில் ஏஞ்சலின் அலுவலகத்துக்கென்று வாங்கியிருந்த மும்மதப்படமும் ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டது. அம்மாவின் முகத்தில் அந்தப் படங்களைப் பற்றி எந்த உணர்வுமில்லை. அவளுடைய உரையாடலில் யேசுவும், அல்லாவும் சேர்ந்து கொண்டார்கள். நான் அதைக் கழட்டி விடலாம் என்று ஏஞ்சலிடம் சொன்னேன். அவள் ஏற்கனவே அம்மாவின் பக்தி நடவடிக்கைகளினால் ஈர்க்கப்பட்டிருந்தாள். அம்மா செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் மிகுந்த பவித்திரத்தோடு அனுசரித்தாள். அதனால் அந்தப் படத்தை எடுக்கவேண்டும் என்ற என்னுடைய கோரிக்கையை அவள் நிராகரித்தாள். பதிலாக அவளும் பூஜையறையில் நின்று எல்லாசாமிகளையும் கும்பிட ஆரம்பித்தாள்.
என்னுடைய வீட்டுக்கு அம்மா வந்த பிறகு அவளுடன் தினம் கொஞ்சநேரம் செலவு செய்யவேண்டும் என்று நினைத்திருந்தேன். அப்படியே முயற்சியும் செய்தேன். அம்மாவிடம் பேச முயற்சித்தபோது அம்மா கேட்டதுக்கு மட்டும் பதில் சொன்னாள். உடனே அந்த இடத்தை விட்டு போகவேண்டும் என்பதைப்போலவோ, விட்டு விட்டுப்போன உரையாடலைத் தொடர வேண்டும் என்ற அவசரத்துடனோ தான் பேசினாள். பலநேரம் இருவருக்குமிடையில் கனத்த மௌனம் உட்கார்ந்திருந்தது. எனக்குச் சலிப்பு வந்தது. அம்மாவை அவள் போக்கில் விட்டு விட்டேன். அம்மாவின் உடலில் வெண்புள்ளிகள் பரவ ஆரம்பித்தன. அம்மா அந்த வெண்புள்ளிகளைக் கண்டுகொள்ளவில்லை. எனக்கு அம்மாவின் கோதுமை நிறம் மாறி சிறுத்தைப்புலி மாதிரி புள்ளிகளுடன் இருக்கிற விநோதமான தோற்றம் ஒவ்வாமலிருந்தது. தோல் நோய் நிபுணரிடம் சென்று காட்டினோம். அவர் வெண்புள்ளி நோயைப் பற்றி ஒரு வகுப்பு எடுத்தார். அம்மா அவர் முகத்தையே பார்க்கவில்லை. அங்கே மாட்டியிருந்த கோகுலகிருஷ்ணன் படத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போதும் அவளுடைய உதடுகள் முணுமுணுத்துக் கொண்டிருந்தன.
அம்மா மங்கலான அந்த மஞ்சளொளியில் முகம் மலர்ந்து காணப்பட்டாள். அவளுடைய முகம் ஒவ்வொரு சாமியையும் நோக்கித் திரும்பியது. உதடுகளிலிருந்து ஏதேதோ சொற்கள் இடையறாத அருவியைப் போலக் கொட்டிக்கொண்டிருந்தன. என்ன பேசுகிறாள் என்று தெளிவாகவில்லை. அவ்வப்போது ஒரு தியானம் போல கண்களை மூடி மூடித் திறந்து கொண்டிருந்தாள். பேசுவதற்கிடையில் சிறு இடைவெளி விடுவாள். அந்த இடைவெளிக்கப்புறம் சரிதான் என்பதைப் போல தலையாட்டுவாள். சிலசமயம் புன்முறுவல் பூப்பாள். சிலசமயம் புருவங்களை உயர்த்துவாள். சிலசமயம் முகத்தைச் சுளிப்பாள். அவள் முகத்தின் அபூர்வமான பாவங்களை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். நான் கவனித்துக்கொண்டிருக்கிறேன் என்று தெரியுமோ தெரியாதோ அம்மா சுற்றிலும் என்ன நடக்கிறது என்ற உணர்வே இல்லாதமாதிரி அவள் ஒரு தனி உலகத்தில் இருந்தாள்.
அன்று இரவு பூஜையறையில் படுத்து கடவுளரோடு பேசிக் கொண்டிருந்த அம்மாவை எழுப்பினேன். அம்மா எழுந்து உட்காராமல் படுத்தபடியே,
“ என்னடா வெங்கி..”
“ என்னம்மா பண்ணிகிட்ருக்கே? “
“ பேசிக்கிட்டிருக்கேன்..”
“ யாரோட பேசிக்கிட்டிருக்கே? “
“ இது கூட தெரியலையா.. கடவுளோட பேசிக்கிட்டிருக்கேன்..”
“ கடவுளோடயா? “
“ ஆமாடா.. ஏஞ்சலோட கடவுளோட கூட பேசினேன்..”
“ அவங்க பேசுறாங்களா? “
“ அப்புறம்? “
“ ஏம்மா ராத்திரியில தூங்குற சாமிகளைத் தொந்திரவு பண்றே..? “
“ டேய் நான் எங்க தொந்திரவு பண்றேன்.. அவங்களுக்குத் தூக்கம் வராமத்தான் என்னையக் கூப்பிட்டுப் பேசச்சொல்றாங்க.. மத்தவுங்க மாதிரி இல்லைடா.. சொல்றதை காது கொடுத்துக் கேக்கறாங்கடா ” அதைச் சொல்லும்போது அம்மாவின் கண்களில் ஒரு மின்னல் தோன்றி மறைந்தது.
எனக்குக் கண்ணில் உப்புக்கரித்தது.

நன்றி - தமிழ் இந்து தீபாவளி மலர்




No comments:

Post a Comment