Thursday, 18 July 2019

சிட்னி எங்கே?


சிட்னி எங்கே?
பாவ்லா பிக்காசோ
தமிழில் – உதயசங்கர்
சிட்னி ஒரு சிறிய ரெட்டைவால் குருவி. அதனுடைய இறகுகளில் அழகிய நீலநிறம் படர்ந்திருந்தது. அதன் மார்பு வெண்மை நிறத்தில் இருந்தது. எல்லா இரட்டைவால் குருவிகளையும் போல சிட்னியும் உயரே உயரே பறக்கவும் வட்டமடிக்கவும் விரும்பியது.
வசந்த காலத்தில் பிறந்த சிட்னி, கோடைகாலம் நெருங்க நெருங்க பறப்பதில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றது. கோடைகாலம் இலையுதிர்காலமாக மாறிய போது சிட்னி மிகுந்த தைரியமும் துணிச்சலும் கொண்ட பறவையாக மாறிவிட்டது. வானத்தில் மிக லாகவமாகப் பறந்து விளையாடியது. அதனுடைய பெற்றோர்கள் மிகுந்த கவலையுடன்,
“ இன்றுமாலை நாம் அனைவரும் நீண்ட பிரயாணம் போகிறோம். நீ எங்கும் போய்விடாதே..”
“ கவலைப்படாதீர்கள்.. நான் தூரமாய் எங்கும் போக மாட்டேன்..” என்று சிட்னி சொன்னது. தொலைபேசிக்கம்பிகளில் மற்ற இரட்டைவால் குருவிகள் எல்லாம் ஒவ்வொன்றாய் வந்து சேர்ந்து கொண்டிருந்தன.
அவர்கள் போகவேண்டிய வழியைப் பற்றிச் சளசளவென்று பேசிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு இந்தப்பிரயாணம் மிகுந்த மகிழ்ச்சி தருவதாக இருந்தது. திடீரென்று சிட்னியின் கண்களில் ஏதோ தெரிந்தது. அருகிலிருந்த மாடி மீது பளீரென்ற நிறத்தில் ஒரு தும்பி.
ஒரு புகைபோக்கியிலிருந்து மற்றொரு புகைபோக்கிக்குப் பறந்து கொண்டிருந்தது. அப்படி அது பறக்கும்போது சூரியன் தும்பியின் சிறகுகளில் வானவில்லின் அத்தனை நிறங்களையும் அள்ளித்தெளித்து விளையாடினான். சிட்னி அதைக் கவனித்துக் கொண்டிருந்தது. பின்னர் மாடியிலிருந்து கிளம்பி தும்பியை விரட்டியது. தும்பி எப்படியெல்லாம் பறக்கிறதோ அப்படியெல்லாம் பறந்து அதைப் பழிப்புக் காட்ட முயற்சித்தது. ஆனால் ஒரு நொடி அதன் கண்கள் வேறுபக்கம் திரும்பியபொழுதில் தும்பி எங்கோ மறைந்து விட்டது.
“ ஓகோ கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகிறதா..? “
என்று நினைத்துக் கொண்ட சிட்னி கட்டிடத்தின் தாழ்வாரத்தில் இருக்கிறதா என்று பார்க்க தலைகீழாகப் பாய்ந்து சென்றது.
“ ஒருவேளை அந்தப் புகைபோக்கிக்குழாய்க்குள் ஓளிந்திருக்குமோ..” என்று நினைத்தது. உடனே நீண்ட மூச்சிழுத்து விட்டு தலைகீழாக புகைபோக்கிக்குள் பாய்ந்தது. திடீரென்று எல்லாம் கருப்பாகி விட்டது. சிட்னியின் கண்களில் கரிப்புகை சூழ்ந்து விட்டது. மேகம் போன்ற கனமான புகை வானத்தை நோக்கி புரண்டு எழுந்து வந்து சிட்னியின் வாய்க்குள் போய்விட்டது. ஒரு நொடி அந்த இரட்டைவால் குருவிக்கு மூச்சு விடவே முடியவில்லை. புகைபோக்கியின் பக்கச்சுவர்களில் மோதி அதனுடைய சிறகுகளில் காயம் ஏற்பட்டது. அதற்கு தான் எந்த வழியில் போய்க் கொண்டிருக்கிறோம் என்று தெரியவில்லை. இதிலிருந்து வெளியே போகவேண்டுமானால் வெளிச்சம் வரும் திசையை நோக்கிப் பறக்கவேண்டும் என்று உணர்ந்தது. ஒன்றிரண்டு தடவை முயற்சித்தபிறகு ஒரு வழியாக சிட்னி அங்கிருந்து விடுதலையாகி வெளியே வந்தது.
நீண்ட பெருமூச்சு விட்டு சுற்றும் முற்றும் பார்த்தது. திடுக்கிட்டுப்போனது. நினைத்ததை விட பெரிய கஷ்டத்தில் அது மாட்டிக்கொண்டது.. நகரத்திலிருந்த ஏராளமான புகைபோக்கிகளில் வேறு ஏதோ ஒரு புகைபோக்கி வழியே வெளியேறிவிட்டது. அது நகரம் முடிகிற இடம். இதுவரை அந்த இடத்துக்கு சிட்னி வந்ததே இல்லை. அதனால் சிட்னியின் அப்பா, அம்மாவையும் நண்பர்களையும் பார்க்கமுடியவில்லை. வேறு ஏதேனும் இரட்டைவால் குருவிகளைப் பார்க்கலாம் என்றால் அதுவும் முடியவில்லை. சிட்னி காணாமல் போய்விட்டது. சிட்னிக்கு அழுகை அழுகையாக வந்தது.
கண்ணுக்கெட்டிய தூரம்வரை அடுக்குமாடிக்கட்டிடங்களும் தொலைக்காட்சி ஆண்டெனாக்களும் தான் தெரிந்தது. பின்னால் மேகத்திலிருந்து ஒரு சிட்டுக்குருவி தோன்றியது. சிட்னி அதனிடம் பறந்து சென்றது.
“ நீ வேறு ஏதாச்சும் இரட்டைவால் குருவிகளைப் பார்த்தாயா? “
“ நீ எதற்காக அதைக் கேட்கிறாய்? “
“ நாங்கள் அனைவரும் இன்று இரவு தொலைபேசிக்கம்பிகளில் கூடி வேறு நாட்டுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தோம்…”
என்று விளக்கமாகக் கூறியது. உடனே சிட்டுக்குருவி,
“ நீ இரட்டைவால் குருவி இல்லையே நீ ஒரு காகம்..”
என்று ஏளனமாகச் சிரித்துக்கொண்டே சொல்லி விட்டுப் பறந்து போனது. சிட்னி திடுக்கிட்டது. பின்பு ஒரு கருப்புப்பறவையிடம் போய் எங்காவது இரட்டைவால் குருவிகளைப் பார்த்ததா என்று கேட்டது.
“ கருப்புப்பறவையான நீ ஏன் அதைக் கேட்கிறாய்? “ என்று அந்தக்கருப்புப்பறவை கேட்டது. ஆனால் சிட்னிக்கு அந்தக் கருப்புப்பறவை என்ன சொல்கிறது என்று புரியவில்லை. சிட்னி கவலைப்பட்டது. அதன் பெற்றோர்கள் அது வீடு சென்று சேரும்போது கோபப்படுவார்களே.
அதைவிட மோசம்! ஒருவேளை அவர்கள் அனைவரும் அதனை விட்டு விட்டு பறந்து போயிருந்தால்? சிட்னியால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. பயந்து விட்டது. பறந்து சென்று நிலாவைப் பார்த்து ஆடிக்கொண்டிருந்த ஒரு ஆந்தையின் அருகில் சென்று அமர்ந்தது. உடனே ஆந்தை,
“ யார் நீ..? “ என்று கேட்ட ஆந்தை.
“ உன்னை ஒரு தடவை நன்றாகப்பார்..” என்று கூச்சலிட்டது.
“ நான் நான் ஒரு இரட்டைவால் குருவி..” என்று சிட்னி பதில் அளித்தது.
“ உன்னைப்பார்த்தால்.. நீ காகத்தைப்போலவே இருக்கிறாய்…உன்னுடைய அழகிய நீலநிற வெள்ளைநிற இறகுகள் முழுவதும் கரிப்புகை மூடியிருக்கிறது…” என்று கூறியது ஆந்தை.
பெருங்குழப்பத்தில் மாட்டிக்கொண்டோம். தன்னுடைய குடும்பத்தாரால் கூடத் தன்னை அடையாளம் காணமுடியாது என்று நினைத்தது. துயரத்தோடு பறந்து போய்க்கொண்டிருந்தது அந்தச் சிறிய இரட்டைவால் குருவி. ஒரு குன்றின் உச்சிமீது பறந்தபோது அதற்கு தன்னுடைய பெற்றோரும் நண்பர்களும் இருக்கிற இடம் தெரிந்தது. எங்கே அது பிரிந்து வந்ததோ அதே இடத்திலேயே அவர்கள் பொறுமையாகக் காத்திருந்தார்கள்.
கரிப்புகை இறகுகளோடு இருந்த சிட்னியை அம்மா உடனே அடையாளம் கண்டுகொண்டது. மற்ற இரட்டைவால் குருவிகளும் மகிழ்ச்சியில் கீச்சிட்டன. தங்களுடைய இறகுகளைச் சிலுப்பிப் பிரயாணத்துக்கு தயாராகின.
கடைசியில் சிட்னிக்கு ஏன் இரட்டைவால் குருவிகள் தங்களுடைய நீண்ட பிரயாணத்தைச் சேர்ந்து மேற்கொள்கின்றன என்று புரிந்தது. அந்தக் கணத்திலிருந்து அது எப்போதும் ஒற்றுமையே பாதுகாப்பு என்ற விஷயத்தை மறப்பதே இல்லை.
நன்றி - மாயாபஜார்


1 comment:

  1. ஒற்றுமையே பாதுகாப்பு என எத்தனை பேர் உணர்ந்துள்ளனர்.......

    ReplyDelete