Wednesday 28 March 2012

பச்சை நிழல்

grassdew

எப்போதோ, யாரோ, தண்ணீர் சுமந்து கொண்டு போகும் போது சிந்திய ஒரு துளியில் அந்தப்புல் பூமிக்கு உள்ளேயிருந்து வெளியே தலையை நீட்டியது. இளம்பச்சை நிறத்தில் காற்றில் ஆடி ஒளி வீசியது. புல் மெல்லக் கண்களைத் திறந்தது.சுற்றிலும் வெட்டவெளி. ஒரு மரமோ, ஒரு செடியோ இல்லை. ஒரு ஆடோ, ஒரு மாடோ, இல்லை. ஒரு பறவையோ ஒரு பூச்சியோ இல்லை.


அது மட்டுமா? மலர்கள் இல்லை.வண்ணத்துப்பூச்சிகள் இல்லை. மனிதர்களும் இல்லை. கண்ணுக்குத் தெரிந்த தூரம் வரை காய்ந்து போன பொட்டல்வெளி.

அந்தப் புல்லுக்கு ஒன்றும் புரியவில்லை. வேறு உலகத்தில் பிறந்து விட்டோமா? என்ன ஆச்சு எல்லோருக்கும்? எங்கே போனார்கள்? முதலில் உற்சாகமாய் இருந்தது அந்தப்புல். நேரம் ஆக ஆகத் தனிமை அதை வாட்டியது. பசியும் எடுத்தது.

மேலே சூரியன் நெருப்பாய் தகித்தான். வெப்பம் தாங்க முடியவில்லை. புல் தன்னுடைய வேரினால் பூமிக்குள் துழாவியது. ஈரப்பதமே இல்லை. தாகம் உயிரை வறட்டியது. தொண்டை அடைத்தது. புல் சுற்றும்முற்றும் பார்த்துக் கதறியது. யாராவது ஒரு சொட்டு உயிர்த் தண்ணீர் ஊற்றுங்களேன் என்று அழுதது.

நேரம் ஆக ஆக அதனால் நிமிர்ந்து நிற்க முடியவில்லை. மேலும் மேலும் பலகீனமாகிக் கொண்டே வந்தது. உடல் குனிந்து வளைந்தது. இப்படிப் பிறந்து துன்பப் படுவதை விட  பிறக்காமலே இருந்திருக்கலாம் என்று நொந்து  கொண்டது.

என்ன ஆச்சு எல்லாவற்றுக்கும் என்று தெரியவில்லை. பெரிய வனங்கள் எங்கே  போயின? அருவிகள் எங்கே போயின?, சுனைகள் எங்கே போயின? நதிகள் எங்கே போயின?  ஆறுகள் எங்கே போயின? குளங்கள் எங்கே போயின? ஏரிகளும், கண்மாய்களும் என்ன ஆயின? புல்லுக்கு யோசிக்கவே முடியவில்லை.

இது தான் உலகத்தின் அழிவா? நான் அந்த அழிவின் ஆரம்பமா? இல்லை முடிவா? மரணம் நிச்சயம் என்று புல் உணர்ந்தது. அதன் நினைவு தவறிப் போகும் வேளையில் குழந்தைகளின் பேச்சுக்குரல் கேட்டது. அதனால் நிமிர்ந்து கூடப் பார்க்கமுடியவில்லை. குழந்தைகள் வரும் காலடியோசை கேட்டது. அருகில் வந்ததும் காலடியோசை நின்று  விட்டது.

“லட்சுமி இங்க பாரு.. இங்க பாரு..புல்லு முளைச்சிருக்கு..”

“ஆமா சுகந்தி நேத்து இந்தப் பக்கம் தண்ணி எடுத்துக்கிட்டு போகும்போது இல்லையே..”

”நாம கவனிச்சிருக்க மாட்டோம்..எவ்வளவு அழகா. பச்சைப்பசேல்னு இருக்கு பாத்தியா?”

”ஆனா வாடிப் போயிருக்கே..செத்துப் போயிரும் போல இருக்கே..”

“அய்யய்யோ…நாம இதைச் சாகவிடக் கூடாது..எப்படியாவது காப்பாத்தணும்..நாம பார்க்கிற முதல் புல் இதுதானே…இதுக்குக் கொஞ்சம் தண்ணீ ஊத்துவோம்”

“சரி ஆனா எப்படி..குடிக்கிறதுக்கே தண்ணி இல்லாம எவ்வளவு தூரம் நடந்து போய் எடுத்துட்டு வாரோம்..அதுவே காணமாட்டேங்கு..பலநாள் தண்ணியில்லாம கஷ்டப்படறோம்.”

“உண்மை தான்..எங்க தாத்தா சொல்வாரு..இங்கே ஒரு காலத்தில் பெரிய பெரிய காடுகளும் தண்ணீர் ஓடைகளும் நதிகளும் இருந்திச்சாம்…”

“அப்படியா..காடு…நதி.. அப்படின்னா என்ன?”

”அது வந்து..அது வந்து..இந்தப் புல் மாதிரி நிறையச் சேர்ந்து இருக்கிறது காடுன்னு நினைக்கிறேன்..பெரிய மரங்களும் இருக்குமாம்..அதெல்லாம் உயரமா..நிறைய இலைகளோடு இருக்குமாம்..நதின்னா தண்ணி எப்பவும் ஓடிக்கிட்டே இருக்கும்னு தாத்தா சொல்லியிருக்காரு..”

”அப்படின்னா..நாம..தினசரி தண்ணி எடுத்துட்டு வரும்போது..இந்தப் புல்லுக்குக் கொஞ்சம் தண்ணி ஊத்துவோம்..அப்ப இது வளந்து பெரிசாகி குட்டி போட்டு நிறையப் புல் முளைச்சி பெரிய காடாயிரும்ல..”

“ஆமா அந்தக் காட்டில குருவிகள் இருக்கும்..அணில்கள் இருக்கும்..பூக்கள் இருக்கும்..வண்ணத்துப்பூச்சிகள் இருக்கும்..காடு இருந்தாத்தான் மழை பெய்யும்னு நம்ம புத்தகத்தில போட்டிருக்கில்ல..மழை பெய்ஞ்சி நிறையத் தண்ணீ வரும். நாம தண்ணிக்காக இவ்வளவு தூரம் நடக்கவேண்டாம்…”

”ஆமாம்” என்று தலையாட்டினாள் சுகந்தி. உடனே தலையிலிருந்த குடத்தை இறக்கி ஒரு கை நீர் அள்ளி அந்தப் புல்லின் தலையில் ஊற்றினாள் லட்சுமி. சுகந்தியும் தன் குடத்திலிருந்து ஒரு கை நீர் அள்ளி ஊற்றினாள்.

புல்லின் உயிர் நனைந்தது. மெதுவாக நினைவு திரும்பியது. ஈரம் பட்டதும் மெல்லக் கண் விழித்தது புல். தலையாட்டிக் கொண்டே நிமிர்ந்தது.

“நாளைக்கும் மறக்காம தண்ணி ஊத்தணும் என்ன..?”

“சரி”

குழந்தைகள் சிரமத்துடன் குடங்களை மீண்டும் தலையில் வைத்துக் கொண்டு மெல்ல  நடந்தார்கள். புல்லுக்கு ஆனந்தம். அதன் ஞாபகத்தில் பழைய வனங்கள் வந்து போயின. இந்தக் குழந்தைகளின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்று உறுதி கொண்டது. அப்போது ஒளிர்ந்த மாலை காலத்திற்குப் வெயிலில் காலத்திற்குப் வெகு பின்பு, ஒரு புல்லின் பச்சைநிழல் ஒத்தையாய் பூமியில் நீண்டு விழுந்தது.

2 comments:

  1. நம்மின் சுயம்பெருத்த ஆசைக்கு இப்படியான சூழலை வரும் சந்ததிகள் சந்திக்கத்தான் போகிறார்கள்

    ReplyDelete
  2. கவிதை நடையி்ல் அமைந்த கதை...

    ReplyDelete