Sunday 25 March 2012

சின்னப்பாண்டியின் அறம்

abstract
நான் ஆறாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்பிற்குப் போனபோது அங்கே சின்னப்பாண்டி ஏற்கனவே இரண்டு வருடங்களாக இருந்தான். அதே பெஞ்சில், அதே இடத்தில். என்னுடைய வீடு இருந்த முத்தானந்தபுரம் தெருவையும், சின்னப்பாண்டியின் வீடு இருந்த கன்னிவிநாயகர் கோவில் தெருவையும் ஒரு இரண்டடிச் சந்து இணைத்தது. பள்ளிக்கூடம் எதிர்பார்த்த திறமை (!) சின்னப் பாண்டியிடம் இல்லை. அதே போல சின்னப்பாண்டியின் திறமையை எதிர்கொள்கிற வலு பள்ளிக்கூடத்துக்கு இல்லை. எனவே பள்ளிக்கூடமும் சின்னப்பாண்டியும் பரஸ்பரம் கெக்கலி கொட்டிக் கொண்டே நாட்களைக் கடத்தினர். இரண்டு பேரும் அதைப் பற்றிக் கவலைப்படவும் இல்லை. அநேகமாக எல்லாவகுப்புகளிலும் சின்னப்பாண்டி அடி வாங்கினான். அவனை அடிப்பதை ஆசிரியர்கள் ஒரு பொழுது போக்காகவும், அன்றாடக் கடமையாகவும் மாற்றிக் கொண்டார்களோ என்று தோன்றுகிற மாதிரி ஒவ்வொரு நாளும் கழியும். அவ்ன் ஒரு கேள்விக்கும் ஆசிரியர்கள் எதிர்பார்க்கிற மாதிரி சொன்னதில்லை. அப்படியே தக்கிமுக்கிச் சொன்னாலும் வார்த்தைக்கு வார்த்தை புத்தகத்தில் இருக்கிற மாதிரியே இருக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் வற்புறுத்துவார்கள். அடி வாங்கும் போது “சார்..சார்” என்று கத்துவானே தவிர ஒரு சொட்டுக் கண்ணீர் வராது. வகுப்பைச் சுற்றிச் சுற்றி அவன் ஓட ஆசிரியர்களும் அசராமல் ஓடி ஓடி அடிப்பார்கள். அந்தக் கூத்தைப் பார்த்து வகுப்பே விழுந்து விழுந்து சிரிக்கும்.
           
அடி விழுந்து முடிந்த அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் சின்னப்பாண்டி வழக்கம் போல சிரிக்க ஆரம்பித்து விடுவான். இந்த அடி, உதை, நிமிட்டாம்பழம், காதுமுறுக்கு, எல்லாம் பி.ட்டி. பீரியடு வரைக்கும் தான். அந்த வகுப்பில் அவன் தான் பிஸ்தா. மற்ற பயல்கள் எல்லாம் வாயும் மெய்யும் பொத்தி நிற்பார்கள். விளையாடுவதற்கென்றே பிறந்த மாதிரி இருப்பான் சின்னப்பாண்டி. எந்த விளையாட்டு என்றாலும் அவனுடைய நெளிவுசுளிவும், நேர்த்தியும், திறமையும், வேறு யாருக்கும் வராது. வகுப்பறையில் ஏற்பட்ட அத்தனை அவமானங்களையும் அவன் அங்கே துடைத்து விடுவான். விளையாடும் போது அவன் வேறு ஒரு ஆளாய் மாறி விடுவான். நெஞ்சிலிருந்தே முளைத்த மாதிரி நீண்ட கால்கள், ஒட்டிய பாம்பு வயிறு, மெலிந்த கைகள், அவன் ஒரு எட்டு எடுத்து வைத்தால் நாங்கள் மூணு எட்டு எடுத்துவைக்க வேண்டியதிருந்தது. அப்படி ஒரு நீண்ட சரீரம்.  எப்போதும் ஒரு புன்னகை மீதமிருக்கும் முகம். விளையாடும் போது அபூர்வமான அழகோடு இருக்கும்.
           
பள்ளி விளையாட்டுகளில் அவன் தான் கேப்டன். அவன் இருக்கும் அணி ஒரு போதும் தோற்றதில்லை. பல சமயம் எங்களுடைய அழுகிணி ஆட்டம் பிடிக்காமல், எங்களோடு விளையாடாமல் பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு ( பெரிய பத்து), அண்ணன்களோடு விளையாடுவான். சின்னப்பாண்டி அடி வாங்காத ஒரே வகுப்பு இது தான். அது மட்டுமல்ல, பி.ட்டி. ஆசிரியர் அவனை செல்லங்கொஞ்சுவார். குட்டைக் கத்தரிக்காய் என்ற பட்டப் பெயரோடு பள்ளிக்கூடத்தில் வலம் வந்து கொண்டிருந்த எனக்கு அவன் உடனே ஹீரோ ஆகி விட்டான்.


வாரவிடுமுறை நாட்களில் வீட்டிலேயே குட்டி போட்ட பூனை மாதிரி அம்மாவுக்குப் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்த நான் எல்லை தாண்டி சின்னப்பாண்டியோடு விளையாடுவதற்காகவே அவனுடைய தெருவுக்குப் போனேன். அங்கே அவனுக்குப் பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது. ஐந்து வயது பொடிப்பயல்களிலிருந்து அவனை விட மூத்த பயல்கள் வரை அவனுக்குப் பின்னால் சொக்கிப் போய்த் திரிந்தார்கள். அங்கே அவன் மகத்தான சாகசவீரனாக இருந்தான்.


குட்டிச் சுவர்களைத் தாண்டுவது, எவ்வளவு உயரமான சுவர்களிலும் ஏறி விடுவான், எவ்வளவு உயரமான சுவரிலிருந்தும் குதிப்பான். அஞ்சாறு பயல்களை குனிய வைத்து “சொர்க்” அடித்துத் தாண்டிக் குதிப்பான். எறிபந்தில் ஒரு தடவை கூட யாரும் அவனை எறிந்ததில்லை. பீட்டர் லாஸ்ட் என்ற ஓடு அடுக்கிற விளையாட்டில் அவன்தான் எப்போதும் ஜெயித்தான். கோலி விளையாட்டுகளில் எல்லாப் பயல்களின் கோலிக்குண்டுகளையும் அவனே விளையாடி ஜெயிப்பான். கடைசியில் திருப்பிக் கொடுத்து விடுவான். பம்பரக்குத்தில் ஆக்கர் வைத்தால் அவ்வளவு தான் பம்பரம் உடையாமல் தப்பிப்பது கடினம். கிட்டிப்புள் விளையாட்டில் ஒரே தடவையில் பத்து தடவை அடித்து நூறு நூறாய் எண்ணுவான். செதுக்கு முத்தில் அவன் செதுக்கினால் வட்டத்துக்குள் ஒரு முத்தும் அடுத்தவனுக்கு மிஞ்சாது. பச்சைக்குதிரை, பாண்டி, நொண்டி, ரைட்டா தப்பா, கிளியாந்தட்டு, ஆடுபுலி, கள்ளம்போலிஸ், என்று எந்த விளையாட்டிலும் அவன் சோடை போகவில்லை. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பள்ளிக்கூடத்தில் இருந்த சின்னப்பாண்டி வேறு. தெருவில் விசுவரூபம் எடுத்து நின்றான். என்னுடைய பார்வையில் இருந்த தொழுதேற்றும் உணர்வை அவன் தெரிந்து கொண்டதாலோ என்னவோ அவனுக்கும் என்னை மிகவும் பிடித்துப் போய் விட்டது. விளையாட்டுக்கு உத்தி பிரிக்கும்போது என்னை அவன் அணியிலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்வான். அப்படியே எதிர்பாராவிதமாக எதிரணிக்குப் போய் விட்டால் என்னிடம் மட்டும் கொஞ்சம் மென்மையாக நடந்து கொள்வான். எறி பந்தாக இருந்தால் என் மீது எறிய மாட்டான். இப்படி எனக்கும் அவனுக்குமிடையில் மானசீகமான ஒரு பிரியம் இலை விட்டு, கிளைவிட்டு, பூப்பூவாய் பூத்துக் கொண்டிருந்தது.
           
இப்போதெல்லாம் நான் வீட்டிலேயே இருப்பதில்லை. எப்போதும் சின்னப்பாண்டியின் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தேன். அந்த நாட்களின் கட்டற்ற . சுதந்திரம்….இனி வருமா? அது வேறு காலம்.. அது வேறு உலகம்..அப்போது இந்த நாட்களும் கடந்து போய் விடும் என்று கனவில் கூட நினைத்ததில்லை. எத்தனை அந்நியோந்யம்! எத்தனை பிரியம்! எத்தனை சண்டை! எத்தனை சச்சரவு! எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்ட அந்த ஈரம் ததும்பும் மனசு எங்கே? ஒவ்வொரு நாளும் இன்பமாய் கடந்து சென்றதே. இப்போது நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. குழந்தைமை…என்ன அற்புதம்.. எத்தனை இனிமை..
               
அடுத்த ஆண்டில் நான் எட்டாவது வகுப்புக்குப் போய் விட்டேன். சின்னப்பாண்டி பள்ளிக்கூடத்தோடு ஒத்துப்போக முடியாமல் நின்று விட்டான். அவனுடைய அப்பா அவனை ஒரு பலசரக்கு கடையில் வேலைக்குப் போட்டு விட்டார். அதன் பின்பு எங்களுடைய சந்திப்பு குறைந்து விட்டது. அவனுக்கு ஞாயிற்றுக்கிழமை அரை நேரம் மட்டும் தான் விடுமுறை. அந்தப் பொழுதுகளில் சந்தித்துக் கொண்டிருந்தோம். அதுவும் நாளாவட்டத்தில் குறைந்தது. அவனிடமும் சின்னச் சின்ன மாற்றங்கள் தெரிந்தன. பழைய வேகம், இயல்பு, குறைந்திருந்தது.


அடுத்து வந்த ஆண்டுகளில் என்னுடைய நண்பர்கள் வட்டம் மாறி விட்டது. நாறும்பூநாதன், சாரதி, முத்துச்சாமி, மந்திரமூர்த்தி, ராமலிங்கம், என்று எல்லாம் படிப்பாளி நண்பர்கள். அதன் பிறகு சின்னப்பாண்டியின் தெருவுக்குப் போவதே குறைந்து விட்டது. எப்போதாவது அங்கே போனால் அங்கே என்னை விட ஐந்து வயது இளையவனான என் தம்பி கணேசனோடு அவன் கபடி விளையாடிக் கொண்டிருந்தான். அடுத்து புதிதாக ஒரு ரசிகர் கூட்டம் ஒன்று அவன் பின்னால் திரண்டிருந்தது. ரசிகக் குழந்தைகள் வளர்ந்து மாறிக்கொண்டேயிருந்தார்கள். ஆனால் சின்னப்பாண்டி மாறாமல் அதே குழந்தைமையோடு இருந்தான். இப்போது தற்செயலாக எதிரெதிரெ சந்தித்தால் வெறும் ஒரு புன்னகையாக எங்கள் உறவு சுருங்கிக் கொண்டு வந்தது.


நான் கல்லூரியில் படிக்கும் போதும்சின்னப்பாண்டியைச்சுற்றி பையன்கள் இருந்தார்கள். அப்போது சின்னப்பாண்டி கருகருவென பெரிய மீசையோடு இருந்தான்.விளையாட்டின் நடுவே என்னைக் கவனித்து விட்ட சின்னப்பாண்டி மரியாதையுடன் விஷ் பண்ணினான். எனக்குச் சங்கடமாக இருந்தது. கையை மேலே தூக்கியும் தூக்காமலும் அந்த இடத்தை விட்டு வேகமாகக் கடந்து விட்டேன்.
        
அதன்பிறகு அவ்வளவாக அவனைப் பார்க்கிற சந்தர்ப்பங்கள் ஏற்படவில்லை. என்னுடைய உலகமும் தலைகீழாக மாறி விட்டது.கல்லூரிப்படிப்பு முடித்து வேலையின்றி அலைந்து திரிந்து கொண்டிருந்தபோது ஒரு மத்தியான வேளையில் சின்னப்பாண்டியைச் சந்தித்தேன். அவன் ஒரு பெட்டிக்கடை போட்டிருந்தான். அந்தப் பெட்டிக்கடைக்குப் போய் நான்,ரெம்ப கேஷூவலாக ,


“ ஒரு வில்ஸ் பில்டர் கொடுங்க” என்று கேட்டேன். என் முகத்தில் எந்த பாவமும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் எனக்குச் சின்னப்பாண்டியுடனான பழைய நட்பின் ஞாபக ஊற்றுக்கண் தூர்ந்து போய் விட்டது. அதனால் நான் ஒரு பெட்டிக்கடைக்காரர் முன் இருப்பதாகவே நினைத்தேன். ஆனால் சின்னப்பாண்டி அப்படி நினைக்கவில்லை. நான் கேட்டதும் அவர் முகமே மாறி விட்டது. ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டுவிட்ட மாதிரி முகத்தில் ஒரு இறுகிய பாவம் தோன்றியது. அவன் சிகரெட்டை எடுத்துக் கொடுக்கவில்லை. நான் நின்று கொண்டிருந்தேன். வெகு நேரமாக நிற்பதைப் போல ஒரு அசௌகரியத்தை உணர ஆரம்பித்தேன். அப்போது அவனுடைய கடைக்கு வந்த இன்னொரு ஆளிடம்,


“ அவருக்கு ஒரு சிகரெட் எடுத்துக் கொடுங்க “ என்று சிகரெட் பெட்டியை அவரிடம் எடுத்துக் கொடுத்தான். எனக்குள் ஏதோ ஒரு உணர்வு மனதைப் பிசைந்தது. நான் சில்லரையை வைத்து விட்டு நகர்ந்து விட்டேன். அந்த சிகரெட் எனக்கு ரசிக்கவில்லை.
        
அதன் பிறகு நான் சின்னப்பாண்டியின் கடைப்பக்கமே போகவில்லை. அதற்குக் காரணம் அது வரை வீட்டுக்குத் தெரியாமலிருந்த சிகரெட் விஷயம் சின்னப்பாண்டி சொல்லி என் தம்பி மூலமாக வீட்டுக்குத் தெரிந்து ஒரு வாரம் வீட்டில் ரகளையானது மட்டுமில்லை, என் தம்பியிடம் சின்னப்பாண்டி ரெம்ப வருத்தப்பட்டு என்னை ரெம்ப நல்ல பையன் என்று நினைத்திருந்ததாகவும், நான் சிகரெட் கேட்ட சம்பவம் அவனை மிகவும் பாதித்து விட்டதாகவும் புலம்பியிருக்கிறான்.


இத்தனைக்கும் சின்னப்பாண்டி ஏழாம் வகுப்பிலிருந்தே சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தான்.

5 comments:

  1. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. ரசிக்க முடிந்தது. நீண்ட நாட்களுக்கு அப்புறம் நல்லதொரு சிறுகதையாகப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  3. என் சிறுவயது நினைவுகளுக்கே சென்று விட்டேன்.நன்றி.

    ReplyDelete
  4. நான் என்னுடைய பால்ய காலத்திற்கே சென்றுவிட்டேன் தோழர்.

    ReplyDelete
  5. மிகவும் அருமையாக இயல்பாக பதியப்பட்டுள்ளது. உள்ளத்தில் பால்ய பருவத்தின் நண்பர்களை ஞாபகப்படுத்தி விட்டீர்கள். அது போல் வாழ்க்கையின் போக்கில் நட்பில் ஏற்படும் இயல்பான மாற்றங்களையும் ஏமாற்றங்களையும் நன்றாக பதிவு செய்துள்ளளீர்கள். இன்றைய பொழுது இளைமை நினைவுகளோடு துவங்குகிறது.

    ReplyDelete