கு.அழகிரிசாமியெனும் மகத்தான கலைஞன்
கலையின் ஆதாரம் மனித வாழ்க்கையெனும்போது கலைஞன் அந்த வாழ்வை எழுதிப்பார்க்கிறான். அவன் எழுத எழுத வாழ்க்கை அவனுக்குக் கண்ணாமூச்சி காட்டுகிறது. வாழ்க்கையை வாழ்கிற மனிதர்களின் மனப்போக்குகளை, மனம் செயல்படும் விதங்களை, மனதின் தந்திரங்களை, மனதின் குரூரங்களை, மனதின் பேரன்பை, ஆசாபாசங்களை, மனதின் இயக்கவியலை, மீண்டும் மீண்டும் தன் படைப்புகளில் எழுதிப்பார்க்கிறான் கலைஞன். மனிதர்களைப் பற்றிய அனைத்தும் புரிந்து விட்டது போலத் தெரிகிறது. ஆனால் ஒரு கணத்தில் எல்லாம் மாறிவிடுகிறது.
மனித வாழ்க்கை விசித்திரமானதாகத் தெரிகிறது. மனிதர்கள் விந்தையாகி நிற்கிறார்கள். காரணமேதுமறியாமலே யதார்த்தவாழ்க்கை மனிதர்களை ஆழிப்பேரலை போலச் சுற்றிச் சுற்றி சுழட்டியடிக்கிறது. அந்தப் பேரலையில் சிக்கிய மனிதர்கள் அதன் வீச்சுக்குத் தன்னை ஒப்புக் கொடுத்துவிடுகிறார்கள். கலைஞனும் அந்தப் பேரலையில் சிக்கியவன் தான். அதனால் தான் மானுடவாழ்வின் தீராத பக்கங்களை மீண்டும் மீண்டும் எழுதிப்பார்க்கிறான்.
கு.
அழகிரிசாமியெனும்
மகத்தான கலைஞனும் அப்படி எழுதிப்பார்க்கிறார்.
23-9-1923 அன்று
கு.அழகிரிசாமி பிறந்தார்.
ஆரம்பக்கல்வியை
கோவில்பட்டியிலுள்ள ஆயிரவைசிய ஆரம்பப்பள்ளியிலும், உயர்நிலைக்கல்வியை
வ.உ.சி.
அரசுப்பள்ளியில்
பள்ளியிறுதி வகுப்பு வரை கல்வி கற்றார். கல்வியில்
மிகச்சிறந்த மாணவனாகவே இருந்தார் கு.அழகிரிசாமி.
உடல்நிலை
காரணமாக பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாமல் போன கி.ரா.
பக்கத்து
வீட்டுக்காரனான கு.அழகிரிசாமியுடன் ஆத்மார்த்தமான
நட்பு கொண்டிருந்தார். இருவரின் பாலிய காலத்தைப்
பற்றி விரிவாக கி.ரா.
நிறைய
எழுதியிருக்கிறார்.
இடைசெவலுக்கு அருகிலிருந்த குமாரபுரம் ஊரில் அமெரிக்கன்
கல்லூரியில் படித்த ஆங்கிலம் தெரிந்த எட்டக்காபட்டி முத்துச்சாமி என்ற
கரிசல்க்காட்டு சம்சாரியிடமிருந்து ஆண்டன் செகாவின் சிறுகதை நூலை வாங்கிக் கொண்டு வாசித்தார்.
அவரையே
தன் இலக்கியகுருவாக கு.அழகிரிசாமி வரித்துக் கொண்டார்.
அவரிடமிருந்த
இலக்கிய நூல்களை அழகிரிசாமியும் அவர் மூலமாக கி.ரா.வும்
கற்கத் தொடங்குகிறார்கள். பிறகு இருவரும்
அப்போது இளைஞர்களை ஈர்த்துவந்த கம்யூனிச இயக்கத்தில் இணைந்தார்கள்.
கு.அழகிரிசாமி
சிறிது காலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இடைசெவல் கிளையின் செயலாளராக இருந்தார்
1943 –ல்
கு.அழகிரிசாமியின் முதல்கதையான உறக்கம் கொள்ளுமா?
என்ற
கதை ஆனந்த போதினியில் வெளியானது. 1944 – ஆம் ஆண்டு
பிரசண்டவிகடனில் உதவி ஆசிரியர் வேலையில் சென்னைக்குப் போய்ச் சேர்ந்தார்.
அதன்பிறகு
தன் வாழ்நாள் முழுவதும் பத்திரிகையாளராகவே வேலை பார்த்தார்.
பிரசண்டவிகடன்,
சக்தி,
தமிழ்மணி,
மலேசிய
நாட்டுத் தமிழ்நேசன், நவசக்தி,
தமிழ்வட்டம்,
சோவியத்
நாடு போன்ற பத்திரிகைகளில் வேலை பார்த்தார். இதழியல்,
இசைத்துறை,
மொழிபெயர்ப்புத்துறை,
பதிப்புப்பணி,
நாடகங்கள்,
கடித
இலக்கியம், இசைநாடகங்கள் என்று தமிழ் கலை இலக்கியத்துறைக்கு
பன்முகப்பங்களிப்புகளைச் செய்திருக்கிறார்.
1952 –ல் அவருடைய முதல் சிறுகதைத்தொகுப்பு
சிரிக்கவில்லை வெளியானது. அதன்பிறகு
13 சிறுகதைத்தொகுப்புகள், 3 நாவல்கள்,
8 கட்டுரை நூல்கள், 3 சிறுவர்
நூல்கள், 2 நாடகங்கள்,
11 மொழிபெயர்ப்புகள், 4 பதிப்பு
நூல்கள் என்று இலக்கியத்தின் அனைத்து வகைமைகளிலும் பங்களிப்பு செய்திருக்கிறார்.
1962 –ல்
எழுத்து பத்திரிகை ” எதற்காக எழுதுகிறேன்?
” என்ற கேள்வியை முன்வைத்து சிறந்த எழுத்தாளர்களிடமிருந்து
பதிலை வாங்கி கட்டுரைத் தொடராகப் பிரசுரித்தது. அதில்
கு.அழகிரிசாமி எழுதும்போது,
“ நான் மனிதனாக
வாழவிரும்புகிறேன்.. நான் மனிதனாக சுதந்திர புருஷனாக
இருப்பதற்கு வழி என்ன? நான் எழுதுவது ஒன்றே வழி.
நான்
முழுச்சுதந்திரத்தோடு இருக்கச் சந்தர்ப்பங்கள் துணை செய்யாத சமயத்திலும் மன உலகில்
சுதந்திரத்தை இழக்கத்தயாராக இல்லை. ஆகவே எழுதுவதால்
நான் மனிதனாக இருக்கவும், நான் மனிதனாக
வாழவும், மனிதனாக வளரவும் முடிகிற காரணத்தால்
எழுதுகிறேன்…..
பிரசாரத்துக்காக எழுதவில்லையா,
நிர்ப்பந்துக்காக
எழுதவில்லையா, பணத்துக்காக எழுதவில்லையா,
வாழ்க்கைச்
செலவுக்காக எழுதவில்லையா என்றெல்லாம் கேட்கலாம். இத்தனைக்காகவும்
நான் எழுதுகிறேன் என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால்
அடிப்படை என்னவோ ஒன்று தான். புறக்காரணங்கள்
எவையாக இருந்தாலும் என் குறிக்கோள் மாறிவிடவில்லை. ஒருவேளை
உள்ளே மறைந்து நிற்கலாம். ஆனால் மாறவில்லை.
மாறாது.
எனவே
சந்தர்ப்பத்தேவைகளையோ, புறக்காரணங்களையோ பெரிதுபடுத்தி
முழுக்காரணங்கள் ஆக்கவேண்டியதில்லை. லட்சியம்
தவறும்போது தன் ஆத்மாவுக்கும் மனித குலத்துக்கும் துரோகம் இழைக்கும்போதும்தான் அவற்றை
முழுக்காரணங்கள் ஆக்க முடியும்… இப்படிப்பட்ட
காரியத்தைக் கலைகளினாலேயே சாதிக்கமுடியும். நான்
பயின்ற கலை எழுத்து. அதனால் எழுதுகிறேன்..
( எழுத்து மே, 1962 )
அவர் எழுதியுள்ள
105 கதைகளில் ஏராளமான கதைகள் உலகத்தரத்தில் வைத்துப் போற்றப்படவேண்டியவை.
சிரிக்கவில்லை,
தவப்பயன்,
திரிபுரம்,
ராஜா
வந்திருக்கிறார், வெறும்நாய்,
அன்பளிப்பு,
பாலம்மாள்
கதை, அழகம்மாள், பெரியமனுஷி,
திரிவேணி,
காலகண்டி,
தம்பி
ராமையா, சுயரூபம்,
குமாரபுரம்
ஸ்டேஷன், இருவர் கண்ட ஒரே கனவு,
பேதமை,
போன்ற
கதைகளை மிகச்சிறந்த கதைகளாகக் கொள்ளலாம்.
கு.அழகிரிசாமியின்
கலை செகாவியன் பாணியிலானது. யதார்த்தக்காட்சிகளின்
வழியே சாமானியர் மக்களின் குணவிசித்திரங்களின் வழியே எளிய மொழியில் கட்டமைக்கப்பட்டு
எழுப்பப்படும் சொற்சித்திரம். கு.
அழகிரிசாமியிடம்
திருகுமுருகலான வலிந்தெழுதும் மொழி இல்லை. வாசகர்களை
மயக்கும் உத்திகளில்லை. எதிர்பாராத திருப்பங்களில்லை.
விநோதமான
கருப்பொருளில்லை. ஆனால் கரைபுரண்டோடும் வாழ்க்கைச்சித்திரங்கள்
இருக்கின்றன. அவர் காட்டுகிற காட்சிகள் சாதாரணமானவை
தான். அவர் சித்தரிக்கிற மனிதர்கள் சாதாரணமானவர்கள்
தான். ஆனால் அவற்றின் மூலம் ஒரு மானுடத்தருணத்தை உருவாக்க
முயற்சிக்கிறார். அந்த மானுடத் தருணங்களின் வழியாக
மனிதர்களின் மீது கனிவு கொள்கிறார். பரிவையும்
அன்பையும் காட்டுகிறார். வாசகர்களிடம்
இதோ பாருங்கள். இந்த மனிதர்கள் சாதாரணமானவர்கள்
தான். அவர்கள் சாதாரணமாக இருப்பதின் வழியே தான் இந்த
வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறார்கள். அன்பைப்
பரிமளிக்கச்செய்கிறார்கள் என்று கிசுகிசுக்கிறார். பொதுவாக
அவர் உரக்கப்பேசுவதில்லை.
கு.அழகிரிசாமியின்
கதைகள் தோற்றத்துக்கு எளிமையாகத் தோன்றினாலும் அந்த எளிமைக்குப் பின்னாலிருக்கும் ஆழம்
நமக்குள் ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் உள்ளேயிழுத்துக் கொண்டேயிருக்கும்.
தமிழ்ச்சிறுகதைகளில்
தனக்கென தனித்துவமான பாணியைக் கைக்கொண்ட
கு.அழகிரிசாமியின்
கதைகள் என்றென்றும் வாசிக்க வாசிக்கப் புதுமையாகக். காலங்களைக்
கடந்தும் நம்முடன் அவை உரையாடிக் கொண்டிருக்கும் வல்லமை படைத்தவை..
நன்றி - தமிழ் இந்து தீபாவளி மலர்

1 Comments
அருமையான கட்டுரை. கு அழகிரிசாமி என்னும் மகத்தான கலைஞனை முழுமையாக வாசிக்கத் தூண்டும் பதிவு.
ReplyDelete