வீரம் வேண்டும்
உதயசங்கர்
வானில் வட்டமடித்துக் கொண்டே பருந்து கீழே இரையைத் தேடியது. ஒரு வேப்பமரத்துக்குக் கீழே தாய்க்கோழி குஞ்சுகளுடன் மேய்ந்து கொண்டிருந்தது. குஞ்சுகள் கிய்யா கிய்யா என்று கத்திக் கொண்டே அங்கும் இங்கும் ஓடின. பருந்து அந்த வேப்பமரத்தின் உச்சிக்கிளையில் அமர்ந்தது. அங்கிருந்து தாய்க்கோழியைப் பார்த்து,
“க்கோ க்கோ க்கோ கோழியே
குண்டு குண்டு கோழியே
குஞ்சு ஒண்ணு தருவியா?
குஞ்சு ஒண்ணு தருவியா?
என்று தன்னுடைய கமறிய குரலில் கேட்டது. தாய்க்கோழி பருந்து உச்சிக்கிளையில் இருப்பதைப் பார்த்தது. உடனே குஞ்சுகளைத் தன் சிறகினடியில் பதுக்கி வைத்துக் கொண்டது. குஞ்சுகள் அமைதியாகச் சத்தம் போடாமல் இருந்தன.
“ க்ளாவ் க்ளாவ் பருந்தே
குண்டு குண்டு பருந்தே
குஞ்சு தரமாட்டேன்
குஞ்சு தரமாட்டேன்
ஒரு மாதம் முட்டையிட்டேன்
பத்து முட்டைகளைச் சாப்பிட்டாங்க
பத்து முட்டைகளை வித்தாங்க
பத்து முட்டைகளை அடைக்கு வைச்சாங்க
அன்னம் தண்ணீர் இல்லாமல்
இருபத்தியொரு நாள் அடைகாத்தேன்
மூணு முட்டை கூமுட்டை
ஏழுமுட்டை பொரிஞ்சுது
வானவில்லைப் போல
ஏழு குஞ்சுகள் வந்தன.
குஞ்சு தரமாட்டேன்
ஒரு குஞ்சும் தரமாட்டேன்..
என்றது தாய்க்கோழி. அதைக் கேட்ட பருந்துக்குக் கோபம் வந்தது. அது உடனே சிறகுகளை அடித்து வானில் வட்டமடித்தது.
“ க்கோ க்கோ கோழியே
குண்டு குண்டு கோழியே
கோபம் வர வைக்காதே
குணமாக் கேட்கிறேன் நானுமே
குஞ்சு ஒண்ணு தருவியா?
குஞ்சு ஒண்ணு தருவியா? “
அதைக் கேட்ட தாய்க்கோழி யோசிக்கவே இல்லை.
“ க்ளாவ் க்ளாவ் பருந்தே
குண்டு குண்டு பருந்தே
கோபம் வந்தால் எனக்கென்ன?
குப்புற விழுந்தால் எனக்கென்ன?
குஞ்சு தர மாட்டேன்
ஒரு குஞ்சும் தரமாட்டேன்..”
என்று பதில் சொன்னது தாய்க்கோழி. பருந்து உடனே உச்சிக்கிளையில் இருந்து கீழே பறந்தது. கோழியின் அருகில் வந்து பயமுறுத்தியது. குஞ்சுகள் நடுங்கின.
பயந்து கிய்யா கிய்யா கிய்யா என்று அலறின.
அருகில் வந்த பருந்தைப் பாய்ந்து சென்று கொத்தியது தாய்க்கோழி. சரியான கொத்து. பருந்தின் இறக்கையில் காயம் பட்டது. அவ்வளவு தான். பருந்து கீழே விழுந்தது. தடுமாறி எழுந்து பறந்தது.
வேதனையில் ’ க்ளாவ் க்ளாவ் ’ என்று கத்தியபடி பறந்து போய் விட்டது. சண்டை நடக்கும் போது குஞ்சுகள் சிதறி ஓடி விட்டன.
தாய்க்கோழி குஞ்சுகளை அழைத்தது.
“ க்கோ க்கோ குஞ்சுகளே
கிய்யா கிய்யா குஞ்சுகளே
வீரம் வேண்டும் குஞ்சுகளே
நல்ல தீரம் வேண்டும் குஞ்சுகளே
யாரைக் கண்டும் பயப்படாமல்
வாழ வேண்டும் குஞ்சுகளே “
என்று சொன்னது. குஞ்சுகள் எல்லாம் செடிகளிலிருந்து ஓடி வந்தன.
தாய்க்கோழியை உரசிக் கொண்டு.
” கிய்யா கிய்யா அம்மா
வீர்மாக இருப்போம்
தீரமாக இருப்போம்
கிய்யா கிய்யா அம்மா ” என்று பாடின.
நன்றி - வண்ணக்கதிர்

அருமை
ReplyDelete