Saturday 29 December 2012

பரிநிர்வாணம்

உதயசங்கர்

Mohan Das (186)

சென்னை, தி.நகர், வெங்கட்நாராயணா சாலையில் வெங்கியின் அலுவலகம் இருந்தது. அவனைப் பார்த்து ஒரு இருபது வருடங்களாவது இருக்கும். அவன் சொன்ன இலக்கஎண்ணில் ஒரு நான்கு மாடிக்கட்டிடம் நின்று கொண்டிருந்தது. எனக்கு நம்பமுடியவில்லை. இந்தக் கட்டிடத்திலா வெங்கி வேலை பார்க்கிறான். இருக்காது. பக்கத்தில் உள்ள அட்ரஸ் இல்லாத ஏதாவதொரு சிறிய ஓய்ந்து போன கட்டிடத்தில் வேலை பார்ப்பானாக்கும். சும்மா நாம தேடி அலையக்கூடாதுன்னு இந்த அட்ரஸைக் கொடுத்திருப்பான். இப்போது ஃபோன் செய்ததும் அவன் அப்படியொரு கட்டிடத்திலிருந்து சுமாரான உடையில் அதே ஒல்லிப்பிச்சானான உடம்புடன் வெளியே வருவான் என்று கற்பனை செய்து கொண்டிருந்தேன். அலைபேசியில் அவனை அழைத்தேன். ஓ என்ற ஆச்சரியத்தொனியுடன் ஆரம்பித்தான். நான் அந்த நான்கு மாடிக்கட்டிடத்தின் வாயிலில் நின்று கொண்டிருப்பதைச் சொன்னேன். அவன் அந்தக் கட்டிடத்துக்குள் நுழைந்து லிஃப்டில் மூன்றாவது மாடிக்கு வரச்சொன்னான். எனக்கானால் ஆச்சரியம்.

வெங்கி பிராமணர் வீட்டுப்பிள்ளையாக இருந்தாலும் தப்பிப் பிறந்திருந்தான். கொஞ்சமும் படிப்பு வரவில்லை. அதோடு எல்லாவிதமான சேட்டைகளையும் செய்து கொண்டிருந்தான். பீடி, குடிப்பது, மிலிட்டரி ஹோட்டலில் புரோட்டா, கறி வறுவல் சாப்பிடுவது, ( சாராயமும் குடிப்பான் என்று கேள்வி, ஆனால் உறுதியாகத் தெரியாது ) எப்போதும் காவாலிப்பயகளோடு சுற்றிக் கொண்டு பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போடுவது, எம்.ஜி.ஆர். சினிமாவைக் குறைந்தது பத்து தடவையாவது பார்ப்பது, உரிமைக்குரல் லதா ரசிகர் மன்றத்தலைவராக இருப்பது, என்று எல்லாவிதமான நடவடிக்கைகளிலும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தான். ஆள் ஒல்லின்னா ஒல்லி அப்படியொரு ஒல்லி. எலும்புகளின் மீது தோல் மூடியிருக்கும் அவ்வளவு தான். ஆனால் எல்லோருடனும் வலுச்சண்டைக்குப் போவான். இடுப்பிலிருந்து ஒட்டிவைக்கப்பட்ட இரண்டு கால் எலும்புகளும் தசையின் சப்போர்ட் இல்லாததினால் லேசாக வளைந்து கப்பக்காலாக மாற முயற்சித்துக் கொண்டிருக்க, வெங்கி ஒரு ராஜநடை நடந்து இந்த உலகத்தை எகத்தாளமாக ஒரு பார்வை பார்ப்பான் பாருங்கள் அதை இந்தப் பிறவியில் மறக்க முடியாது. வாயில் புகைந்து கொண்டிருக்கும் பீடியுடன் கால்களில் ஒட்டாத ஒரு டவுசரும் அதற்கு மேல் சுருட்டி சுற்றப்பட்ட கைலியும், வீசும் காற்றில் எப்படியாவது வெங்கியிடமிருந்து தப்பித்து விட முடியாதா என்று கடும்பிரயத்தனம் செய்து கொண்டிருக்கும் அழுக்குச் சட்டையும் அணிந்து நாங்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் மைதானத்துக்கு சாயங்காலவேளையில் உலா வருவான். அப்படியே மைதானத்துக்கு வெளியே உட்கார்ந்து பந்து வீசுபவனுக்கும், மட்டை அடிப்பவனுக்கும் ஒரே நேரத்தில் ஆலோசனை சொல்வான். அதைக் கேட்ட மாதிரியும், கேட்காத மாதிரியும் நாங்கள் விளையாடிக் கொண்டிருப்போம். இருட்டில் பந்து கொஞ்சங்கூட கண்ணுக்குத் தெரியாமல் போகும் வரை எங்கள் விளையாட்டு தொடரும். அதுவரை எங்களோடு தான் இருப்பான் வெங்கி. எங்களை விட வயதில் மூத்தவன். ஆனால் எங்களிடம் சகஜமாகப் பழகுவான். எல்லோரும் டேய், போடா, வாடா, என்று தான் பேசிக் கொள்வோம்.

கீழே உள்ள விநாயகர்கோவில் சந்துக்குள் இருந்த நான் எப்படி மேட்டுத்தெருவிலுள்ள பிராமணப்பையன்களோடு சேர்ந்தேன் தெரியுமா? கிரிக்கெட் தான். ஊரெல்லாம் ஹாக்கி விளையாடிக் கொண்டிருக்க மேட்டுத்தெரு பையன்கள் மட்டும் தான் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். எனக்குக் கல்லூரியில் வரும் ஹிந்து பேப்பரிலும், ஸ்போர்ட்ஸ் ஸ்டாரிலும், வருகிற சுனில் கவாஸ்கர், குண்டப்பா விஸ்வநாத், கிர்மானி, பிரசன்னா, சந்திரசேகர், வெங்கட்ராகவன், மொகிந்தர் அமர்நாத், சுரீந்தர் அமர்நாத், புகைப்படங்களைப் பார்த்தே கிரிக்கெட் விளையாடும் ஆசை வந்தது. எப்படியும் இந்திய அணியில் சேர்ந்து விட வேண்டும் என்று கனவு கண்டேன். ரேடியோவில் வர்ணனை கேட்டேன். டோனி க்ரேய்க்கின் ஹவ் டூ பேட்? என்ற புத்தகம் வாசித்தேன். கிரிக்கெட் என்னை ஒரு பைத்தியக்காரனாக்கி விட்டது. உண்மையை மறைக்காமல் சொல்லவேண்டுமானால் கிரிக்கெட் மட்டுமல்ல. மேட்டுத்தெருவில் இருந்த நளினியும் தான் என்னைப் பைத்தியக்காரனாக்கி விட்டாள். பிறகென்ன கிரிக்கெட் விளையாடுவதற்காகவும் நளினியின் தரிசனத்திற்காகவும் மேட்டுத்தெருவிலேயே கிடந்தேன். நல்ல உச்சி வெயிலிலும், இரவு தெரு விளக்கின் வெளிச்சத்திலும் கூட கிரிக்கெட் பிராக்டீஸ் செய்தேன். நளினியின் வீட்டெதிரே காலியாக இருந்த ஒரு சிறிய இடத்தைத் தேர்வு செய்து இந்தக் காரியங்களைச் செய்தேன்.

இப்படி இரவு பகலாக சச்சின் கூட பிராக்டீஸ் செய்திருக்கமாட்டாரே. சச்சினுக்கு முன்னாடியே நீங்கள் இந்திய அணிக்கு வந்திருக்க வேண்டுமே என்று நீங்கள் முணுமுணுப்பது எனக்குக் கேட்கத் தான் செய்கிறது. என்ன செய்ய? நான் இந்திய அணியில் சேர்ந்து உலகப்புகழ் பெற முடியாமல் போனதுக்கு யார் காரணம் தெரியுமா? இந்த வெங்கி தான். இரவு பகலாய் கிரிக்கெட் விளையாடி கவாஸ்கர் மாதிரி ஓபனிங் பேட்ஸ்மேனாகி விட்டேன். போதாக்குறைக்கு கிர்மானி மாதிரி கீப்பிங்கும் செய்து கொண்டிருந்தேன். எங்களுடைய மெஜஸ்டிக் கிரிக்கெட் கிளப் தெருத் தெருவாக, அப்புறம் ஊர் ஊராகப் போய் கிரிக்கெட் மேட்ச் ஆடினோம். எனக்கு மவுசு கூடிக் கொண்டிருந்தது. கல்லூரியின் கிரிக்கெட் அணியிலும் மேட்டுத்தெரு பையன்களின் ஆதிக்கம் தான். கல்லூரிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் நாங்கள் இரண்டாம் இடம் பெற்றோம். பெருமை தாங்கவில்லை. இதையெல்லாம் கேள்விப்பட்டு நளினி என்னிடம் ஓடி வந்து அந்த மூன்று வார்த்தைகளைச் சொல்லி விடுவாள் என்று எதிர்பார்த்தேன். அப்படியெதுவும் நடக்கவில்லை. ஏழை தமிழ் எழுத்தாளனாகி இந்த அநுபவங்களையெல்லாம் உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று லவித்து விட்டது.

ஒரு நாள் அந்தியில் நாங்கள் பால்பண்ணை மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம். வழக்கம் போல வெங்கியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். பவுண்டரிக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்த நாகராஜனுக்கும் அவனுக்கும் ஏதோ வாக்குவாதம் வந்து விட்டது. என்ன என்று எங்களுக்குத் தெரியவில்லை. அன்றைய மேட்சில் நாங்கள் அதாவது ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த எங்களுடைய அணி ஜெயித்து விட்டது. உடனே நாகராஜன் வெங்கியிடம் “ சொன்ன மாதிரி செய்டா..” என்று சொன்னான். நாங்கள் என்ன என்று கேட்டதுக்கு எங்களுடைய அணி ஜெயிக்காது. அப்படி ஜெயித்து விட்டால் வெங்கி அந்த மைதானத்தை அம்மணமாய் சுற்றி வருவதாகப் பந்தயம் போட்டிருக்கிறான். நாங்கள் இந்தப் பந்தயத்தின் பந்தயப்பொருளை நினைத்து சிரித்துக் கொண்டிருக்க, ரமேஷ் “டேய் எங்களுக்குக் கண் அவிஞ்சு போகவா..? “ என்று சொல்லி முடிக்கவில்லை. அதற்குள் வெங்கி கால்வாசி மைதானத்தைச் சுற்றியிருந்தான். எங்களுக்கு வாயடைத்து விட்டது.

பார்க்கவும் முடியவில்லை. பார்க்காமலிருக்கவும் முடியவில்லை. எங்களுடைய சிரிப்பு நின்று ஒரு தர்மசங்கடமான நிலைமை உருவானது. யாருக்கும் எதுவும் ஓட வில்லை. என்ன பேசுவது என்றே தெரியவில்லை. நாங்கள் நாகராஜனைத் திட்ட ஆரம்பித்தோம். ஆனால் அதற்குள் வெங்கி எங்களுக்கு அருகில் வந்து விட்டான். எதுவுமே நடக்காத மாதிரி அவனுடைய டிரவுசரையும், கைலியையும் சட்டையையும் அணிந்து கொண்டு திகைத்துப் போயிருக்கும் எங்களைப் பொதுவாகப் பார்த்துக் கொண்டே ” என்ன போலாமா? “ என்று கேட்டான். எதுவும் பேசாமல் அவன் பின்னால் போனோம்.

அடுத்த ஒரு வாரத்துக்கு எங்களுக்கு வெங்கியை எப்போது பார்த்தாலும் மைதானத்துக் காட்சியே நினைவுக்கு வந்தது. அந்த அதிர்ச்சியை முழுங்கிச் செரிமானம் ஆகுமுன்னால் அதைவிட இன்னொரு முக்கியமான அதிர்ச்சியை எனக்குத் தந்தான் வெங்கி. நளினியை அவன் காதலிப்பதாகவும், அவளும் அவனைக் காதலிப்பதாகவும் சொன்னான். எனக்கு எதுவும் புரியவில்லை. அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை. அப்படியே கிரிக்கெட்டை விட்டேன். நளினியை விட்டேன். மேட்டுத்தெருவை விட்டேன்.

அந்த வெங்கியைத் தான் இப்படி ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியிலுள்ள ஒரு அலுவலகத்தில் சந்திக்க நேரும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. வாழ்க்கை விசித்திரமானது தான். மனதுக்குத் தான் எத்தனை வேகம்? லிஃப்டில் நான் சென்று கொண்டிருந்த சில நிமிடங்களுக்குள் பழைய காட்சிகளை எல்லாம் புது பிரிண்ட் போட்டு ஓட்டிக் காட்டி விட்டதே. லிஃப்டிலிருந்து வெளியேறி வலது பக்கம் திரும்பினேன். ஒஞ்சரித்திருந்த அலுவலகக் கதவின் வழியே ஒரு குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. அது வெங்கியின் குரல் தான். அந்தக் குரலைக் கேட்டதும் அப்படியே திரும்பிப் போய்விடலாமா என்று நினைத்தேன். அசரீரி போல அந்தக் குரல் ஒலித்த வார்த்தைகள் என்ன தெரியுமா?

“ என்ன பெட் கட்டறே.. யார் தோக்கறாங்களோ அவங்க இந்த பில்டிங்க “ நியுடா”  சுத்தி வரணும்.. என்ன ஓ.கே.யா ? “

வெங்கி மாறவில்லை.

No comments:

Post a Comment