Wednesday 1 February 2017

கதைகளின் புதிர் விளையாட்டு கொடக்கோனார் கொலை வழக்கு

கதைகளின் புதிர் விளையாட்டு கொடக்கோனார் கொலை வழக்கு

உதயசங்கர்

தமிழில் முதல் நாவல் எழுதப்பட்டு ஏறத்தாழ நூற்றிநாற்பது ஆண்டுகள் ஆகின்றன. சமீபகாலத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ் நாவல்கள் இந்திய மொழிகளனைத்திலும் சிறந்ததாகவும் உலகமொழிகளில் வெளிவரும் சிறந்த நாவல்களுக்கு ஈடுகொடுக்கக் கூடியதாகவும் இருக்கின்றன என்பதில் ஐயமில்லை. நாவல் என்ற வடிவத்தின் ஐரோப்பிய இலக்கணங்கங்களை எல்லாம் எப்போதோ மாற்றி எழுதி விட்டன தமிழ்நாவல்களின் கதைக்களமும், வடிவமும், சொல்முறையும், முழுக்க முழுக்க ஒரு கதைச்சுருளின் சிறகுகள்  எல்லையில்லாமல் விரிந்து பறப்பதைப் போல விகசிக்கின்றன. நாவலாசிரியர்கள் கதைகளின் புதிர்ப்பாதைகளில் வாசகர்களை அலைந்து திரிய விடுகிறார்கள். புதிர்களின் ஊடே பயணம் போகும் வாசகர்களும் அறியாத ஏதோ ஒன்றினைத் தேடிப் பிரதியில் பயணம் போகிறார்கள். அல்லது அறிந்ததையே அறியாததெனப் பாவித்து அலைகிறார்கள். புதிர்ப்பாதைகளில் தனக்கு என்ன நேரப்போகிறது என்று அறியாத வாசகர்களின் ஆவல் தான் பிரதிக்குள் இயங்குகிறது.
சூதில் கலைத்துப்போடும் சீட்டுக்கட்டிலிருந்து வரப்போகிற சீட்டு என்னவாக இருக்கப்போகிறது என்பதை எழுதுகிறவரை எழுத்தாளனும் அறிவதில்லை. ஆனால் கலைத்துக் கொண்டேயிருக்கும் சீட்டுகளின் வழியே கதைகளின் சூதை முடிவடையாமல் பார்த்துக் கொள்கிறான் எழுத்தாளன். நிச்சயமின்மையின் கையில் தன்னை ஒப்படைத்த வாசகனோ இந்தச்சூதில் எழுத்தாளனோடு சரிசமமாய் விளையாடிக்கொண்டிருக்கிறான். எப்போது எழுத்தாளனின் கையில் இருக்கும் சீட்டுகள் காலியாகிறதோ அப்போது வாசகன் பிரதியிலுள்ள கதைகளின்வழியே தன் சூதாட்டத்தைத் தொடர்கிறான். இது ஒரு தீராத விளையாட்டு. யார் வெற்றிபெறுவார்கள் என்ற எந்த நிச்சயமும் கிடையாது. வெற்றி தோல்வியைப்பற்றி கவலையும் கிடையாது. ஆனாலும் விளையாடியே தீர வேண்டும் என்பது போல விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். விளையாடுவதே வாழ்க்கை என்ற உறுதி எடுத்தவர்களைப் போல. வாழ்வெனும் பெரும்விதி தன் கருநிழலைப் பரப்பி கவிந்திருக்கிறதே..
பத்திரிகையாளராகவும், சிறுகதையாசிரியராகவும், நாடகவியலாளராகவும் அறியப்பட்ட எழுத்தாளர் மு.அப்பணசாமியின் முதல்நாவல் கொடக்கோனார் கொலைவழக்கு. ஒரு துப்பறியும் நாவலுக்குப் பொருத்தமான தலைப்புடன் துவங்குகிற நாவல் முதல்பக்கத்திலேயே கொடக்கோனாரைக் கொலை செய்ய நடத்தப்படும் முயற்சியுடன் ஆரம்பிக்கிறது. புதிர்விளையாட்டின் கவர்ச்சியான முகப்பைக் காட்டி உள்ளே ஈர்க்கிறது. யார் கொடக்கோனாரைக் கொலை செய்ய முயற்சி செய்தார்கள்? இந்த ஒற்றைப்புள்ளியிலிருந்து விரிகிறது அப்பணசாமியின் கதை அடுக்குகள். ஒன்றுக்குள்ளிருந்து ஒன்றாக, ஒன்றைப்போல மற்றொன்றில்லாத கதைகளும், மனிதர்களும் மாயம்போல வந்து கொண்டேயிருக்கிறார்கள். நாவலின் மையப்புள்ளி ஏகாம்பரம் முதலியார் ஜவுளிக்கடை. மெயின்ரோட்டில் இருக்கும் பெரிய கடைகளில் ஒன்றல்ல. மிகச்சிறிய பிளாட்பாரக்கடை. நாவலில் அந்த ஜவுளிக்கடை ஒரு கதாபாத்திரமாகிறது. அந்தக்கடையும் கடையில் இருக்கும் காடாத்துணிகளும், மல் பீஸுகளும் துணிகளை அடுக்கி வைத்திருக்கும் அட்டளைகளும் கதை சொல்கின்றன. மாற்றத்தின் வாசலில் நிற்கும் ஒரு சிறிய கரிசல் நகரத்தினைத் தன் சிறிய கண்களால் பார்க்கிறது ஏகாம்பரம் ஜவுளிக்கடை. மாற்றம் ஒரு குறளிவித்தைக்காரனைப்போல மெல்ல தன் மாயப்போர்வையால் நகரத்தை மூடித்திறக்கிறது. மில்களில் வேலை பார்க்கும் ஒரு புதிய நடுத்தரவர்க்கம் தோன்றுகிறது. தீப்பெட்டியாபீசுகளின் வழியாகவும் கந்தகநெடி வீசும் பணம் நகரத்தின் தெருக்களில் புழங்குகிறது. இந்த மாற்றத்தினால் சிறிய வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் கரிசல் கிராமங்களிலிருந்து வரும் வெள்ளந்தியான விவசாயிகள் சிறிய வியாபாரிகளைக் காப்பாற்றுகிறார்கள். எந்த சலனமும் இல்லாமல் மாற்றங்களைப் பார்த்துக் கொண்டேயிருப்பவராக ஏகாம்பரம் முதலியார் இருக்கிறார். மாற்றங்களின் மீது கருத்து சொல்பவராக அருணாசலம் நாடார் இருக்கிறார். இவர்களோடு ஆடுமாடு விற்பனைத்தரகு வேலை பார்க்கும் கொடக்கோனார் வேலையில்லாத நாட்களில் கடைத்திண்ணையில் வந்து உட்கார்ந்திருக்கிறார். இவர்கள் எல்லோருக்கும் ஒரு கதை இருக்கிறது. ஏகாம்பரம் முதலியாரின் கதை விசித்திரமானது. அதேபோல கொடக்கோனாரின் காதல்கதை.
நாவல் வரலாற்று நாவல் என்ற மாயக்காடாத்துணியை தன் மீது போர்த்தியிருக்கிறது. சுமார் முப்பது வருடங்களுக்கு முந்திய கதை. எம்.ஜி.ஆரின் உடல்நிலை பாதிப்படைந்த காலம். 1984-ஆம் ஆண்டு என்று குறிப்பாகக் கூடச்சொல்லலாம். அப்போதிருந்த சமூகமனநிலை. தார் ரோடு, பிளாஸ்டிக் கவர், உணவுகள், என்று புதிய மாற்றங்களை நோக்கி அந்தக்குறு நகரம் சாயத்தொடங்கிய காலம். ஆனால் இந்த வரலாற்று நாவலுக்குள் ஏகாம்பர முதலியாரின் கடையும் குடும்பமும், அவரது மகன்கள், பெரியவன், நடுவான், சின்னவன், அவர்களுடைய செயல்கள் என்று மையம் கொண்டுள்ளது. வியாபாரம் குறித்த சிறு விவரங்களும், துணி வாங்க வருபவர்களிடம் எப்படி அந்நியோன்யமாக பேசிப்பழகி வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்கிறார்கள். சின்னவனின் சேரிக்காதல், நடுவானின் வாசிப்பு, எழுத்து, என்று நாவல் விரிவாகப்பேசுகிறது. ஏன் மூத்த மருமகளின் சாமர்த்தியம் பற்றியும் ஓரிரு பக்கங்களில் சொல்லத்தான் செய்கிறது.
நாவலின் மிகமுக்கியமான அடுக்குகளே கடையோடு தொடர்புடைய மற்றவர்கள் தான். சின்னவனை அலைக்கழிக்கும் அந்தப்பெண். முன்பின் கொசுவம் வைத்த சேலை கட்டிய நாட்டுக்கட்டையான பெண் எப்போதும் சின்னவனை மோகத்தீயில் தள்ளி விட்டு சிரிக்கிறாள். அவளுடைய அருகாமையில் வெந்து தணியும் சின்னவனின் காதலோ மஞ்சள் மலரான இன்னொரு பெண்ணின் மீது விழுகிறது. சின்னவனின் சேக்காளியான கிழங்கானின் கதை வேறுமாதிரியானது. அவனுடைய அம்மாவிடம் சின்னவனும் பால் குடித்திருக்கிறான். தன் பில்ளைகள் போலவே அவனுக்கும் பாலமுது ஈந்துகிற அம்மாவின் முடிவு பரிதாபமானது. அவளுடைய கணவன் மாடக்கண்ணு ஆசாரி தொழில் கில்லாடி. ஒரு முறை வீழ்ந்து எழுகிறான். எப்போதும் உறக்கம், தீனி, சினிமா, என்றலையும் கோமளவண்ணன் என்ற கோவணாண்டி நாயக்கர் கலியாணம் முடித்தும் திருந்தவில்லை.
இந்த நாவலின் மிக முக்கியமான பகுதியாக கடலங்குடி ஜமீனைப்பற்றி வருகிற பகுதி என்று சொல்லலாம். சந்நதம் வந்து தன்னிலையறியாமல் எழுதியதைபோல மொழி தன் உச்சநிலையை அடைந்திருக்கிறது.
“ அவர் பாக்காத தங்கமில்லை. வைரம் வைடூரியம், கோமேதகம், பச்சை மரகதங்களிலேயே உருண்டு பிரண்டு வாழ்ந்தவர். எத்தனை சந்தோசமான வாழ்க்கை? எத்தனை சதிகளும், துரோகங்களும் நிரம்பியது அவர் வாழ்க்கை? நல்லவேளை. அவர் யாரிடமும் கையேந்தி யாசகம் கேக்கவில்லை. அப்படியே கெதி வாய்த்தாலும் அவர் கலங்கமாட்டார். யா அல்லா என்றபடி வானத்தைப் பார்த்துக் கையேந்துவார். இந்த வாழ்க்கை அவன் கொடுத்தது. இதை எப்போ எடுத்துக்கணும்னு அவனுக்குத் தெரியும். யா அல்லா! “
உமர்சாயபு கடலங்குடி வாப்பிசட்டப்பாவின் செல்லப்பேரன். வாப்பிச்சட்டப்பா உமரிடம் தூத்துக்குடிக் காயலில் தான் சம்பாத்தித்த நல்முத்துக்களைப்பற்றிச் சொல்கிறார். அதற்கு சீனர்களும், கிரேக்கர்களும் போட்டி போட்டு வாங்கிக் கொண்டு போனதைப்பற்றிச் சொல்கிறார். அரசியல் சூதாட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்தவுடன் முத்துக்குளிக்க கடுமையான வரி விதித்தான். வரிப்பணம் முத்துகளையே விழுங்கி ஏப்பமிட்டது. பலர் ஓட்டாண்டியானார்கள். வாப்பிசட்டப்பா தூத்துக்குடியிலிருந்து கடலங்குடி வந்து தன்னுடைய எல்லையை விஸ்தரித்துக்கொள்கிறார். எல்லையற்ற சொத்துகளை வைத்திருந்த வாப்பிச்சட்டப்பாவின் இறுதிக்காலம் துயரமானது. சொந்தங்களினால் துரோகிக்கப்பட்ட உமர்சாயபும் தலைச்சுமையாக துணி வியாபாரமே பார்க்கிறார். அவர்களுடைய குடும்பத்திலிருந்து ஒரு குழந்தை அருப்புக்கோட்டைக்கருகே நடந்த திருவிழாவில் காணாமல் போய்விடுகிறது. எங்கு தேடியு கிடைக்காத அந்தக்குழந்தையும் இப்போது துணிவியாபாரமே செய்து வருகிறது. வாழ்க்கை எத்தனை விசித்திரமானதாக இருக்கிறது.
தமிழ் நாவல்களின் மிகச்சிறந்த பக்கங்களோடு இந்தப்பகுதியும் மிகச்சுலபமாக இணைந்து கொள்ளும் அளவுக்கு செவ்வியல் தன்மையோடு இந்தப்பகுதி அமைந்துள்ளது. உமர்சாயபின் வாழ்க்கையில் காவியச்சாயல் படிந்துள்ளது.
ஒரு தீபாவளியை முன்வைத்தே கொடக்கோனார் கொலை வழக்கு நாவல் சுற்றிச் சுழல்கிறது. அந்தத் தீபாவளி முடிந்ததும் நாவலும் இயல்பாக ஒரு முடிவுக்கு வருகிறது. கொடக்கோனாரின் காதல், ஆணவக்கொலைகளின் ஆரம்பம், பிறந்த இடமும் மதமும் மாறி வேறொன்றாக மாறுகிற விந்தை. நாயகப்பிம்ப வழிபாட்டின் உச்சகாலம், என்று கதைகளைக் கலைத்துப்போட்டுக்கொண்டேயிருக்கிறார் நாவலாசிரியர் மு.அப்பணசாமி. பழைய வரலாற்றிலிருந்து சமகால வரலாற்றையும், சமகால வரலாற்றிலிருந்து பழைய வரலாற்றையும் விசாரணை செய்கிறார். எளிய மனிதர்களின் வாழ்வை ஊடறுத்துச் செல்லும் ஏராளமான கேள்விகளை வாசகர்களின் முன்வைக்கிறார்.
ஒரு கதைசொல்லியின் எளிமையுடன் வாச்கனின் தோளில் கைபோட்டுக் கொண்டு மிக நுட்பமான, ஆழமான அநுபவங்களைச் சொல்கிறார் நாவலாசிரியர் மு.அப்பணசாமி. கொடக்கோனார் கொலை வழக்கு நாவலின் அடுக்குகளில் இறங்குகிற உங்களுக்கு நாவல் ஒரு புதிய அநுபவம் தரும். கொடக்கோனார் கொலை வழக்கு நிறையப் புதிர்வழிகள் உள்ள நாவல். வாசகர்களுக்கு புதிர்களுக்கு விடைகளைக் கண்டுபிடிக்கும் பரவச உணர்வைத் தருகின்ற நாவலும் கூட. தமிழ் நாவல்பரப்பில் கொடக்கோனார் கொலைவழக்கு மிக எளிதாக தன்னுடைய இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் என்பதில் ஐயமில்லை.
நன்றி - விகடன் டாட் காம்





1 comment:

  1. தங்களின் விமர்சனம் நூலினைப் படிக்கத் தூண்டுகிறது ஐயா
    நன்றி

    ReplyDelete