Friday 24 August 2012

தீண்டாமையின் அர்த்தவிநோதங்கள்

 an_untitled_portrait_modern_art  

உதயசங்கர்

 

தீண்டாமை என்ற சொல் அதனுடைய எதிர்வான தீண்டுதலையும் உள்ளடக்கியே இருக்கிறது. அதே போல பருப்பொருளாகத் தீண்டப்பட முடியாதவையெல்லாம் தீண்டாமை என்ற அர்த்தத்துக்குள் அடங்குவதுமில்லை. உதாரணமாக வெளி, காலம், போன்ற கருத்துருக்களும் அன்பு, காதல், போன்ற குணநலன்களும் பருண்மையாகத் தீண்டப்பட முடியாதாவை. சமூகத்தின் விதிமுறைகளின் படி எதிர்பாலினத்தை, ஆண் பெண்ணையோ, பெண் ஆணையோ திருமணச்சடங்குகளின்றி தீண்ட முடியாது. அதே போல அடுத்தவர் மனைவியையோ, கணவனையோ சமூகக்கட்டுப்பாட்டின் படி தீண்ட முடியாது. ஆனால் இவையெல்லாம் தீண்டாமை என்ற அர்த்தத்துக்குள் வருவதில்லை. ஆக தீண்டாமையும் அதன் எதிர்வான தீண்டுதலும் வேறொரு எதிரிணைவையும் கொண்டு வருகிறது. சுத்தம் எதிர்வு அசுத்தம், அல்லது தூய்மை எதிர்வு தூய்மையின்மை என்ற சொல்லாடலையும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

தீட்டு தூய்மையின்மையையும் அதைக் கழிக்கும் சடங்கு தூய்மையையும் பிரதிநிதித்துவப்படுத்துவால் தற்காலிகத் தீண்டாமையாகத் தீட்டைக் கருதுகிறார்கள். தீட்டுச் சடங்கு முடிந்த பிறகு குளித்து உடலைத் தூய்மை செய்த பின்னர் அந்தத் தற்காலிகத் தீண்டாமை மறைந்து விடுகிறது. அந்தச் சடங்கைச் செய்யும் பிராமணரும் அந்தச் சடங்கு முடிந்த பின்னர் அந்த வீட்டிலிருந்த தீட்டை ஏற்றுக் கொண்டு அவரும் தீட்டாகி விடுகிறார். அவரும் குளித்த பிறகே தற்காலிகத் தீண்டாமையிலிருந்து விடுவிக்கப்படுகிறார். வருணாசிரமப் படிநிலையிலிருக்கும் அனைத்துச் சாதியினரும் இந்தத் தற்காலிகத் தீண்டாமைக்கு ஆளாகின்றனர். தூய்மை, தூய்மையின்மை, என்ற கருத்தாக்கங்களின் வழி ஆன்மிக அதிகாரத்திலிருக்கும் பிராமணியம் இந்தத் தற்காலிகத் தீண்டாமையை எல்லோருக்கும் விதிக்கிறது.

எனவே தீண்டாமை என்பது பிராமணியத்தின் அடிப்படையாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பிராமணியம் தன்னுடைய அடிப்படைப் பண்பான தீண்டாமையை அனைத்து சாதியினரையும் பின்பற்ற வைத்ததில் பெற்ற வெற்றியே இன்று வரை பிராமணியத்தை ஆன்மீக அதிகாரத்தில் வீற்றிருக்க வைத்திருக்கிறது. தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் தீண்டாமையை வாழ்வின் ஆதார நிகழ்வுகளுடன் பிறப்பு, இறப்பு, திருமணம், எல்லாவற்றுடனும் இணைத்து என்றென்றும் தன் நிலையை அசையாமல் இருக்க வழி வகை செய்துள்ளது. இதற்குள் இருக்கும் பொருளாதாரப்படிநிலையினையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். உழைக்கும் வர்க்கமான தலித்துகளை நிரந்தரத்தீண்டாமை நிலையில் வைப்பதன் மூலமும், அதற்கான அங்கீகாரத்தை மற்றெல்லாசாதியினரிடமிருந்தும் பெறுவதன் மூலமும் முடிவில்லாத உழைப்புச் சுரண்டலை பிராமணியம் உத்தரவாதப்படுத்தியிருக்கிறது. அசுத்தமான (?) வேலைகளைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட தலித்துகளை அந்த வேலைகளைக் காட்டியே தீண்டத் தகாதவர்களாக மாற்றியிருப்பது என்பது பிராமணியத் தந்திரமன்றி வேறென்ன? இதற்கான ஒப்புதலை மற்ற சாதியினரிடமிருந்து பெறுவதற்காகவே தீட்டு என்ற தற்காலிகத் தீண்டாமை என்று கருத இடமுண்டு. ஏனெனில் அசுத்தத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தி விட்டால் தீட்டு கழிந்து எல்லாப்பொருட்களையும், எல்லாமனிதர்களையும் தீண்ட முடியும் என்ற கருத்தியலையும் நடைமுறைப்படுத்தியதால், தற்காலிகமான தூய்மையின்மையை சடங்குகளின் மூலம் உடனடியாகத் தூய்மைப்படுத்தி விடலாம், ஆனால் நிரந்தமான தூய்மையின்மையை எந்தச் சடங்கின் மூலமும் தூய்மைப்படுத்த முடியாது. உண்மையில் அப்படி எந்தச் சடங்கும் தீண்டத்தகாதவர்களுக்கு இல்லை. எனவே அவர்கள் நிரந்தரமாகத் தீண்டத்தகாதவர்கள். தர்க்கபூர்வமாக எல்லா சாதியினரும் இந்தக் கருத்தியலுக்கு வந்து சேரும் வகையில் மனுதர்மசாஸ்திரத்தைக் கட்டமைத்திருக்கிறது.

சாதியப்படிநிலையில் கீழ்நிலையில் இருக்கும் தலித்துகளைப் போல சாதியப்படிநிலையில் மேல் நிலையில் இருக்கும் பிராமணரும் தீண்டத்தகாதவரே. அவரும் பிற சாதியினரைத் தீண்ட முடியாது. பிற சாதியினரும் அவரைத் தீண்ட முடியாது. அப்படி யாரையேனும் அவர் தீண்டி விட்டாலோ, அல்லது அவரை யாரேனும் தீண்டி விட்டாலோ அவர் தீட்டாகி விடுகிறார். அவர் குளித்தபிறகே அவருடைய மடி நீங்குகிறது. ஆனால் அவரைத் தீண்டியவர்கள் தீட்டாவதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். அவர்கள் குளித்து தீட்டைக் கழிக்க வேண்டியதில்லை. இது அப்படியே தலைகீழாக தலித்துகளிடம் நிகழ்கிறது. தீண்டத்தகாதவர் மற்றவர்களைத் தொட்டு விட்டாலோ அல்லது மற்றவர்கள் அவர்களைத் தொட்டு விட்டாலோ தீண்டத்தகாதவர் தீட்டாவதில்லை. அவர்கள் குளித்து மற்றவர்கள் தீண்டிய தீட்டைக் கழிப்பதில்லை. ஆனால் அவரைத் தொட்டவர்கள் அல்லது அவரால் தொடப்பட்டவர்கள் தீட்டாகி விடுகிறார்கள். அவர்கள் குளித்து தங்களுடைய தீட்டைக் கழிக்கிறார்கள். இரண்டு நிலைகளில் இருக்கும் தீண்டத்தகாதவர்களில் எவ்வளவு மாறுபாடு? மேல்நிலையிலுள்ள பிராமணர் தீண்டத்தகாதவரேயாயினும் அவர் தீண்டியதற்காக அல்லது அவரைத் தீண்டியதற்காக மற்றவர்கள் குளிப்பதில்லை. ஆனால் அவர் குளிக்கிறார். அதே போல கீழ்நிலையில் வைக்கப்பட்ட தீண்டத்தகாதவர் மற்றவர்களைத் தீண்டியதற்காகவோ, அல்லது தீண்டப்பட்டதற்காகவோ அவர் குளிப்பதில்லை, ஆனால் மற்றவர்கள் குளிக்கிறார்கள். ஏனெனில் மேல்நிலையில் உள்ள தீண்டத்தகாதவரிடம் ( பிராமணரிடம் ) ஆன்மீக அதிகாரம் இருக்கிறது. எனவே அவர் தீண்டத்தகாதவராக இருப்பதற்காக பெருமைப்படுகிறார். மற்றவர்களையும் அவர் தீண்டத்தகாதவராக இருப்பதற்காகப் பெருமைப்பட வைக்கிறார். ஆனால் கீழ்நிலையில் உள்ள தீண்டத்தகாதவரிடம் இழிவும் அவமானமும் மட்டுமே இருக்கின்றன.

ஆக ஒரே செயலை முற்றிலும் வேறுபட்ட இரண்டு எதிர்நிலைகளில் செயல்பட வைப்பதில் பிராமணியமும், மனுதர்மமும் வெற்றி பெற்றிருக்கின்றன. தீண்டாமையை ஒழிக்க வேண்டுமென்றால் நாம் கேள்வி முறையின்றி கடைப்பிடித்து வரும் சடங்குகளை ஒழிக்க வேண்டும். மனுதர்மசாஸ்திரத்தை ஒழிக்க வேண்டும். பிராமணியத்தை ஒழிக்க வேண்டும். அப்போது தான் முழுமையான மனித விடுதலை சாத்தியமாகும்.

DSC01492

No comments:

Post a Comment